பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகை கேட்கும் ஒன்றிய அரசு! ஒரு முழுமையான பார்வை.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிலச்சரிவின் பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத ஒரு மாநிலத்திடம், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகையை கேட்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
2006 முதல் செப்டம்பர் 2024 வரையுள்ள காலத்தில் கேரளாவில் ஏற்பட்ட பேரிடர்களின் போது இந்திய விமானப்படையால் (IAF) மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகை ₹132.61 கோடியை செலுத்துமாறு அக்டோபர் 22 அன்று கேரள அரசை பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியது. இது பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது. ஒன்றிய அரசு எதன் அடிப்படையில் பேரிடர்களின் போது மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு பணம் கேட்கிறது? எதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளால் இது எதிர்க்கப்படுகிறது? என்பதை புரிந்துகொள்ள வயநாடு பேரிடரின் தன்மையையும், பின்னணியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

2024 ஜூலை 30 அன்று அதிகாலையில் ஏற்பட்ட மூன்று தொடர்ச்சியான நிலச்சரிவுகளால் கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை என்னும் சிறிய கிராமமும், அதன் அருகிலுள்ள கிராமங்களான புஞ்சிரிமட்டம், சூரல்மலா மற்றும் அட்டமலா ஆகியவை நாசமானது.
நாட்டையே உலுக்கிய இந்த இயற்கைப் பேரிடரில் அதிகாரப்பூர்வமாக 250 மக்கள் இறந்ததாகவும், அதிகாரப்பூர்மற்ற மதிப்பீடுகளின்படி கிட்டதட்ட 400 பேர் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் சொல்கிறது.
இந்த பேரிடரால் ரூ.281 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காகவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் மாநில அரசுக்கு குறைந்தபட்சம் ₹600 கோடி தேவைப்படலாம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இவையுட்பட பிற செலவுகளையும் கணக்கில் கொண்டு மத்திய அரசிடமிருந்து ரூ.900 கோடி வரை எதிர்பார்ப்பதாகவும் கேரள மாநில அரசு தெரிவித்திருந்தது.

இதுவரை ஒன்றிய அரசு கேரள மாநிலத்திற்கு 2024-25 நிதியாண்டிற்கான 'மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF)’ அடிப்படையில் ரூ.388 கோடிகள் ஒதுக்கியிருக்கிறது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.291.2 கோடியும், மாநில அரசின் பங்கு ரூ.96.8 கோடியும் அடங்கிருக்கிறது. அதில் ஒன்றிய அரசின் பங்கு ஜீலை 31 அன்று ரூ.145.6 கோடியும், அக்டோபர் 1 அன்று ரூ.145.6 கோடியும் என இரண்டு தவணைகளாக விடுவிக்கப்பட்டது.
வயநாட்டில் உடனடியான தற்காலிக நிவாரண பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் (NDRF) இருந்து கூடுதலாக ரூ.214.68 கோடி கொடுக்கவேண்டுமென்று மாநில அரசு கேட்டது. வயநாடு பேரிடரின் பாதிப்புகளை ’மத்திய-அமைச்சக மத்திய குழு (IMCT)’ மதிப்பீடு செய்த பிறகு அதனைப் பொறுத்து இதுபோன்ற கூடுதல் நிதியை மாநில அரசு கோரலாம் என்று சொல்லப்பட்டது.
வயநாடு நிலச்சரிவை ‘தேசிய பேரிடராக’ அறிவிக்க மாநில அரசு வலியுறுத்திய போது, ‘SDRF/NDRF-ன் தற்போதைய வழிகாட்டுதல்களின் கீழ் எந்த பேரிடரையும் தேசிய பேரிடராக அறிவிக்க எந்த வழியும் இல்லை’ என்று ஒன்றிய இணை அமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், SDRF கணக்கில் ஏற்கனவே ரூ.394.99 கோடி கையிருப்பு இருப்பதாக தெரித்தார். அதனால், நிவாரண நடவடிக்கைகளுக்காக போதுமான நிதி (ரூ.782.99 கோடி) மாநிலத்தின் SDRF கணக்கில் உள்ளது என்ற கேரள மாநிலத்தின் Accountant General அறிக்கையை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார் நித்யானந்த ராய்.

மேலும், ’பேரிடர் மேலாண்மை என்பது மாநில அரசின் பொறுப்பு. மாநில அரசின் பேரிடர் மேலாண்மை முயற்சிகளுக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் நிதி உதவியை ஒன்றிய அரசு வழங்கும்’ என்று நித்யானந்த ராய் கூறியுள்ளார்.
இந்நிலையில்தான், கேரளாவில் பேரிடர்களின் போது மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கான நிலுவைத் தொகை ₹132.61 கோடியை செலுத்துமாறு பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
’1990 ஆண்டின் அரசு கணக்கியல் விதி’யின் (Government Accounting Rule, 1990) பின்னிணைப்பு 5ல், இயற்கை பேரிடர்களின் போது ஆயுதப்படைகள் செய்யும் பல்வேறு வகையான மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒரு மாநில அரசு செலுத்த வேண்டிய கட்டணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் நிலுவைத் தொகை கேட்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சட்ட ரீதியான உரிமை இருக்கிறது.
கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் கூறுகையில், “மிகக் குறைந்த அளவிலே நிதியைக் கொண்டுள்ள கேரளா ஒன்றிய அரசின் கூடுதல் உதவி இல்லாமல் இந்திய விமானப்படைக்கான (IAF) நிலுவைத் தொகையை கொடுக்கமுடியாது. ஆனால், ஒன்றிய அரசு தொகையை செலுத்தச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினால், பணம் செலுத்துவதைத் தவிர கேரளாவிற்கு வழியில்லை” என்றார்.

கேரளாவில் 2018ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்டதிற்கும், பேரிடர் மீட்பு நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய செலவுகளை ஒன்றிய அரசே ஏற்றுக்கொள்ளவதாக சொல்லியிருந்ததை நினைவூட்டி, மாநில அரசாங்கம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு (MHA) பலமுறை கடிதம் எழுதியிருக்கிறது. ஆனால், ”இந்த செலவை மாநில அரசு முதலில் கட்டும், பின்பு ஒன்றிய அரசு விடுவிக்கும் உதவி நிதியிலிருந்து மாநிலம் அரசு இந்த செலவீனத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியுறுத்துகிறது. மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியின் (SDRF) அடிப்படையில் வழக்கப்பட்ட நிதியைத் தவிர வேரெந்த நிதியும் ஒன்றிய அரசு வழங்கவில்லை.
வயநாட்டில் சில கிராமங்களை அழித்த இந்த நிலச்சரிவு, இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரிய நிலச்சரிவு என்று ’கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்’ ஆய்வு தெரிவிக்கிறது. அப்படிப்பட்ட பேரிடரில் இருந்து இன்னும் மீண்டு வராத ஒரு மாநிலத்திடம் நிலுவைத் தொகையை வசூலிக்க வலியுறுத்துவது அந்த மாநில மக்களை அவமதிக்கும் செயல் என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றனர்.