யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடிகர் விஜயைப் போன்றே ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
நடிகர் விஜய்க்கே டஃப் கொடுத்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண்ஜியின் நோன்பு திறக்கும் காட்சி .. நல்ல நடிக்கிறீங்கடா..

விரிவான விளக்கம்
சமீபத்தில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் விஜயைப் போன்றே ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நடிகர் விஜய்க்கே டஃப் கொடுத்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண்ஜியின் நோன்பு திறக்கும் காட்சி ..
நல்ல நடிக்கிறீங்கடா pic.twitter.com/GpuMeIsQwF
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2019-ல் இருந்தே பல யூடியூப் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தது.
“NTV Telugu” யூடியூப் பக்கத்தில் “ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் குண்டூர் கிழக்குத் தொகுதியில் வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்குவருகை“ என்ற தலைப்பில் கடந்த 2019 மார்ச் 25 அன்று சமூக ஊடகங்களில் பரவி வரும் இதே வீடியோ பதிவிடப்பட்டிருந்தது.
NTK Telugu வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம், ஜன சேனா கட்சி சார்பாக, போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை ஆதரித்து, பவன் கல்யாண் பிரசாரம் மேற்கொண்டார். மேலும், அந்த வேட்பாளரின் வீட்டிற்கு சென்று, பவன் கல்யாண் மதிய உணவு சாப்பிட்டார் என்பதை அறிய முடிகிறது.
இதே போன்று, “The Hans India” பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலும், “2019 பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால், ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, குண்டூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தில் பங்கேற்றார். பிரச்சாரத்தின் போது, அவர் ஜன சேனா எம்எல்ஏ வேட்பாளர் ஷேக் ஜியா உர் ரஹ்மானின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில், ரஹ்மானின் தாயார் புனித நூலான குர்ஆனைப் படித்துள்ளார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
நம் தேடலில், நடிகர் விஜயைப் போன்றே ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் நோன்பு திறக்கும் காட்சி எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பது தெளிவாகிறது.