YouTurn

WEF அறிக்கை: பொய் செய்திகள் அச்சுறுத்தலில் இந்தியா முதலிடம் !

WEF அறிக்கை: பொய் செய்திகள் அச்சுறுத்தலில் இந்தியா முதலிடம் !
கடந்த ஜனவரி 10 அன்று World Economic Forum, வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, புவி வெப்பமயமாதல் மற்றும் நாடுகளுக்கிடையே ஏற்படும் போர்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளிலும், அடுத்த பத்து ஆண்டுகளிலும் நாம் எதிர்கொள்ளக்கூடிய மிகக் கடுமையான அபாயங்கள் என்னென்ன என்பதை விளக்கும் வகையில் "உலகளாவிய அபாயங்கள் குறித்த அறிக்கை 2024" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த அறிக்கையில், தவறான தகவல்களை பரப்புதல், தீவிர வானிலை நிகழ்வுகள், சமூக அமைப்பு, சைபர் பாதுகாப்பின்மை, மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத மோதல், பொருளாதாரத்தில் வாய்ப்பு இல்லாமை, வேலைவாய்ப்பின்மை, கடன் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை போன்ற 34 விதமான உலகளாவிய அபாயங்கள் பற்றி ஆராய்ந்து பேசப்பட்டுள்ளன.



இதில், குறுகிய காலத்தில் (Short Term) இரண்டு ஆண்டுகளுக்குள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயங்களின் வரிசையில், "தவறான தகவல்களை பரப்புதல்" முதலிடத்தில் உள்ளது. இதே போன்று அடுத்த பத்து வருடங்களுக்குள் (Long Term) அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயங்களின் வரிசையில், "தீவிர வானிலை நிகழ்வுகள்" முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் வருங்காலங்களிலும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை அறிய முடிகிறது.



கடந்த 2023 அறிக்கையில், அபாயங்களின் தரவரிசையில் 15 வது இடத்தில் இருந்த "தவறான தகவல்களை பரப்புதல் " தற்போதைய அறிக்கையில் "முதல் இடத்திற்கு" முன்னேறியுள்ளதையும் காணும் போது, தவறான தகவல்கள் அபிரிவிதமான வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதை உறுதி செய்ய முடிகிறது.

தவறான தகவல்களை பரப்பும் நாடுகளில் முதலிடத்தில் உள்ள இந்தியா :

World Economic Forum வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், உலகளவில் தவறான தகவல்களை அதிகமாக பரப்புவதால் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் உலகநாடுகளின் தரவரிசையில், இந்தியா முதலிடத்தில் இருப்பது மிகவும் அதிர்ச்சிகரமான தகவலாகும்.



மேலும் இந்த அறிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல பொருளாதார நாடுகளில், இது தேர்தல் செயல்முறைகளையே தீவிரமாக சீர்குலைக்கலாம். குறிப்பாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் வங்கதேசம், இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சுமார் மூன்று பில்லியன் மக்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது உள்நாட்டு அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டக்கூடியதாக இருக்கும். மேலும் தவறான தகவல்களின் பெருக்கத்தால் ஏற்படும் அபாயங்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்ய ஆரம்பிப்பதால், அடக்குமுறைகள் அதிகரிப்பும், உரிமைகள் பறிக்கப்படும் நிலையும் ஏற்படும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.



இந்தியாவில் முதல் ஐந்து வரிசையில் உள்ள அபாயங்களும் இந்த அறிக்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் முதல் இடத்தில் தவறான தகவல்களை பரப்புவதும், இடண்டாவது இடத்தில் தொற்றுநோயால் ஏற்படுத்தப்படும் அபாயங்களும், அடுத்ததாக சட்டவிரோத பொருளாதார நடவடிக்கையும், வருமானத்தில் சமத்துவமின்மையும், தொழிலாளர் பற்றாக்குறையும் இடம்பெற்றுள்ளன.



அபாயங்களின் பட்டியலில் இடம்பெற்ற AI தொழில்நுட்பம் :

உலகளவில் அதிக அபாயங்களை ஏற்படுத்தும் பட்டியலில், AI தொழில்நுட்பமும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. மேம்பட்ட Al தொழில்நுட்பம் மூலம், வரும் ஆண்டுகளில் பொருளாதாரங்களையும், சமூகங்களையும் தீவிரமாக மறுவடிவமைக்க முடியும் என்றும், குவாண்டம் கம்ப்யூட்டிங் முதல் செயற்கை உயிரியல் வரையிலான பிற தொழில்நுட்பங்களில் கூட AI-ஆல் தொடர்பு கொள்ள முடியும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.



ஆதாரங்கள்:

Global Risks 2024: Disinformation Tops Global Risks 2024 as Environmental Threats Intensify


World Economic Forum: Global Risks 2024

World Ranking: Where False Information Is Posing the Biggest Threat
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை