YouTurn

UGC-ன் வரைவு பாடத்திட்டம்! கணிதத்தில் நாரத புராணம் சேர்ப்பு!

இந்த வரைவு பாடத்திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் உள்ளன. இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

UGC-ன் வரைவு பாடத்திட்டம்! கணிதத்தில் நாரத புராணம் சேர்ப்பு!

மோடி தலைமையிலான பாஜக அரசு ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கல்வித்துறையில் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமான நகர்வாக இருப்பது ‘தேசிய கல்விக் கொள்கை - 2020’யை கொண்டு வந்ததாகும். அதோடு பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தை மாற்றுவதிலும் பாஜக அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக NCERT-யால் வெளியிடப்பட்ட 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ’டெல்லி சுல்தான் மற்றும் முகலாய பேரரசின் ஆட்சி குறித்த வரலாறு நீக்கப்பட்டிருந்தது’. இது வரலாற்றிலிருந்து முஸ்லிம் மன்னர்கள், பேரரசர்கள் ஆகியவற்றை இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது என நாடு முழுவதும் பெரும் விமர்சனங்கள் எழுந்தது. 


image.png


இதேபோல், கடந்த மாதம் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இளநிலை பட்டப்படிப்பிற்காக கணிதம் உள்ளிட்ட 9 பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டத்தை வெளியிட்டது. ’இதில் கணிதவியலுகான வரைவு பாடத்திட்டத்தில் கடுமையான குறைபாடுகள் உள்ளன’ என்றும் ‘இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்’ என்றும் சுட்டிக்காட்டியதோடு, இந்த பாடத்திட்டத்தை திரும்பப் பெறவேண்டுமென்று மஞ்சுநாத் கிருஷ்ணாபூர் உள்ளிட்ட 900 கணிதவியலாளர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்கள். 


அதில் முக்கியமாக, ‘இந்த வரைவு பாடத்திட்டம் முழுவதுமாக கைவிடப்படவேண்டும். கணிதவியலாளர்கள் மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் கணிதம் கற்பிப்பதில் அனுபவமுள்ள பேராசிரியர்கள் ஆகியோர் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் வகுக்கப்படவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். ’இந்த நாட்டில் கணிதவியலின் எதிர்காலம் மற்றும் அனைத்து விதமான அறிவியல் முயற்சிகளின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது’ என்று இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png


இந்த பாடத்திட்டத்தில் இந்துமதப் புராணங்களும், வேத கால கணிதம் என்று சொல்லப்படுவதில் உள்ள சூத்திரங்களும் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக Algebra என்று சொல்லப்படக்கூடிய இயற்கணிதம், பகுப்பாய்வுக் கணிதம் (Real analysis), பயன்பாட்டுக் கணிதம் (Applied math) ஆகிய முக்கியமான பாடங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இளநிலை கணித பட்டப்படிப்பில் மூன்று பாடங்களாவது (courses) அவசியம் இருக்கவேண்டிய இயற்கணிதம் (Algebra) வெட்டி குறுக்கப்பட்டுள்ளது. நிரலாக்கம் (Programming)  எண் முறைகள் (Numerical methods) மற்றும் புள்ளியியல் (Statistics) ஆகிய முக்கியமான பயன்பாட்டு கணித பாடங்களும் வெட்டி சுருக்கப்பட்டிருக்கிறது. 


இவற்றுக்கு பதிலாக, கலா ​​கணபனா என்ற கால கணிதமும், நாரத புராணத்தில் உள்ள வடிவியலும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சாங்கம் மூலம் நல்ல நேரம் கணக்கிடப்படுவது கூட இந்த பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

image.png


இந்த வரைவு பாடத்திட்டம் பற்றி கணிதவியலாளர் மஞ்சுநாத் கிருஷ்ணாபூர் குறிப்பிடுகையில், ’ஆர்யபட்டர், பிரம்மகுப்தா, மகாவீரர், பாஸ்கரா இவர்கள் எல்லாம் இந்திய நிலப்பரப்பில் பிறந்தவர்கள் என்பதாலே இவர்களைப் பற்றிய தனியான பாடங்கள் தேவையற்றது. கணித கோட்பாடுகள் (mathematical concepts) என்பது பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மேதைகளால் தொடர்ச்சியான முயற்சியால் உருவாக்கப்பட்டது. ஒருவர் கணிதத்தின் வரலாறு குறித்து சுயமுயற்சியில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அது கணிதவியல் கற்றுக்கொள்வதாகாது’ என்கிறார். 


அதேபோல் வேத கணிதத்தில் உள்ள சில சூத்திரங்கள் குறித்து தெரிந்துகொள்வதற்கு மற்ற கணிதவியல் பாடங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது? இதனால் எவ்வாறு மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறார் மஞ்சுநாத் கிருஷ்ணாபூர். ஒரு இந்தியரால் உருவாக்கப்பட்டது என்பதற்காக இதையெல்லாம் பாடத்திட்டத்தில் வைப்பது முட்டாள்தனமானது என்கிறார். ஷுல்வ சூத்திரங்கள் மூலமாக வடிவியல் கற்றுக்கொள்ள நினைப்பது அறிவுக்கு ஒவ்வாதது என்கிறார். 


மேலும், இந்தியர்களால் இந்திய தத்துவத்தால் கணிதவியலுக்கு செய்யப்பட்ட பங்களிப்புகளை மொத்தமாக தொகுத்து அதிகபட்சம் போனால் இரண்டு பாடங்களாக வைக்கலாம். அதுவும் மாணவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே படிக்கும் வகையில் ’Elective Courses’ ஆக வைக்கலாம் என்று குறிப்பிடுகிறார். 


இந்த UGC-ன் வரைவு பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய புத்தகங்களுக்கான (Reference Books) பட்டியலில், இதுவரை  எழுதப்படாத புத்தகங்களை எல்லாம் குறிப்பிட்டுள்ளார்கள் என்று மஞ்சுநாத் கிருஷ்ணாபூர் விமர்சித்துள்ளார். 2010ஆம் ஆண்டிலே இறந்துவிட்ட கணிதவியலாளரான ’வால்டர் ருடின்’ எழுதியதாக ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்படியொரு புத்தகத்தை அவர் எழுதவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் சில எழுதப்படாத புத்தகங்களின் பெயர்கள் UGC-ன் வரைவில் கொடுக்கப்பட்டுள்ளது. AI மூலமாக எழுதப்பட்ட புத்தகங்களையும் அதில் கொடுத்துள்ளதாக மஞ்சுநாத் கிருஷ்ணாபூர் குறிப்பிடுகிறார்


மேலும், இந்திய கணிதவியல் வரலாறு குறித்து கொடுக்கப்பட்டுள்ள இரண்டு புத்தகங்கள் இந்தியில் இருப்பதாகும். இதனை இந்தி பேசாத மாநிலங்களில் எவ்வாறு பாடத்தில் வைக்கமுடியும். இவ்வற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும் போது UGC-ன் இந்த வரைவு பாடத்திட்டம் Chat GPT போன்ற AI மென்பொருள் வைத்து எழுதப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார் மஞ்சுநாத் கிருஷ்ணாபூர். 


மேற்கூறிய விவரங்களிலிருந்து நம்மால் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று, இந்த வரைவு பாடத்திட்டம் கணிதவியல் வல்லுநர்களாலும், இளநிலை பட்டப்படிப்பில் மிகுந்த கற்பிக்கும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களாலும் உருவாக்கப்படவில்லை என்ற ஐயம் எழுகிறது. இரண்டாவது, இந்தியமயப்படுத்துதல் என்ற பெயரில் கணிதவியல் பாடத்திட்டத்தில் புராணம், வேத சூத்திரங்கள் என்று இந்துத்துவ கருத்துகள் திணிக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை