யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
குஜராத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றது என்று கனிமொழி கூறியது சரியான தகவல் தான்.
பரவிய செய்தி
குஜராத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளதாக பொய்யைக் கூறி மாட்டிக்கொண்ட கனிமொழி!

விரிவான விளக்கம்
சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கனிமொழி கருணாநிதி அவர்கள், ‘குஜராத் மாநிலத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன’ என்று அம்மாநிலத்தில் அரசு மருத்துவ கட்டமைப்பு வலுவாக இல்லாத நிலையை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில், கனிமொழி பேசிய அந்த வீடியோவை குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ’எக்ஸ்’ பக்கத்தில், குஜராத்தில் எத்தனை அரசு மருத்துவ கல்லூரி இருக்கிறது என்று செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திடம் கேட்டதாகவும், அதற்கு அது AIIMS உட்பட 24 அரசு மருத்துவமனைகள் இருப்பதாக பதிலளித்ததையும் குறிப்பிட்டு, கனிமொழி பொய்யான தகவலை மேடையில் பேசியதாக பரப்பி வருகின்றனர்.
குஜராத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளதாக பொய்யைக் கூறி மாட்டிக்கொண்ட கனிமொழி! pic.twitter.com/3vbXoFeOJu
உண்மை என்ன?
குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கைகள் குறித்து இணையத்துல் தேடினோம். ’THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளத்தில் 2024 மார்ச் மாதம் வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.

அதில், குஜராத் சட்டமன்றத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமித் சாவ்தா எழுப்பிய கேள்விக்கு எழுதப்பூர்வ பதிலளித்த பாஜக அரசாங்கம், ‘குஜராத் மாநிலத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே செயல்பட்டு வருவதாக’ ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், 1995ஆம் ஆண்டிற்கு பின்னர் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படவே இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது.
மேலும் 2022, 2023 நிதியாண்டுகளில் கூட அரசு மருத்துவக் கல்லூரி புதிதாக திறக்கப்படுவதற்கான அனுமதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதேவேளையில், 2023 நிதியாண்டில் 4 தனியார் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு அனுமதியளித்துள்ளது அரசாங்கம்.

‘The Times of India’ செய்தித்தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, 6 அரசு மருத்துவக் கல்லூரிகள், 13 GMERS மருத்துவக் கல்லூரிகள், ஒரு AIIMS மருத்துவமனை, 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதில், GMERS மருத்துவக் கல்லூரிகள் என்பவை, அரசு மருத்துவ கல்லூரிகள் அல்ல. இவை அரசு கட்டுப்பாட்டில் இயங்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள். இங்கு அனைத்து சேர்க்கைகளும் மத்திய சேர்க்கைக் குழு (Central Admission Committee) மூலமும், தகுதி (merit) அடிப்படையிலும் நடைபெறுகின்றன.
குஜராத்தில் வல்சத் என்ற நகரத்தில் உள்ள GMERS மருத்துவக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான MBBS முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, Government Quota-ல் 3,75,000 ரூபாய் ஆகும், Management Quota-ல் 12,00,000 ரூபாய் ஆகும். NRI என்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு கட்டணமாக 25,000 டாலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள விவரங்களிலிருந்து, குஜராத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றது என்று கனிமொழி பேசிய சரியானது தான் என்பது நிரூபணமாகிறது. மேலும், செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பத்தை கொண்டு ஒரு தகவலை சரி பார்க்க முடியாது, அதில் பல சிக்கல்கள் இருக்கின்றது என்பதை விளக்கி ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
முடிவு:
குஜராத்தில் 6 அரசு மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருக்கின்றது என்று கனிமொழி கூறியது சரியான தகவல் தான். ஒன்றியத்திலும், குஜராத் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக தனது சொந்த அரசாங்கத்தின் தரவுகளை நம்பாமல் AI-யை சார்ந்திருப்பது துயரமானது.