YouTurn

மாநில தேர்தல் அதிகாரியா? மாநில தேர்தல் ஆணையரா? தவெக-வின் குழப்பம்!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், மாநில தலைமை தேர்தல் அதிகாரியும் சேர்ந்து தான் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறார்கள் என்று தவெக தவறாக புரிந்துகொண்டிருக்கிறது.

மாநில தேர்தல் அதிகாரியா? மாநில தேர்தல் ஆணையரா?  தவெக-வின் குழப்பம்!

வரும் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை கணக்கில் கொண்டு, வாக்காளர் பட்டியலை புதுப்பிப்பதாக கூறி ’சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் (SIR)’ என்ற நடைமுறையை இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் மேற்கொண்டு வருகிறது. 


image.png


இதற்கான நடைமுறை பணிகளை தொடங்கும் முன்னர், இது குறித்து தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கருத்துக் கேட்பு கூட்டம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி (Chief Electoral Officer ‘CEO’) அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடத்தப்பட்டது. அதில், திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். 



இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்ததால் புதிதாக தொடங்கப்பட்ட நடிகர் விஜய்-யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதுகுறித்து சுமார் இரண்டு வாரங்கள் கழித்து நவம்பர் 15ஆம் தேதியன்று தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். விஜய் குறிப்பிடும் அந்த கூட்டம் முடிந்து 2 வாரங்கள் ஓடிவிட்ட நிலையில், வீடு வீடாக சென்று SIR கணக்கீட்டு படிவங்கள்  (Enumeration forms) கொடுக்கும் பணி நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் அவர் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


‘தவெக கட்சி தமிழ்நாட்டில் தனது இருப்பை நிரூபித்துள்ளது, மேலும் வரவிருக்கும் தேர்தல்களில் போட்டியிடவிருக்கிறது. அனைத்து குடிமக்களின் குரல்களும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக நடைமுறையை உயர்த்த, அங்கீகரிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத அனைத்து கட்சிகளுக்கு சமமான வாய்ப்புகளை வழங்கவேண்டும்’ என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும் போது அங்கீகரிக்கப்படாத கட்சிகளையும் அழைக்கவேண்டும் என்று தவெக கட்சி வலியுறுத்துகிறது.


இந்த கடிதத்தின் பெறுநர்களாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரையும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரையும், தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு (CEO) ஒரே முகவரியையும் குறிப்பிட்டுள்ளனர். 



முதலில் சட்டமன்றத் தேர்லுக்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கும் என்ன சம்பந்தம்? என்று தவெகவிடம் கேட்கவேண்டும். மாநில தேர்தல் ஆணையம் என்பது அந்த மாநிலத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவதாகும். இதற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.



மேலும் ஒரு மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுவதாகும். இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் மாநில சட்டமன்றம் மற்று நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்துவதுதான் தலைமை தேர்தல் அதிகாரியின் கடமையாகும். இந்த ‘தலைமை தேர்தல் அதிகாரி’ தான் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, திருத்தம், பராமரிப்பு ஆகிய பணிக்களுக்கு பொறுப்பாவார். 



மேலும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் தலைமைச் செயலகமான ஜார்ஜ் கோட்டையில் தான் இருக்கிறது. அதேவேளையில்,  மாநில தேர்தல் ஆணையரின் அலுவலகம் அரும்பாக்கத்தில் இருக்கிறது. இந்த இரண்டு வெவ்வேறு பதவிகள் என்பதும் வெவ்வேறு அலுவலகங்களில் இயங்கி வருகிறது என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும். 


ஆனால் தவெக கட்சியும் அதன் தலைவர் விஜய்-யும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தலைமை தேர்தல் அதிகாரியும் சேர்ந்து தான் சட்டமன்ற தேர்தலை நடத்துகிறார்கள் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். மேலும் மாநில தலைமை தேர்தல் அதிகாரியை மாநில தேர்தல் ஆணையத்தின் அங்கமானவர் என்று தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதனால் தான் இந்த இரண்டு பதவிகளுக்கு ஒரே அலுவலகம் என்று நினைத்து கடிதத்தில் தவறாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை