யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், சித்தன்கொல்லாவைச் சேர்ந்த சிவகுமார் என்ற சாமியாரின் பாதங்களில் விழுந்து வணங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று திரித்து பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
பணத்திற்கு முன் சட்டமே அடிமை. விட்டால் அங்கேயே சட்டையை கழட்டிபோட்டுட்டு முட்டிபோட்டிடுவானுங்கபோல..
விரிவான விளக்கம்
பணத்திற்கு முன் சட்டமே அடிமை என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் காரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் காலில் 6 காவலர்கள் விழுந்து வணங்குவதையும், பின் அவரிடம் பணம் வாங்குவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோ குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப்பார்த்த போது, Kannada Asianetnews பக்கத்தில், பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு மார்ச் 15, 2025 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், சித்தன்கொல்லாவைச் சேர்ந்த சிவகுமார் என்ற சாமியாரின் பாதங்களில் விழுந்து வணங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ இது. வீடியோ வைரலானதை அடுத்து ASI டி.ஜே. சிவபுரா பாகல்கோட் கிராமப்புற காவல் நிலையத்திற்கும், நாகராஜ் அன்கோல் பிலாகி காவல் நிலையத்திற்கும், ஜி.பி. அங்காடி இலகல் நகர் காவல் நிலையத்திற்கும், ரமேஷ் இலகேராவை பாகல்கோட் கிராமப்புற காவல் நிலையத்திற்கும், ரமேஷ் ஹுல்லூரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று பரவி வரும் வீடியோ குறித்து தி இந்து ஊடகப் பக்கத்திலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பாதாமிக்கு அருகிலுள்ள பனசங்கரி கோயில் அருகே பணியில் இருக்கும் சீருடை அணிந்த காவல்துறையினரின் இந்த காணொளி வைரலானதை அடுத்து, பாகல்கோட் காவல் கண்காணிப்பாளர் அமர்நாத் ரெட்டி, கடமையில் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு குற்றச்சாட்டின் பேரில் ஆறு காவல் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்துள்ளார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பாதாமி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறையினர், சித்தன்கொல்லாவைச் சேர்ந்த சிவகுமார் என்ற சாமியாரின் பாதங்களில் விழுந்து வணங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை, தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர் என்பது தெளிவாகிறது.
முடிவு:
நம் தேடலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவலர்களின் செயலைப் பாருங்கள், பணத்தின் முன் சட்டமே அடிமை என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.