மிகை ஊட்டம்! குறை ஊட்டம்! இரண்டு இந்தியா!
ஊட்டசத்து உள்ள உணவு கிடைக்காமல் குறை ஊட்டத்துடன் (undernourished) இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, இந்தியாவில் மிகை ஊட்டத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் சரியான ஊட்டசத்து இல்லாததன் காரணமாக அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு ஊட்டச்சத்து பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஒரு பொது சுகாதார நெருக்கடியாக பார்க்கவேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சரியான ஊட்டசத்து உள்ள உணவு கிடைக்காமல் குறை ஊட்டத்துடன் (undernourished) இந்திய மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். 2024ஆம் ஆண்டு உலக பட்டினிக் குறியீட்டில் மொத்தமுள்ள 127 நாடுகளில் இந்தியா 105ஆவது இடத்தை பிடித்திருந்தது. 13.7% இந்திய மக்கள் குறை ஊட்டத்துடன் (undernourished) இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்கையில், இந்தியாவில் மிகை ஊட்டத்தின் காரணமாக மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. 2021 ஆம் ஆண்டில், அதிக எடை (overweight) மற்றும் உடல் பருமன் (obesity) உள்ள நபர்களைக் கொண்ட நாடுகளில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் நகரத்தில் வேலை செய்யும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் (IT employees) மத்தியில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், அவர்களில் 71% பேர் உடல் பருமனுடன் இருப்பதாகவும், 84% நபர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் (Fatty Liver Disease) இருப்பதாகவும் ’Nature’ ஆய்விதழ் குறிப்பிடுகிறது. அதிகமான பணிச்சுமை, மன அழுத்தம், தூக்கமின்மை, உணவு பழக்கம், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த பிரச்சினை வருவதாக கூறப்படுகிறது.

’தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5’ கொடுக்கும் தகவலின் படி, 40 முதல் 49 வயதுடையவர்களில் 32% உடல் பருமனுடன் இருக்கிறார்கள். இந்த மிகை ஊட்டம் காரணமான உடல் பருமன் என்பது குறைவான செல்வமுள்ள மக்கள் மத்தியில் 10 சதவீதமும், அதிகமான செல்வமுள்ள மக்களிடத்தில் 37 சதவீதமும் பரவலாக இருக்கிறது. அதாவது, ஏழைகளிடமும் பணக்காரர்களிடமும் இந்த நோய்கள் பொதுவாகவே காணப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் மிகை ஊட்டம் காரணமாக வரும் இந்த உடல் பருமன் பிரச்சினை பரவலாக இருக்கிறது. 2023-24 STEPS ஆய்வின்படி, தமிழ்நாட்டில் உயர் இரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு நோய் (Diabetics), அதிக எடை (Overweight), உடல் பருமன் (Obesity) போன்ற தொற்று அல்லாத நோய்கள் (Non-Communicable Diseases) அதிகமாக இருப்பது தெரிய வருகிறது. இந்த தொற்று அல்லாத நோய்கள் (NCDs) சென்னையில் நடக்கும் 65 சதவீத மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கிராமப்புறங்களைவிட நகர்புறங்கள் இந்த தொற்று அல்லாத நோய்கள் (NCDs) அதிகளவில் ஏற்படுவதாக தெரிகிறது. உலக அளவில் தொற்று அல்லாத நோய்களால் (NCDs) ஏற்படும் மரணங்கள் கடந்த 2019ஆம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவிக்கிறது. இது இந்த பிரச்சினையின் தீவிரத்தன்மையை காட்டுகிறது.

இந்த உடல் பருமன், நீரிழிவு நோய் போன்ற தொற்று அல்லாத நோய்களை தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய பணிச்சூழல் சார்ந்த பிரச்சினையாகவோ (Occupational Hazard), நகரமயமாக்கலால் (Urbanization) பரவலாக அதிகரித்துவரும் துரித உணவுகளை உண்பதால் ஏற்படும் பிரச்சினையாகவோ சுறுக்கி பார்க்க முடியாது. இது நாட்டின் மக்கள்த்தொகை முழுவதையும் பாதிக்கும் பொது சுகாதாரப் பிரச்சினையாகும்.
இந்தியர்கள் பெரும்பாலும், தாங்கள் உண்ணும் உணவில் Dietary Diversity என்று சொல்லப்படும் பல்வேறு ஊட்டசத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்வதில்லை. சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (IFPRI) கொடுத்துள்ள வரையறையின்படி, மனிதன் உட்கொள்ளும் உணவில் ஐந்து முக்கிய அம்சங்கள் இருக்கவேண்டும். ஒரு மாவுச்சத்து நிறைந்த பிரதான உணவு (உதாரணமாக அரிசி), ஒரு காய்கறி, ஒரு பழம், ஒரு பருப்பு வகை (உதாரணமாக துவரம் பருப்பு) அல்லது கொட்டை (கொண்டக்கடலை), மற்றும் ஒரு விலங்கு இறைச்சி ஆகியவை இருக்கவேண்டும்.
ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் இத்தகைய ஆரோக்கியமான உணவை செலவு செய்து வாங்கும் சக்தியற்றவர்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் (United Nations) சபையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை அறிக்கையில் 55.6% இந்தியர்கள் இத்தகைய ஆரோக்கியமான உணவிற்காக செலவு செய்யும் நிலையில் இல்லை என்ற உண்மை தெரியவருகிறது.

இந்தியாவில் பொது விநியோக முறை என்று சொல்லப்படக்கூடிய ரேசன் முறையில் கொடுக்கப்படும் உணவுப் பண்டங்கள் ஒரு மனிதன் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் தேவையான சக்தியை கொடுக்கும் கலோரியை வழங்குவது பற்றிய கண்ணோட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் போன்ற நுன்னூட்டச் சத்துகளை இவற்றால் தரமுடியாது. இதற்கு காய்கறிகள், பழங்கள், இறைச்சி உணவு ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அதற்கான வழி இல்லை.
மேற்கூறிய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் (IT employees) மத்தியில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில் கூட 94.2% நபர்கள் தாங்கள் தேவையான அளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இதிலிருந்து உணவு பழக்கத்தாலும், அதை வாங்குவதற்கு தேவையான அளவில் பொருளாதார வசதிகள் இல்லாததாலும் நீரிழிவு நோய், உடல் பருமன் போன்ற தொற்று அல்லாத நோய்கள் (NCDs) இந்தியாவில் பெருமளவில் ஏற்படுகிறது. இதுவொரு பொது சுகாதாரப் பிரிச்சினையாக தற்போது உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய், உடல் பருமன் ஆகிய நோய்கள் பெரும்பாலன மக்களுக்கு வந்த பிறகு மருத்துவத்திற்காக அரசு செலவளிப்பதைவிட, உணவு முறைகளில் மாற்றம் கொண்டுவர ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை செய்வது அவசியமாகும். அதற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் கொள்கைகளை வடிவமைக்கவேண்டிய அவசியமிருப்பதாக சுகாதார ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.