YouTurn

கோவில்கள் அனைத்தும் அரசிடம் ஏன் ஒப்படைக்கப்பட வேண்டும்..? வரலாறும், அரசியலும் !

கோவில்கள் அனைத்தும் அரசிடம் ஏன் ஒப்படைக்கப்பட வேண்டும்..? வரலாறும், அரசியலும் !
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், மாநில அரசே கோயில்கள் அனைத்திற்கும் உரிமை கோருகிறது. கோவில்களின் சொத்துகள் அரசு மூலம் மோசடி செய்யப்படுகின்றன. ஆனால் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் அவர்கள் கை வைப்பதில்லை. அந்த வழிபாட்டு தளங்களை மட்டும் அரசின் கொள்கைகளுக்குள் கொண்டு வரமாட்டார்கள்." என்று பேசியிருந்தது தமிழ்நாட்டில் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.

உண்மையில் கோவில் சொத்துகள் முறைகேடாக பயன்படுத்துகிறதா? கோவில்கள் அனைத்தும் திமுக ஆட்சியின் போது தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டனவா? இதுவரை இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனைகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு தெளிவாக காண்போம்.

இந்து சமய அறநிலையத்துறை உருவான விதம் (1817-2023):

சோழர் காலத்தில் இருந்தே கோவில்கள் நிறுவனமாக்கப்பட்டு அரசு சார்பில் 'ஊரார்' என்பவர்களின் தலைமையில் ஒப்படைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுள்ளன. மேலும் அப்போதிலிருந்தே கோவிலின் வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. கோவில் தணிக்கையாளர் 'கோவில் கணக்கு' என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பதை பிற்கால சோழர்களின் (கி.பி 850- 1281 வரை) வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது.



பின்னர் மன்னராட்சிக்கு பின்பு கோவில் நிர்வாகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளை எதிர்த்து மெட்ராஸ் மாகாணத்தைச் சேர்ந்த மக்கள், கிழக்கிந்திய கம்பெனியிடம் முறையிட்டனர். இதைத் தொடர்ந்து 'மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம்' 1817-இல் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கோவிலுக்கு வழங்கப்பட்டுவந்த நன்கொடைகள் கண்காணிக்கப்பட்டன. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் தொடங்கி ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்திய அரசுச் சட்டம் 1858-ன் படி இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றதால், கோயில்களும், அவற்றின் சொத்துகளும் இதற்கு முன்பு யார் வசம் இருந்ததோ, அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. மீண்டும் மக்களிடமிருந்து புகார்கள் எழுந்ததால், 1920-ல் பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும், மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார். இதற்காக 1922-ல் 'இந்து பரிபாலன சட்டத்தை' முன்மொழிந்தார். 1925-ல் இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார். அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927-ல் 'இந்து சமய அறநிலைய வாரியம்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1951 இயற்றப்பட்டு பல்வேறு சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்து சமய அறநிறுவனங்களின் நிர்வாகத்தினை அரசு ஏற்றது. இந்த சட்டத்தில் விரிவான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1959-ஆம் ஆண்டில் தமிழ்நாடு 'இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 22/1958' 01.01.1960 அன்று அமலுக்கு வந்தது. இதன்படி, கோயில்களை நிர்வகிப்பதற்காக 'இந்து சமய அறநிலையத்துறை' (Hindu Religious & Charitable Endowments Department) என்ற அரசுத்துறை ஒன்று தனியாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



இதன்மூலம் கோயில்களின் உள்ளே இருக்கும் விலை மதிப்பு மிக்க தங்க நகைகள், சிலைகள் மற்றும் சொத்துகள் தவறாக ஆக்கிரமிக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் அரசிடம் 1817-லிருந்தே புகார் கொடுத்ததை அடுத்தே, கோவில் நிர்வாகம் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

 'இந்து சமய அறநிலையத்துறை' ஏன் அவசியமானது ?

  1. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோவில்கள் பிரிக்கப்பட்டுள்ள விதம்:


2023-இல் எடுக்கப்பட்ட தரவுகளின் படி, தமிழ்நாட்டில் உள்ள மொத்த கோயில்களின் எண்ணிக்கை 79,154. இதில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வெறும் 46,086 கோவில்கள் மட்டுமே உள்ளன.



இந்த 46,086 கோவில்களும் பட்டியலைச் சாராத கோவில்கள், பட்டியலிடப்பட்ட கோவில்கள் என்று வருமானத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள் பட்டியலைச் சாராத கோவில்கள் என்றும், ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் பட்டியலிடப்பட்ட கோவில்கள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பட்டியல் பிரிவு மேலும் மூன்று பிரிவுகளாக உள்ளன. முதல் பிரிவில் ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்களும், இரண்டாவது பிரிவில் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவையும், மூன்றாவதாக ஆண்டு வருவாய் பத்து லட்ச ரூபாய்க்கு மேற்பட்டவையும் என்று பிரிக்கப்பட்டுள்ளன.

2. உண்டியல் காணிக்கைகள் எண்ணும் முறை:

பொதுவாகவே 'கோவில் உண்டியலில் பணத்தைப் போடாதீர்கள், அந்தப் பணம் கோவிலுக்கு செல்வதில்லை' போன்ற வதந்திகள் அதிகமாக பரவி வருவதை காண முடிகிறது. உண்மை என்ன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஒய்வு பெற்ற ஆய்வாளரான ஜெயராமன் அவர்களிடம் யூடர்ன் தரப்பில் இருந்து பேசினோம்.

நமக்கு பதிலளித்து பேசிய அவர், "இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களின் உண்டியல்கள் அனைத்தும் சிசிடிவி கேமராவால் எப்போதும் கண்காணிக்கப்பட்டு வரும். மேலும் இந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணுவதற்கு பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதே போன்று ஒவ்வொரு கோவிலிலும் உண்டியல்களைத் திறப்பதற்கும் பல்வேறு கால அளவுகள் இருக்கின்றன. கோவில் உண்டியல்கள் எல்லாவற்றுக்குமே இரண்டு பூட்டுகள் இருக்கும். பூட்டை திறக்க சாவிகள் கொண்டுவரப்பட்டு, எல்லா அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் தான் அவை பிரிக்கப்படும்.

இதற்குப் பிறகு, முதல் உண்டியல் திறக்கப்பட்டு அவற்றில் இருக்கும் காணிக்கைகள், பெட்டி ஒன்றுக்கு மாற்றப்படும். எந்த உண்டியல், எந்த பெட்டி, எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது என்ற விவரங்கள் அனைத்தும் பதிவேட்டில் குறிக்கப்படும். இப்படியாக ஒரு உண்டியல் காணிக்கை முழுவதும் பெட்டியில் ஏற்றப்பட்டவுடன் அந்த பெட்டிகள் காணிக்கை எண்ணும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும். அது பெரும்பாலும் எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அமைந்த மண்டபமாக இருக்கும்.

அந்த மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கொட்டப்படும். அங்கே கோவிலின் அதிகாரிகள், கூட்டுறவு (அ) அரசு வங்கி அதிகாரிகள் இருப்பார்கள். காணிக்கையை எண்ணுவதற்கு தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள். அவர்களது விவரங்கள் வாங்கப்பட்டு, காணிக்கையை எண்ணுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் நோட்டுகள் தனியாகவும் காசுகள் தனியாகவும் பிரிக்கப்படும். பிறகு அவை எண்ணப்படும்.

ஒவ்வொரு வகை நோட்டும் பிறகு கட்டாக கட்டப்பட்டு, அங்கிருக்கும் வங்கி அதிகாரியிடம் கொடுக்கப்படும். அந்த வங்கி அதிகாரியிடம் எத்தனை கட்டு கொடுக்கப்பட்டது என்ற விவரம் பதிவுசெய்யப்படும். இப்படியாக எல்லாப் பணமும் எண்ணி முடித்த பிறகு, மொத்தப் பணமும் வங்கி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு, கோவிலின் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ரசீது கோவிலின் அதிகாரியிடம் அளிக்கப்படும். இதே போன்று தான் கோவிலுக்கு காணிக்கையளிக்கப்படும் தங்கம், வெள்ளி, தாமிரம், தகரம் போன்ற உலோகங்களும் கணக்கிடப்படும். உண்டியல் பணம் எண்ணுவது என்பது மிகப்பெரிய மற்றும் பாதுகாப்பான செயல்முறையாகும். மேலும் இந்த காணிக்கை பணம் வசூல் செய்யப்பட்ட கோவிலின் செலவுக்கு மட்டுமே வழங்கப்படும். உபரி பணம் மட்டும் பொதுமக்களுக்கான சிறப்பு திட்டங்களுக்காக வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

3. இந்து சமய அறநிலையத்துறையில் மாற்று மதத்தினரா ?



    • தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முதன்மையானது, இந்து அறநிலையத்துறையில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணியில் இருந்துகொண்டு இந்துக் கோவில்களை கட்டுபடுத்துகின்றனர் என்பது தான். ஆனால் அதில் உண்மையில்லை. அறநிலையத்துறை கோவில்கள் அனைத்தும் இந்துக்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன. மற்ற மதத்தினர் யாரும் கோவிலின் நிர்வாகத்துறையில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபு, ஆணையர்கள் க.மணிவாசன், கே.வி.முரளிதரன் மற்றும் இணை, துணை, உதவி ஆணையர்கள், ஆய்வர்கள், செயல் அலுவலர்கள் முதல் கோவிலை கூட்டி பெருக்குபவர் உட்பட கோவிலில் வேலை செய்யும் 1,336 பணியாளர்களும் இந்துக்களே.




4. இந்து சமய அறநிலையத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள்:



    • அன்னதானம் - கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் அன்னதானத் திட்டம் 2002-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, மதியவேளை உணவு 754 திருக்கோயில்களில் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம், அரங்கநாதசுவாமி திருக்கோயில், பழநி திருக்கோயில்களில் மட்டும் வழக்கப்பட்டு வந்த முழுநாள் அன்னதானம், 2021-2022 ஆம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் விரிவுபடுத்தப்பட்டு, திருத்தணி, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.





    • கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம் - மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோயில் வளாகத்தில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை நடும் பணி 'கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டம்' என்கிற பெயரில் 07.08.2021 அன்று தொடங்கப்பட்டுள்ளது.





    • கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம் - இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்படாத திருக்கோயில்களில், 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்து ஓய்வுபெற்ற பூசாரிகளுக்கு கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.





    • அன்னைத் தமிழில் அர்ச்சனை - 2021 முதல் இத்திட்டம் முதற்கட்டமாக 47 முதுநிலை திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக கோவில்களில் உள்ள அறிவிப்பு பதாகையில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் மற்றும் அவரது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.





    • அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் - 2021 முதல் வழிபாடு செய்பவர் அனைவரும் இறைவனைத் துதிக்கவும், சடங்குகள் செய்யவும், போற்றி வழிபடவும், திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில், இந்து சமயத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் தகுதியான மற்றும் தேவையான பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமித்திட அரசு உத்தரவிட்டுள்ளது.





    • பெண் அர்ச்சகர்கள் நியமனம் - 2023 செப்டம்பர் 15 அன்று அர்ச்சகர் பயிற்சி நிறுவனம் முதன்முறையாக மூன்று பெண்களுக்கு கோவில் அர்ச்சகர்களாக பயிற்சி அளித்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் கருவறையில் இதுவரை நுழைய அனுமதி கிடைக்காத பெண்களும் கோவில் கருவறைகளில் நுழைய உள்ளனர். இது ஒரு வரலாற்று சாதனை.




இவை மட்டுமல்லாது கீழ்காணும் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • ஒருகால பூஜைத் திட்டம்

  • இசைவாணர்கள் நியமனம்

  • புத்துணர்ச்சி பயிற்சி படிப்புகள்

  • நாதஸ்வர கலைஞர்கள் நியமனம்

  • திருக்கோயில் பணியாளர்களுக்கான நலத் திட்டங்கள் 

  • திருக்கோயில் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு படிப்புதவித் திட்டம்

  • துறை நிலையிலான ஓய்வூதியத் திட்டம்

  • ஆன்மிக மற்றும் நீதிநெறி வகுப்புகள்

  • யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம்கள்


5. இந்து சமய அறநிலையத்துறையால் மீட்கப்பட்டுள்ள சொத்துகள்:





    • தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்களை மீட்டெடுப்பது, பழைய கோயில்களை சீரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்துவது, காணாமல் போன கோயில் சிலைகளை மீட்பது என இந்துசமய அறநிலையத் துறை பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள கோயில் நிலங்கள் மற்றும் அதன் சொத்து விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் தற்போது திமுக அரசால் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.











    • இதுவரை தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான ரூ.2000 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 991 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இந்த கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அதுபோல், தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுவாமி சிலைகளில் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.






ஏன் அறநிலையத்துறையை வலதுசாரிகள் எதிர்க்கின்றனர்?



    • சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தவரை கோவில் உண்டியலில் சொற்பமான அளவே பணம் வருவாயாக வந்ததாக கணக்கு காட்டப்பட்டது. ஆனால் கடந்த 2011ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போது 1 கோடி வரை உண்டியல் பணம் வசூல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாது, சிதம்பரம் தீட்சிதர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாதி பெயர் சொல்லி அழைத்தனர். இந்த விவகாரத்தில் 20 பேர்  தீட்சிதர்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.







    • இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) சார்பாக ஏழை மாணவர்களுக்காக புதிய கல்லூரிகளைத் திறக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டபோது இந்த திட்டத்திற்கு எதிராக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர்.ரமேஷ் வழக்கு தொடர்ந்து பின்னடைவை உள்ளாக்கினார்.







    • மாநிலம் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் உள்ள 1,000 கிராமக் கோயில்களை சீரமைப்பதற்காக, அதிக வருவாய் கொண்ட 20 கோயில்களின் உபரி நிதியில் இருந்து ₹10 கோடியை பயன்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முயற்சிகள் எடுத்தது. இதனையும் ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர்.ரமேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்து சென்னை உயர்நீதிமன்றம் மூலம் தடை வாங்கினார்.







    • கடந்த 2021-இல் அன்னை தமிழில் அர்ச்சனை செய்வதற்கு அறிவிப்பு வெளியிட்ட போதும் பல வலதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்ததால், தற்போது கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது.







    • அறநிலையத்துறை சார்பாக முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ 45 கோடி ஒதுக்கப்பட்ட போதும், ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவரான டி.ஆர்.ரமேஷ் எதிர்த்து வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




அறநிலையத்துறை சார்பாக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளும் போது அவற்றை தடுக்கும் நோக்கில் வழக்கு தொடுக்கும் அதே வலதுசாரிகள் தான் கோவில்களை அரசு விடுவிக்க வேண்டும் என்று கேட்கின்றனர். கோவில் பணத்தில் கடவுளின் பெயரால் நன்மை செய்வதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்து தடுக்கும் பலர், கோவில்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கும் போது அவர்களின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது. மேலும், கோவில் பணம் மற்றும் சொத்துக்களை பல்வேறு வகையில் பல தலைமுறைகளாக அபகரித்து ஒரு சிலர் மட்டுமே வைத்திருந்த நிலைக்கு எதிராகவே அறநிலையத்துறையின் தேவை பிறந்தது. மீண்டும் அதே நிலைக்கு செல்லாமல் இருக்க அறநிலையத்துறை இன்றியமையாததாக உள்ளது.

ஆதாரங்கள்:

https://www.thehindu.com/opinion/op-ed/the-case-against-state-control-of-hindu-temples/article66330256.ece

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_department.php

https://timesofindia.indiatimes.com/city/chennai/its-a-golden-era-under-the-hrce-tn-minister-sekar-babu/articleshow/87174727.cms

https://timesofindia.indiatimes.com/city/chennai/madras-high-court-restrains-tamil-nadu-from-establishing-colleges-out-of-temple-funds/articleshow/87727499.cms

https://www.thehindu.com/news/national/tamil-nadu/hrce-department-restrained-from-using-funds-from-rich-temples-to-renovate-village-shrines/article32896490.ece

https://www.thehindu.com/news/national/tamil-nadu/how-can-hrce-dept-use-45-crore-from-temple-funds-to-build-old-age-homes-asks-hc/article65408380.ece

https://www.hindutamil.in/news/todays-paper/frontpg/712480-.html

https://www.hindutamil.in/news/tamilnadu/1129402-status-quo-to-remain-in-appointment-of-priests-supreme-court-directs-hindu-charity-department-1.html
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை