யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இலவச ரீசார்ஜ் குறித்த போலி லிங்கை ஓபன் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, மூன்று லட்சத்துக்கு மேல் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பரவிய செய்தி
🏆 INDIA WIN 2025 ICC TROPHY 🏆 2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் ரூ. 749 அனைத்து இந்தியர்களுக்கும். இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே https://icc-25-offers.blogspot.com/.

வாட்சாப் பதிவு
விரிவான விளக்கம்
சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் “இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜாக ரூ. 749 - ஐ அனைத்து இந்தியர்களுக்கும் கொடுக்கிறது. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே” என்று குறிப்பிட்டு https://icc-25-offers.blogspot.com/ என்ற இணையதள முகவரி ஒன்று வாட்சாப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகப் பக்கங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.
*🏆 INDIA WIN 2025 ICC TROPHY 🏆*
#இந்த ஆரம்பிச்சிட்டாங்க
2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் ரூ. அனைத்து இந்தியர்களுக்கும் 749.
இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே

உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ய, உண்மையில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜாக ரூ. 749 - ஐ அனைத்து இந்தியர்களுக்கும் அறிவித்துள்ளதா என்பது குறித்து தேடியதில், இது குறித்த எந்த அறிவிப்புகளும் இல்லை.
மேலும் பரவி வரும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியை கிளிக் செய்த போது, “வலைப்பதிவு அகற்றப்பட்டது. மன்னிக்கவும், icc-25-offers.blogspot.com இல் உள்ள வலைப்பதிவு நீக்கப்பட்டுள்ளது.” என்ற பதில் கிடைத்தது.

சமூக ஊடகங்களில் இது போன்ற வேறு சில பதிவுகளில், “https://indwinner2-25.blogspot.com/” என்ற மற்றொரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்த போதும், “மன்னிக்கவும், indwinner2-25.blogspot.com இல் உள்ள வலைப்பதிவு நீக்கப்பட்டுள்ளது” என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பரவி வரும் செய்திகள் போலியானவை என்பது உறுதியானது. மேலும் இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வென்றதை கொண்டாடும் விதமாக 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் என்ற பெயரில் பெரும் மோசடி நடைபெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இலவச ரீசார்ஜ் குறித்த போலி லிங்கை ஓபன் செய்த 100-க்கும் மேற்பட்டவர்களின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, மூன்று லட்சத்துக்கு மேல் அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் இதுபோன்ற லிங்கை தொட வேண்டாம்” என்று கூறி எச்சரித்துள்ளனர் என்பதை தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது.
எனவே இது போன்ற மோசடிகளில் பொதுமக்கள் பணத்தை இழந்திருந்தால், "1930" என்ற "சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்" மூலமாகவோ, www.cybercrime.gov.in இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலியான ஃபிஷிங் இணையதளங்களை தவிர்ப்பதும் நல்லது.
முடிவு:
நம் தேடலில், இந்தியாவின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் வெற்றியைக் கொண்டாட, அனைத்து இந்தியர்களுக்கும் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசாஜ் அறிவித்துள்ளது எனப் பரவும் செய்திகள் போலியானவை என்பதை அறிய முடிகிறது.