YouTurn

திருப்பரங்குன்றம் சர்ச்சை! உண்மைகளும் பொய்களும்!

திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் செய்து வரும் இந்த சர்ச்சைகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து வருகிறது.

திருப்பரங்குன்றம் சர்ச்சை! உண்மைகளும் பொய்களும்!

திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோவிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. மதப் பன்மைத்துவம் தமிழ் நிலப்பரப்பின் இயல்பாக இருந்ததன் சாட்சியமாக நிற்கிறது திருப்பரங்குன்றம். ஆனால் கடந்த சில காலமாக இந்த மலையை மையமாக வைத்து மத ரீதியான பதட்டத்தை உருவாக்க முயற்சித்து வருகிறது இந்துத்துவ அமைப்புகள். 


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி போன்ற இந்துத்துவ அமைப்புகள் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. 


image.png


தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள கல்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப தினத்தன்று, தீபத்தூண் என்று இந்துத்துவ அமைப்பினரால் சொல்லப்படும் இடத்தில் தீபம் ஏற்றப்படாத நிலையில் போலீஸ்க்கும் இந்துத்துவ அமைப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரையில் ஊரடங்கு உத்தரவு (144) பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் திருப்பரங்குன்றத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. 


திருப்பரங்குன்றத்தில் நடந்து வரும் சமீபத்திய சர்ச்சையின் முழு பின்னணி குறித்து விரிவாக விளக்கவேண்டிய தேவை இருக்கிறது. திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து இந்துத்துவ அமைப்பினர் செய்து வரும் இந்த சர்ச்சை ஓராண்டுக்கு முன்னரே தொடங்கிவிட்டது


திருப்பரங்குன்றம் மலையில் 2024 டிசம்பர் மாதம் கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுப்பதற்கு சென்ற இஸ்லாமியர்களை அங்கு பணியிலிருந்த காவலர்கள் தடுத்ததால், கந்தூரி கொடுப்பதற்கு அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு முன்பாகவே திருப்பரங்குன்றம் மலையின் நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு தொழுகை நடத்தத் தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது இஸ்லாமியர்கள் வழிபட இந்துத்துவா அமைப்பினர் நீண்ட காலமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்திருக்கின்றனர். இந்தப் பின்னணியில் தான் மலை மீது அமைந்திருக்கும் தர்காவில் கந்தூரி கொடுக்கக்கூடாது என்று இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்ச்சை செய்து வருகிறார்கள்.


image.png

இந்த சர்ச்சையின் உச்சமாகக் 2024 பிப்ரவரி 4ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பு ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய எச்.ராஜா “திருப்பரங்குன்றத்தை அயோத்தி போல மாற்றுவோம்” என்று மதங்களுக்கு இடையேயான மோதலை தூண்டும் வகையில் வெறுப்பு பிரச்சாரம் செய்தார்.


இவ்வாறு கந்தூரி கொடுப்பதை தடை செய்யவேண்டும், கந்தன் மலையை காக்க வேண்டும் என்று பேசி வந்த  இந்துத்துவ அமைப்புகள் தற்போது தீபத்தூண் என்ற விவகாரத்தை கிளப்பியுள்ளனர். இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சிக்கந்தர் தர்கா அருகே உள்ள கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். 


இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தர்கா அருகில் உள்ள கல்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு, அதனை நிறைவேற்றுவதற்கு 10 சிஐஎஸ்எப் (CISF) வீரர்களையும் அனுப்பி வைத்தார். ஆனால் அது தீபத்தூண் தான் என்பதற்கான எவ்வித ஆதார சான்றுகளையும் நீதிபதி குறிப்பிடவில்லை என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். 


image.png


தனி நீதிபதியாக ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த இந்த தீர்ப்பு இந்த பிரச்சினை பற்றிய முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை கணக்கில் கொள்ளாமல் ஒருதலைபட்சமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் 1996ஆம் ஆண்டிலே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது. 


அத்தீர்ப்பில் ”மலையில் நெல்லித்தோப்புக்கு (தர்காவுக்கு செல்லும் வழியில் உள்ளது) 15 மீட்டருக்கு அப்பால் தர்கா இருப்பதைக் கணக்கில் வைத்துக்கொண்டு சரியான இடத்தைத் தேர்வு செய்து தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேநேரத்தில், விளக்கு ஏற்றுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும் அதிகாரத்தை கோவிலுக்கே வழங்கியது உயர் நீதிமன்றம். 


அதன்படி, கோவில் நிர்வாகம் ஏற்கனவே இருக்கும் வழக்கப்படி உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றவேண்டும் என்று தீர்மானித்தது. அதாவது இந்த தீர்ப்பிற்கு முன்னரும் உச்சி பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வந்திருக்கிறது. 


image.png


இதிலிருந்து சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகவே மலை உச்சியில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற கேட்கவில்லை என்பது தெளிவாக தெரிய வருகிறது. ஆனால் கல்தூணில் தான் தீபம் ஏற்றப்படவேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை செய்து வருகின்றனர். 


தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்தார்கள். 2025 நவம்பர் மாதம், ”திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு செல்ல முடியவில்லை, அங்கே தீபம் ஏற்றுவதைத் தடுக்கிறார்கள்; திருப்பரங்குன்றத்தின் சுதந்திரமே பறிபோய் விட்டது” என்று பொய் செய்தியை பரப்பினார்கள். 


திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூண் தான் வழக்கமாக தீபம் ஏற்றப்பட்டு வந்த தீபத்தூண் என்று பொய்யான தகவல்களை பாஜகவைச் சேர்ந்த S.G.சூர்யா உள்ளிட்ட பல இந்துத்துவவாதிகள் தொடர்ந்து இந்த பொய்யை பரப்பி வருகிறார்கள். மேலும், 1858 ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு  திருப்பரங்குன்றம் மலையில் 19ஆம் நூற்றாண்டு காலத்தில் தர்காவே இல்லை; எனவே தர்கா என்பது கடந்த 100 ஆண்டுகளில்  கோவிலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது தான்’ என்று இந்துத்துவவாதிகள் பொய்யை பரப்பி வருகிறார்கள். இந்த பொய் செய்திகளை எல்லாம் ‘You Turn’ அம்பலப்படுத்தியது. 


image.png


இவ்வாறு தொடர்ந்து பொய்களை பரப்புவதும், கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற உச்சி பிள்ளையார் கோவிலை தேர்ந்தெடுத்த பின்னரும் தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்படவேண்டும் என்று சர்ச்சை செய்வதும், “திருப்பரங்குன்றத்தை அயோத்தி போல மாற்றுவோம்” என்று சொல்வது எல்லாம் சமூகத்தில் மதவெறுப்பு விதைக்க தான் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இது படிப்படியாக வளர்க்கப்பட்டு தர்கா யாருக்கு சொந்தமான இடத்தில் உள்ளது என்று பிரச்சினை கிளப்பிவிட வாய்ப்பிருக்கிறது. 



டிசம்பர் 1ஆம் தேதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பிலே கூட, “இது (தர்கா அருகில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றுவது) மதம் சார்ந்த பாரம்பரியம் மட்டுமல்ல. தன்னுடைய சொத்துகளை பாதுகாத்துக் கொள்வதற்காக தீபத்தூணில் பண்டிகை கால விளக்கை ஏற்ற கோவில் நிர்வாகம் கடமைபட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தீபம் ஏற்றும் விவகாரத்தை படிப்படியாக கல்தூண் இருக்கும் இடம் யாருக்கு சொந்தமானது, தர்காவிற்கா அல்லது கோவில் நிர்வாகத்திற்கா? என்று சர்ச்சையை கிளப்பும் வகையில் உள்ளது இந்த தீர்ப்பு.



ஆனால் இந்த தூண் தீபத்தூணும் அல்ல, நில அளவைக் கல்லும் அல்ல. இது சமண துறவிகளால் எழுப்பப்பட்ட தூண் என்றும் தீபம் ஏற்றுவது தொடர்பான முழு அதிகாரமும், உரிமையும் கோயில் நிர்வாகத்திற்கே உள்ளது. தீபம் ஏற்றுதல் தனிநபரின் உரிமை அல்ல என்றும் வாதங்களை தமிழ்நாடு அரசு தரப்பு முன்வைத்துள்ளது. இந்த வழக்கு இன்னும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தற்போது நடந்துவருகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை