வக்ஃப் திருத்த மசோதா 2025 - ஒரு பார்வை!
இந்த சட்டத் திருத்த மசோதா, வக்ஃப் வாரியத்தைப் பாதிப்பதாகவும், வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது.
ஏப்ரல் 4ஆம் தேதி அதிகாலையில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு வக்ஃப் (திருத்த) மசோதா 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் 128 MP-கள் ஆதரவாகவும் 95 MP-கள் எதிராகவும் வாக்களித்தனர். மக்களவையில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 288 MP-களும் எதிராக 232 MP-களும் வாக்களித்தனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இந்த மசோதா ’அரசியலமைப்பிற்கு எதிரானது’ என்றும் ’இந்த நாள் ஜனநாயகத்திற்குக் கருப்பு நாள்’ என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் விமர்சிக்கப்பட்டது.

‘வகுஃபா’ என்ற அரேபியச் சொல்லிலிருந்து வந்ததுதான் ’வக்ஃப்’. ’வக்ஃப்’ என்பது இஸ்லாமிய விதிகளின் படி தனிநபர் ஒருவர் மதத்திற்காக அல்லது தொண்டு மனப்பான்மையுடன் அளிக்கும் நன்கொடையைக் குறிப்பதாகும்.
இந்தியாவில் காலனிய காலத்திற்கு முன்பாகவே இஸ்லாமிய ஆட்சியாளர்கள், பெரும் பணக்காரர்கள் ’வக்ஃப்’ அடிப்படையில் நன்கொடைகள் வழங்கியுள்ளனர். ஆனால் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான நீதி பரிபாலன முறை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது ’வக்ஃப்’ சொத்துக்களை நிர்வாகம் செய்யத் தெளிவாகச் சட்ட வரையறை தேவைப்பட்டது. ஆனால் இந்த விரிவான வரையறை வழங்குவதற்காக 1954ஆம் ஆண்டுதான் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர், இந்த சட்டம் 1995 வக்ஃப் சட்டத்தால் மாற்றீடு செய்யப்பட்டது. இந்த 1995 வக்ஃப் சட்டத்தில் தான் தற்போது பாஜக அரசு திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறது.

மிக முக்கியமாக இந்த சட்டத் திருத்த மசோதா, வக்ஃப் வாரியத்தைப் பாதிப்பதாகவும், வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த மசோதா அறிமுகப்படுத்தியுள்ள முக்கிய திருத்தங்களையும் அதன் விளைவுகளையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வக்ஃப் சட்டத்தின் பிரிவு 40, ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது சர்ச்சை எழும்போது, அந்த சொத்து வக்ஃப் வாரியத்திற்குச் சொந்தமானதா அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமானதா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை வக்ஃப் வாரியத்திற்கு வழங்குகிறது. இந்த பிரிவைப் பயன்படுத்தி தங்கள் விருப்பப்படி தனியார் சொத்துகளை வக்ஃப் வாரியம் அபகரித்துக் கொள்வதாகத் தவறான கருத்துகள் இணையத்தில் பரப்பப்படுகிறது.
ஆனால் ‘வக்ஃப் வாரியம்’ தன்னிச்சையாக எந்தவொரு சொத்தையும் இவ்வாறு சொந்தமாக்கிக்கொள்ள முடியாது. சர்ச்சைக்குரிய சொத்து பற்றி வழக்கில் ‘வக்ஃப் தீர்ப்பாயம்’ என்று சொல்லக்கூடிய ‘Waqf Tribunal’ தான் இறுதித் தீர்ப்பை வழங்கும். இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை அந்த சொத்து வக்ஃப் வாரியத்திடம் தான் இருக்கும். தீர்ப்பில் அது பிறருக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சொந்தமானதாக அறிவிக்கப்பட்டால், அது வக்ஃப் வாரியத்திடம் இருந்து கைமாற்றி அளிக்கப்படும்.

ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தின் படி, சர்ச்சைக்குரிய சொத்தின் மீதான இறுதித் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் ‘வக்ஃப் தீர்ப்பாயத்திடமிருந்து பறிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு சொத்து அரசாங்கத்தினுடையது என்ற சர்ச்சை எழுந்தால், அந்த சொத்து இடம்பெற்றுள்ள பகுதிக்கு உட்பட்ட ஆட்சியர் அதனை விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆட்சியர் தான் சொத்தின் மீதான இறுதித் தீர்ப்பை வழங்க முடியும். தீர்ப்பு வரும் வரை சொந்து முந்தைய சட்டத்திலிருந்தது போல் வக்ஃப் வாரியத்திடம் இருக்காது.
இந்த பிரிவைப் பயன்படுத்தி முஸ்லீம்களின் வழிபாட்டு இடங்கள் பறிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஏனெனில் ஏற்கனவே மசூதிகளை கைபற்றும் வேலைகளை இந்துத்துவ சக்திகள் இந்தியா முழுவதும் பல இடங்களில் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி வக்ஃப் வாரியம் சம்பந்தமாக மட்டும் மசூதிகள், தர்காக்கள், கல்லறைகள் என 123 இடங்கள் சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. இவையெல்லாம் வக்ஃப் வாரியத்திடமிருந்து பறிக்கப்பட்டால் இஸ்லாமியர்களின் மத வழிபாட்டு இடங்கள் பறிபோகும் அபாயம் இருக்கிறது. அதோடு இந்த சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த 6 மாதங்களுக்கு வக்ஃப் சொத்துகள் பற்றிய முழு விவரங்களையும் அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், வக்ஃப் வாரியம் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வரும் நிலத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது என்று மற்றொரு சட்டத்திருத்தம் சொல்கிறது. வக்ஃப் வாரியத்திடம் இருக்கும் நிறைய சொத்துகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில், வக்ஃப் பெரும்பாலும் வாய் மொழியாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், வக்ஃப் வாரியத்தால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் இடத்திற்குச் சரியான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், அது வக்ஃப் வாரியத்திற்கே கொடுக்கப்படும் முறை பழைய சட்டத்திலிருந்தது. அதனை இந்த சட்டத் திருத்தம் ஒழித்துவிட்டது.
மேலும் வக்ஃப் சொத்துகளைக் கணக்கெடுக்கும் (survey) பணிக்கு இதுவரை மாநில அரசால் நியமிக்கப்பட்டு வந்த ஆணையருக்கும் பதிலாக ஆட்சியர் அல்லது துணைநிலை ஆட்சியர் பதவிக்கு மேலான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் உள்ள வக்ஃப் வாரியங்களில் இரண்டு முஸ்லீம் அல்லாத நபர்களைக் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பிற்கு விரோதமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அரசியலமைப்பின் சரத்து 26, ஒவ்வொரு மதமும் தங்களுக்கான மத நிறுவனங்கள், கொடை நிறுவனங்கள் ஆகியவற்றை அமைத்து நடத்த அனுமதி அளிக்கிறது. இந்நிலையில் வக்ஃப் வாரியத்தில் இரண்டு முஸ்லீம் அல்லாத நபர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பது முஸ்லீம்களின் சுதந்திரமான மத நிர்வாகத்தில் தலையிடுவதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றிய நபர்கள் மட்டுமே வக்ஃப் கொடை கொடுக்கமுடியும் என்று சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தனிநபர் தனது மதத்தைப் பின்பற்றுவதை எதைக் கொண்டு ஒரு அரசாங்கம் அளவிடும் என்றும் அவ்வாறு தனிநபர் மதச் சுதந்திரத்தில் தலையிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது.
இவ்வாறு முஸ்லீம்களுக்கு விரோதமாகவும், அரசியலமைப்பிற்கு எதிராகவும் இருக்கும் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் போவதாக திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்கின்றன.