YouTurn

2022-ல் இந்தியாவில் அதிகரித்துள்ள தற்கொலை மரணங்கள்.. NCRB தரவுகள் கூறுவதென்ன ?

2022-ல் இந்தியாவில் அதிகரித்துள்ள தற்கொலை மரணங்கள்.. NCRB தரவுகள் கூறுவதென்ன ?
2023 டிசம்பர் 3 அன்று, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2022-ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்திர அறிக்கையை “இந்தியாவில் குற்றங்கள் 2022” என்ற தலைப்பில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து "இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்" என்ற தலைப்பில் ADSI 2022-ற்கான அறிக்கை வெளியிடப்பட்டன. ADSI அறிக்கையில் கூறப்பட்டுள்ள தரவுகளை இங்கே விளக்கமாகக் காண்போம். 

2022-ல் அதிகரித்துள்ள தற்கொலை மரணங்கள்:

2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் தற்கொலைகள் 4.2% அதிகரித்துள்ளன. மொத்தமாக 1.7 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தற்கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன. மேலும் 2018-ஆம் ஆண்டோடு ஒப்பீடு செய்து பார்த்ததில் இந்த ஆண்டு 27% தற்கொலைகள் அதிகரித்துள்ளன. ஒரு லட்சம் பேருக்கு எத்தனை பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று கணக்கிடப்படும், "தற்கொலை விகிதத்திலும்" 3.3% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

ADSI 2022 அறிக்கையின்படி, மாநிலவாரியாக கணக்கிட்டதில், மகாராஷ்டிரா (22,746), தமிழ்நாடு (19,834), மத்தியப் பிரதேசம் (15,386), கர்நாடகா (13,606), கேரளா (10,162), தெலுங்கானா (9,980) ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டில் அதிக தற்கொலைகள் நடந்துள்ளன.




தினசரி ஊதியம் பெறுவோர், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களைத் தவிர, கடந்த 2022ல் சுயதொழில் அல்லது ஊதியம் பெறும் தொழிலாளர்கள் செய்துக் கொண்ட தற்கொலை 9.6% ஆக உள்ளதாக ADSI புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அடுத்ததாக 2022-ல் இந்தியாவில் பதிவான தற்கொலைகளில் 9.2% பணியில் இல்லாத மக்களால் அதிகமாக செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் 12,000க்கும் மேற்பட்ட மாணவர்களும் தற்கொலைகள் செய்துள்ளனர்.

மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, சண்டிகர், டெல்லி, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் தற்கொலைகள் பூஜ்ஜியமாக பதிவாகியுள்ளன.

ADSI தரவுகளின்படி, 2022 இல் தற்கொலை செய்து கொண்ட 48,000-க்கும் மேற்பட்ட பெண்களில் 52% க்கும் அதிகமானோர் இல்லத்தரசிகளே என்பது அதிர்ச்சிகரமான தகவலாகும். இது இந்த ஆண்டில் ஆவணப்படுத்தப்பட்ட மொத்த தற்கொலைகளில் 14.8% அக உள்ளது. மேலும் 2022-ல் 28 திருநங்கைகளும் தற்கொலை செய்து கொண்டதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.



மொத்த தற்கொலைகளில் 31.7% 'குடும்பப் பிரச்சனைகள்' காரணமாகவும், 18.4% நோய்கள் காரணமாகவும் நிகழ்ந்துள்ளன. தற்கொலைக்கான பிற காரணங்களில் 'போதைப்பொருள்/மதுப்பழக்கம்' (6.8%), 'திருமணம் தொடர்பான பிரச்சினைகள்' (4.8%), 'காதல் விவகாரங்கள்' (4.5%), 'கடன் அல்லது திவால்நிலை' (4.1%), 'வேலையின்மை' (1.9 %), 'தேர்வில் தோல்வி' (1.2%), 'தொழில்முறை/தொழில் சிக்கல்' (1.2%), 'நேசிக்கும் நபரின் மரணம்' (1.2%) ஆகியவை உள்ளன. மேலும் பெண்களின் தற்கொலைகள் குறித்து ஆய்வு செய்ததில், பெரும்பாலானவை வரதட்சனை கொடுமைகளின் காரணமாகவே ஏற்பட்டுள்ளன.



2018 முதல் 2022 வரை ஏற்பட்டுள்ள தற்கொலை நிகழ்வுகளின் எண்ணிக்கைகள் குறித்து கீழே உள்ள அட்டவணை மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் கடந்த 2018-ல் இருந்தே தற்கொலை மரணங்கள் கணிசமாக அதிகரித்து வருவதை காண முடிகிறது.



இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் பற்றிய சமீபத்திய அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மொத்த தற்கொலை சதவீதங்களில் இந்த எண்ணிக்கை 7.6% ஆகும். இதில் தேர்வில் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக மட்டும் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே 1,123 தற்கொலை நிகழ்வுகளும், அனைத்து வயதுப் பிரிவுகளின் கீழ் 2,095 தற்கொலை நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன.

இதில் தற்கொலை செய்துகொண்ட 18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 578 பேர் பெண்கள், 575 பேர் ஆண்கள். இதே போன்று அனைத்து வயதுப் பிரிவுகளின் கீழ் ஏற்பட்டுள்ள 2,095 தற்கொலை நிகழ்வுகளில், மகாராஷ்டிராவில் 378, மத்தியப் பிரதேசத்தில் 277, ஜார்கண்டில் 174, கர்நாடகாவில் 162 மற்றும் குஜராத்தில் 155 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.


2022 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்டவர்களில் 10,295 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் ஆண்களை விட (4,616) பெண்களின் (5,588) தற்கொலைகள் ஓரளவு அதிகமாக உள்ளன. 


2022 ஆம் ஆண்டில் நடந்த தற்கொலைகளில் 23.9% பேர் உயர்நிலைக் கல்வியைப் பெற்றவர்கள் என்றும், உயர்நிலைப் பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக டிப்ளமோ சென்றவர்கள் 11.5% என்றும் கணக்கெடுப்பு கூறுகிறது. அதிக தற்கொலை விகிதம் உள்ள மாநிலங்களில் சிக்கிம் (43.1), கேரளா (28.5) மற்றும் சத்தீஸ்கர் (28.1) ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. 


விபத்து மரணங்கள் :

கடந்த 2022-ல் இயற்கை காரணங்களால் மட்டும் நாட்டில் மொத்தம் 8,060 விபத்து இறப்புகள் பதிவாகியுள்ளன.



இயற்கை சக்திகளால் ஏற்பட்ட இந்த 8,060 இறப்புகளில், 35.8% இறப்புகள் "மின்னல்" காரணமாகவும், , 9.1% இறப்புகள் "வெப்பம் அல்லது Sun Stroke" காரணமாகவும், 8.9% இறப்புகள் அதிக குளிர் வெளிப்பாட்டாலும் ஏற்பட்டுள்ளன.

இயற்கை சக்திகளால் ஏற்பட்ட மொத்தமுள்ள (55.8%) இறப்புகளில், 32.1% இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையேவும், 23.7% இறப்புகள் 30-45 வயதுடையவர்களிடையேவும் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.



இதில் மின்னல் மூலம் அதிக இறப்புகளை கொண்டுள்ள மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் (496), பீகார் (329), ஒடிசா (316), உத்தரப் பிரதேசம் (301), மற்றும் ஜார்கண்ட் (267) ஆகியவை முன்னிலையில் உள்ளன.

ஆதாரங்கள்:

https://ncrb.gov.in/uploads/nationalcrimerecordsbureau/custom/adsiyearwise2022/1701611156012ADSI2022Publication2022.pdf

468 people took their lives every day in 2022: NCRB data

One-third of all 2022 suicides were of daily wage earners, farmers: NCRB report
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை