எத்தனால் கலந்த பெட்ரோல்: வாகனங்கள் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
”பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது நுகர்வோருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதாகவோ கூறப்படுவதற்கு எவ்வித தொழில்நுட்ப அடிப்படையும் இல்லை” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு திருத்தப்பட்ட ’உயிரி எரிபொருட்கள் மீதான தேசியக் கொள்கை’-ன் படி 2026 - 2030 ஆகிய ஐந்தாண்டுகளுக்குள் இந்தியாவில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது ஏற்கனவே 10% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது அதிகாரப்பூர்வ செய்தியின் படி, பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனாலின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது தெரியவருகிறது. இவ்வாறு எத்தானல் பயன்பாட்டை படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும் என்று சொல்லப்படுகிறது.
Sell the car and walk. Good for health - speak like nimmi https://t.co/8Kt7ld1iTD
ஆனால் தற்போது E20 என்று சொல்லப்படக்கூடிய 20% எத்தனால் கலந்து பெட்ரோல் பயன்பாட்டிற்கு வரவிருப்பது வாகன உரிமையாளர்கள் மத்தியில் சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு எத்தனால் கலந்த எரிபொருளை பயன்படுத்துவதால் வாகனங்களின் mileage குறைகிறது, அதாவது குறிப்பிட்ட அளவு எரிபொருளில் வானகம் ஓடக்கூடிய தூரம் குறைகிறது என்றும் வாகனத்தின் என்ஜின் பாதிப்படைகிறது என்றும் வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்த கவலையை பலர் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து கொண்டதால் இது பெரிதும் பேசப்படக்கூடிய செய்தியானது.
📑Some articles/ reports in the media have raised concerns about the potential negative impact of 20% ethanol blending (E20) in petrol, particularly with regard to older vehicles and customer experience. These concerns, however, are largely unfounded and not supported by…
இதனால், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இது குறித்து விளக்கமளித்துள்ளது. அதில் ”பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது நுகர்வோருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதாகவோ கூறப்படுவதற்கு எவ்வித தொழில்நுட்ப அடிப்படையும் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
மாருதி-சுசுகி கார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான C.V. ராமன், எத்தனால் கலக்காத பெட்ரோலை விட 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் செயல்திறன் 5 முதல் 7 சதவீதம் வரை குறைவாக தான் இருக்கும் என்று கூறுகிறார்.

அதே நேரத்தில், கடந்த 2008ஆம் ஆண்டில் E10 என்று சொல்லப்படக்கூடிய 10% எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதற்கு உரிய வகையில் கார்களின் என்ஜின் உதிரி பாகங்கள் இருக்க வேண்டுமென்று இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) நிர்ணயம் செய்தது. இதனால், 2008-ல் விற்கப்பட்ட கார்கள் 10% எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த உகந்த வகையில் இருந்தது. மேலும் கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் விற்கப்படும் வாகனங்களின் என்ஜின் 20% எத்தனால் கலந்த பெட்ரோலை உபயோகப்படுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளதாக C.V. ராமன் குறிப்பிடுகிறார். இதனால், என்ஜின் பாதிப்படைவது குறைவாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதையே தான் வேறு வார்த்தைகளில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகமும் தெரிவிக்கிறது. அதாவது, E10 எரிபொருள் பயன்படுத்தும் போது, 4 சக்கர வாகனத்தின் செயல்திறன் 1 அல்லது 2% குறைவாக இருப்பதாகவும், அதே E20 எரிபொருள் பயன்படுத்தும் போது செயல்திறன் 3 முதல் 6% வரை செயல்திறன் குறைவதாக கூறப்படுகிறது. ஏனெனில், பெட்ரோலை விட எத்தனாலின் ’calorific value’ குறைவு. அதாவது, ஒரு குறிப்பிட்ட அளவு (உதாரணமாக ஒரு லிட்டர்) பெட்ரோல் உருவாக்கும் வெப்பத்தைவிட எத்தனால் உருவாக்கும் வெப்பம் குறைவானது. இதனால் தான் எத்தனால் கலந்த பெட்ரோலின் செயல்திறன் தூய்மையான பெட்ரோலைவிட குறைவானதாக இருக்கிறது. இதனால், வாகனத்தின் மைலேஜ் குறையும் என்பது உண்மைதான்.

E20 எரிபொருளுக்கு ஏற்றவகையில் என்ஜின் பொருட்கள் மாற்றப்படும் போது E20 பெட்ரோலால் ஏற்படும் இந்த சிறிய குறைபாட்டை இன்னும் குறைக்க முடியும் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறுகிறது. 2023ஆம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்ட வாகனங்களிலே E20 எரிபொருளுக்கு ஏற்றவாறு பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சகம் தெரிவிக்கிறது.
2023 ஆண்டிற்கு முன்னர் வாங்கப்பட்ட வாகனங்களில் E20 எரிபொருள் பயன்படுத்தும் போது ஏற்படும் பாதிப்பு சிறிய அளவிலானது தான் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் கூறுகிறது. அந்த வாகனங்களை 20,000 முதல் 30,000 கி.மீ.கள் பயன்படுத்தப்பட்ட பின்னர் சில ரப்பர் உதிரி பாகங்களை மட்டும் மாற்றினால் போதுமானது என்கிறது. இதுவும் அதிகம் செலவு பிடிக்கும் உதிரி பாகங்கள் அல்ல, பொதுவாக வாகனங்களை பராமரிக்கும் போது இவ்வாறு உதிரி பாகங்கள் மாற்றப்படுவது சாதாரணமானது தான் என்று கூறுகிறது.
மேலும், இந்திய ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் (ARAI), இந்திய பெட்ரோலிய நிறுவனம் (IIP) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி பிரிவு ஆகியவை மேற்கொண்ட சோதனைகளில், ”2023-க்கு முன்பான வாகனங்களில் E20 எரிபொருள் பயன்படுத்தும் போது குறிப்பிடத்தக்க மாறுபாடுகளோ, செயல்திறன் சிக்கல்களோ அல்லது அசாதாரண தேய்மானங்களோ எதுவும் காணப்படவில்லை” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அதன் விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, ஒன்றிய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் முனைப்புடன் இருப்பது தெளிவாக தெரிகிறது. இரு பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003ஆம் ஆண்டில், 5% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனைக்கு கொண்டுவருவதை இலக்காக வைத்து இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு வரையில் 1.5% எத்தனால் வரை தான் நடைமுறைப்படுத்த முடிந்தது. அதன்பின்னர், E10, E20 என்று அடுத்தடுத்து இலக்கு வைக்கப்பட்டது. தற்போது 27% எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதை இலக்காக வைத்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.