யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜெயப்பிரகாஷ் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாயில் கதவைத் தாண்டி சென்று அகிலேஷ் யாதவ் 2023ம் ஆண்டு மரியாதை செலுத்தியதைத் தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
சமாஜ்வாதி கட்சித் தலைவன் நபாப் சிங் யாதவ் மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தது DNA சோதனையில் உறுதி செய்யானதையடுத்து பல்வேறு சேனல்கள் அகிலேஷ் யாதவை சூழ்ந்து கேள்வி கேட்டனர் பதில் சொல்ல முடியாமல் சுவர் ஏறி குதித்து ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டான்

விரிவான விளக்கம்
உத்தரப் பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த நவாப் சிங் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவிடம் செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டபோது அவர் சுவர் ஏறிக் குதித்துத் தப்பிச் சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடியதில், இது 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சம்பவம் என்பதை அறியமுடிந்தது.
லக்னோவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நினைவாக 'ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையம்' (JPNIC) 2016ஆம் ஆண்டு அப்போதைய உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அவர்களால் நிறுவப்பட்டது. அங்கே ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சிலையும் உள்ளது.
அச்சிலைக்கு ஆண்டுதோறும் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் பிறந்தநாளான அக்டோபர் 11ஆம் தேதி மலர்தூவி மரியாதை செலுத்துவதை அகிலேஷ் யாதவ் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அப்படி 2023ஆம் ஆண்டு மரியாதை செலுத்தச் சென்றபோது ஜெபிஎன்ஐசி (JPNIC) மையத்தில் பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி, அகிலேஷ் யாதவ் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்போது வாயில் கதவைத் தாண்டி குதித்து ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிலைக்கு அகிலேஷ் மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது பரவுகிறது.
இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அகிலேஷ் யாதவின் எக்ஸ் பக்கத்தில் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ‘The Economic Times’, ‘ANI’ போன்ற ஊடகங்களில் வீடியோவுடன் செய்திகள் வெளியாகியுள்ளது. ’Indian Express’, ‘Etv Bharat’ போன்ற தளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை நவாப் சிங் யாதவ் மீதான பாலியல் வழக்குடன் தொடர்புப்படுத்தி தவறான தகவலைப் பரப்புகின்றனர்.
முடிவு:
2023, அக்டோபர் மாதம் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளில் JPNIC-ல் உள்ள அவரது சிலைக்கு அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது அவர் வாயில் கதவைத் தாண்டி சென்று மரியாதை செலுத்தினார். அந்த வீடியோவை நவாப் சிங் யாதவ் மீதான பாலியல் வழக்குடன் தொடர்புப்படுத்தி தவறான தகவலைப் பரப்புகின்றனர்.