YouTurn

தடுப்பூசி செலுத்தப்படாத இந்திய குழந்தைகள்! ஒரு பார்வை!

இந்தியாவில் 1.44 மில்லியன் குழந்தைகள் ’ ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாத (zero-dose)’ நிலையில் இருக்கிறார்கள்.

  தடுப்பூசி செலுத்தப்படாத இந்திய குழந்தைகள்! ஒரு பார்வை!

கடந்த 2023ஆம் ஆண்டின் நிலவரத்தின் படி, 1.44 மில்லியன் குழந்தைகள் ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாமல் (zero-dose)’ இருப்பதாக ’LANCET’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. உலகளவில் இந்த எண்ணிக்கை 15.7 மில்லியன் ஆக உள்ளது. உயர் வருமான நாடுகளிலும் (high-income countries) கூட தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறைந்து வரும் நிலை உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு பிறகு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 


image.png


இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது அதிகளவில் இருந்தாலும், உள்நாட்டு அளவில் பாரிய வேறுபாடுகள் இருக்கிறது. அதாவது மாநிலங்கள் அளவிலும், மாவட்டங்கள் அளவிலும் தடுப்பூசி சென்று சேர்வதில் பாரிய வேறுபாடு இருக்கிறது. ஏன் குறிப்பிட்ட மாநிலங்கள், மாவட்டங்களில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துப்படாமல் இருக்கிறது, இதனை சரிசெய்ய இந்தியா எந்த மாதிரியான அணுகுமுறையைக் கடைபிடிக்கவேண்டும் என்பது தான் முதன்மையான கேள்வி!

image.png


இந்த வகையில்,  2019–21 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ‘தேசிய குடும்ப நல ஆய்வு-5  (NFHS-5)’-ன் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வறிக்கையை ’LANCET’ ஆய்விதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு ‘தேசிய குடும்ப நல ஆய்வு-5’ இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் வாழும் பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்துக் கேட்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்த ஆய்வு மொத்தம் 87,622 குழந்தைகளை கணக்கிலெடுத்துக்கொண்டு செய்யப்பட்டதாகும். இது இந்தியா முழுவதும் உள்ள 4.6 கோடி எண்ணிக்கையிலான 1 முதல் 3 வயதுடைய குழந்தைகளைப் பற்றிய தரவுகளைக் கொடுக்க வல்லது. 


ஒரு வயதில் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசி பற்றிய விவரங்களுக்காக 12–23 மாதங்கள் ஆன அனைத்து குழந்தைகளையும், இரண்டு வயதில் போட்டுக்கொள்ள வேண்டிய தடுப்பூசி பற்றிய விவரங்களுக்காக 24–35 மாதங்கள் ஆன அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்தியாவை பொறுத்தவரை முழுமையான நோய் தடுப்பு ஆற்றலை (Full Immunization) கொடுக்கும் வகையில், குழந்தைகளுக்கு ஒரு வயது நிரம்புவதற்குள், காசநோய்க்கு எதிரான ’BCG’ தடுப்பூசி, மூன்று தவணையான ’DPT’ தடுப்பூசி, தட்டம்மைக்கு எதிரான தடுப்பூசி ஆகியவை செலுத்தப்படவேண்டும். இவ்வாறு அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தாமல் இருக்கும் நிலையை ‘Basic immunization incomplete’ (BI) என்று குறிப்பிடுகிறார்கள். 


image.png


இதில் ’DTP’ தடுப்பூசி ஒருமுறை கூட செலுத்திக்கொள்ளாத நிலையைத் தான் ’zero-dose’ என்று குறிப்பிடுகிறார்கள். அதேபோல், தட்டம்மை தடுப்பூசியை ஒரு வயதில் எடுத்துக்கொள்ளாத நிலையை ’No MR-1’ என்றும் இரண்டு வயதிலும் எடுத்துக்கொள்ளாத நிலையை ’No MR-2’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இந்த நிலை மாறிகளை (variables) அடிப்படையாகக் கொண்டு தான் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்படுவதில் உள்ள வேறுபாடுகள் மற்றும் சிக்கல்கள் குறித்த இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. போலியோ தடுப்பூசி பற்றிய தரவுகள் ‘தேசிய குடும்ப நல ஆய்வு-5  (NFHS-5)’-ல் கணக்கெடுக்கப்படவில்லை என்பதால் இந்த ஆய்வில் அது சேர்க்கப்படவில்லை.


இந்த ஆய்வு மிக முக்கியமான விஷயத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அது என்னவென்றால், உலகளவில் தடுப்பூசி போடாத குழந்தைகள் அதிகம் வாழும் இரண்டாவது நாடாக இந்தியா இருந்தாலும், தடுப்பூசி போடாமல் இருப்பது அல்லது குழந்தைகள் தடுப்பூசி செலுத்துவதிலிருந்து விடுபட்டுப் போவது இந்தியா முழுவதும் பரவலாக நடக்கும் ஒன்றல்ல. அதாவது, இந்த ஆய்வு கணக்கில் எடுத்துக்கொண்ட 707 மாவட்டங்களில், குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் (sub-areas within districts) தான் தடுப்பூசி போடாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 


தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகம் வாழும் மாவட்டங்களில் கூட, முழு மாவட்டமும் இந்த பிரச்சினையின் களமாக இல்ல. அந்த மாவட்டத்திலே குறிப்பிட்ட சில பகுதிகளில் தான் தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் அதிகமாக இருக்கின்றன என்பது தெரியவருகிறது. இதனால், தடுப்பூசியை அனைத்து குழந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் இந்தியா முழுவதற்குமாக அல்லாமல், பகுதி வாரியாக உள்ளூர் அளவிலான திட்டமாக இருக்கவேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகிறது.


பிறந்த குழந்தைகளுக்கு சரியான வகையில் தடுப்பூசி செலுத்துவதுதான் சிறந்த பொது சுகாதார முன்னெடுப்பாகும். ஆனால், நாடுகளுக்கு இடையிலும், ஒவ்வொரு நாடுகளிலும் நிலைவும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கொரோனா போன்ற பெருந்தொற்று நோய் ஆகியவற்றின் காரணமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் தேய்வு ஏற்பட்டுள்ளது. இந்த தேய்வின் காரணமாக, தடுப்பூசியின் மூலமாக தடுக்க முடிந்த நோய்களான தட்டம்மை, போலியோ ஆகியவை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. 


இந்த வகையில், மேற்குறிப்பிட்ட ஆய்வு இந்தியாவில் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கும் குழந்தைகள் பற்றிய துல்லியமான புரிதலை வழங்குவதுடன், தடுப்பூசி விழிப்புணர்வு மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகள் உள்ளூர் மட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து முன்னெடுக்கப்படவேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டுகிறது. இந்தியா முழுமைக்குமான பிரச்சாரம், நடவடிக்கைகள் பலனளிக்காது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை