YouTurn

பீகார் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு! ஆபத்து என்ன?

இந்த தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) கிட்டதட்ட 3 கோடி விளிம்புநிலை மக்களை வாக்காளப் பட்டியலிலிருந்து வெளியேற்றும் என்றும் அவர்களின் குடியுரிமைகளை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

பீகார் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு! ஆபத்து என்ன?

இந்திய தேர்தல் ஆணையம் (ECI), Special Intensive Revision (SIR) என்ற பெயரில் பீகார் மாநிலம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு நடத்தவுள்ளதாக கடந்த ஜீன் 24ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. தகுதியுள்ள அனைத்து குடிமக்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் (Electoral Roll) சேர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், தகுதியற்ற வாக்காளர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் தடுக்கவும், இந்த வாக்காளர் சரிபார்ப்பு பணியை செய்வதாக விளக்கமளிக்கிறது தேர்தல் ஆணையம்.


image.png


தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் இந்த தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) கிட்டதட்ட 3 கோடி விளிம்புநிலை மக்களை வாக்காளப் பட்டியலிலிருந்து வெளியேற்றும் என்றும் அவர்களின் குடியுரிமைகளை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.


முதலில், வெவ்வேறு வகையாக வாக்காளர் சரிபார்ப்பு முறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ’Summary Revision’ முறை என்பது, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டு அதில் திருத்தங்கள் கோரப்படும். இதில் திருத்தங்கள் தொடர்பான மணுக்கள் பெறப்பட்டு திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ’Intensive Revision’ முறை என்பது, கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று குடிமக்களின் விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும். அதில் திறத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கப்பட்டால், அதன்படி திருத்தங்கள் செய்து இறுதி  வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.  


‘Partly Summary and Partly Intensive Revision’ என்ற முறை மேற்கூறிய இரண்டு முறைகளையும் சேர்த்து மேற்கொள்ளப்படுவதாகும். ‘Special Summary Revision’ என்பது வழக்கமான வாக்காளர் சரிபார்ப்புகளில் இருக்கும் குறைகளை கண்டறியப்படும் போது மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்புகளில் நிலவும் குறைபாடுகளைப் பதிவுசெய்து, பின்னர் ‘Special Summary Revision’ முறையில் சரிபார்ப்பு நடத்தப்படும்.


மேற்கூறிய இந்த நான்கு முறைகள்தான் தேர்தல் ஆணையத்தின் கையேடில் (manual) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பீகாரில் தேர்தல் ஆணையம், ’Special Intensive Revision’ என்ற புதிய வாக்காளர் சரிபார்ப்பு முறையை மேற்கொள்கிறது. இப்படியொரு முறை தேர்தல் ஆணையத்தின் கையேடில் குறிப்பிடப்படவே இல்லை. ஆனால் இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் பீகார் மாநிலத்தில் கையேடிலே இல்லாத புதிய முறையை புகுத்தி மாநிலம் முழுவதும் உள்ள வாக்காளர்களின் தகுதியை சோதிக்க போவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் ஏதோ மிகப்பெரிய உள்நோக்கத்துடன் இதனைச் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.


image.png


’Special Intensive Revision’ முறை என்பது, ஒவ்வொரு வீடாக சென்று ஒவ்வொரு நபர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைக்க தகுதியானவரா என்று சரிபார்ப்பதாகும். இந்த முறையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்க புதிய நான்கு முக்கிய அளவுகோல்களை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 


  1. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள், அதற்காக சான்றை மட்டும் அளித்தால் போதுமானது. 


  1. 2003 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 40 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், தங்கள் குடியுரிமை, அடையாளம் மற்றும் வசிப்பிடத்திற்கான ஆவணம் போன்ற ஏதேனும் ஒன்றை சான்றாக வழங்க வேண்டும்.


  1. 21 முதல் 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள், தங்கள் பெற்றோர் 2003 வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டதற்கான சான்றாதாரத்தை வழங்கவேண்டும். அல்லது அந்த 21 முதல் 40 வயதுக்குட்பட்ட நபர்கள் தங்களது அடையாளம், குடியுரிமையுடன் தங்களது பெற்றோரில் யாராவது ஒருவரின் அடையாளம் மற்றும் குடியுரிமையை நிரூபிக்கும் படியான சான்றுகளை வழங்க வேண்டும். 


  1. 2004 க்குப் பிறகு பிறந்த 21 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள், தங்களது பெற்றோர் 2003 வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டதற்கான சான்றினைக் காட்ட வேண்டும். அல்லது அந்த 21 வயதுக்குட்பட்ட நபர்கள் தங்களது அடையாளம் மற்றும் குடியுரிமையை நிரூபிப்பது மட்டுமல்ல தங்களது தாய் தந்தை ஆகிய இருவரின் குடியுரிமை மற்றும் அடையாளத்திற்கான ஆவணங்களையும் சான்றாக வழங்க வேண்டும்.


இவ்வாறு தங்கள் மற்றும் பெற்றோர்களின் அடையாளம் மற்றும் குடியுரிமையை நிரூபிக்க சான்றுகளாக கேட்கப்படும் ஆவணங்களில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவை சேர்க்கப்படவில்லை. மாறாக, பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், பள்ளி கல்லூரிகள் கொடுக்கப்படும் சான்றதழ், ஓய்வூதியம் வாங்குவதற்காக ஆவணம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.


தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த வாக்காளர் சரி பார்ப்பு முறை இரண்டு வகைகளில் மிகவும் தவறானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்பதை நமக்கு கிடைக்கும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 


image.png


முதலில், மிகக் குறுகிய காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் ஆவணங்கள் சரிபார்ப்பை நடத்துவதும்,  குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை கொடுக்கச் சொல்லி மக்களை நிர்பந்திப்பதும் கோடிக்கணக்கான மக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கவே வழிவகுக்கும். பீகாரில் 7.96 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆக பீகாரில் உள்ள 4.74 கோடி மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் சான்றுகளை கொடுக்கவேண்டிய நிலையிலிருக்கிறார்கள். மேலும், பீகாரில் அதிகமான மக்கள் பிறப்புச் சான்றிதழ் போன்ற முறையாக ஆவணங்கள் இல்லாத மக்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். இது ஏழை, பட்டியிலன பழங்குடி மக்களை வாக்காளர் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் தேர்தல் ஆணையம் கோரும் ஆவணங்களை இவ்வளவு குறைந்த காலத்தில் இம்மக்கள் பெறமுடியாது. 


இரண்டாவதாக, விரைவான நகரமயமாக்கல், வேலை மற்றும் கல்விக்கான மக்கள் புலம் பெயர்வது, இளம் குடிமக்கள் 18 வயது நிரம்பி வாக்களிக்கத் தகுதி பெறுதல், ஆவணப்படுத்தப்படாத இறப்புகள் மற்றும் ’வெளிநாட்டு சட்டவிரோத குடியேறிகள்’ வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளர் பட்டியலை சரி பார்க்கவேண்டிய அவசியம் இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுகிறது. அதானால் தான், இவ்வாறு ‘Special Intensive Revision’ முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப் போவதாக சொல்கிறது தேர்தல் ஆணையம்.


image.png


ஆனால், பீகார் மாநிலத்தில் கடந்த 2024 ஜீன் தொடங்கி நவம்பர் வரையில் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெற்று ஜனவரி 2025ல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் திருத்தங்கள் செய்யும் பணி கடந்த ஜீன் 2025 வரை சீராகவே நடைபெற்று வந்தது. ஆனால், திடீரென தேர்தல் ஆணையம் மீண்டும் வாக்காளர் சரிபார்ப்பு செய்யப்போகிறோம் என்று அறிவித்தது. அதுவும் இதுவரை இல்லாத வகையில், தேர்தல் ஆணையத்தின் கையேடுகளில் கூட குறிப்பிடப்படாத ’Special Intensive Revision’ என்ற புதிய முறையில் இதனை செய்யப்போவதாக அறிவித்தது மக்கள் மத்தியிலும் எதிர்க்கட்சிகளின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.



’ASSOCIATION FOR DEMOCRATIC REFORMS’ என்ற அமைப்பு ‘Special Intensive Revision’ முறையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரிப்பது நிறுத்தப்படவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மணுதாக்கல் செய்தது. இதனை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மால்யா பாக்சி அடங்கிய அமர்வு, பீகாரில் நடைபெறும் ‘Special Intensive Revision’-க்கு தடை விதிக்கமுடியாது. அதே நேரத்தில், சான்றாக ஆங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை சான்றாதாரமாக சேர்த்துக்கொள்ள வேண்டுமென்ற பரிந்துரைத்துள்ளது. 


ஆனால் இந்த வழக்கிற்காக வாதாடிய வழக்கறிஞர்கள் கபில் சிபல், விருந்தா குரோவர் ஆகியோர், தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பு என்ற பெயரில் ‘குடியுரிமையை தீர்மானிக்கும்’ செயலில் ஈடுபட்டு வருவதாக கூறினார்கள். தேர்தல் ஆணையத்துக்கு குடியுரிமையை உறுதிப்படுத்த எந்த அதிகார வரம்பும் இல்லை என்றும், அது உள்துறை அமைச்சகத்தின் வேலை என்றும் அவர்கள் வாதிட்டனர்.


2025 வரை சீராக செய்யப்பட்டு வந்த வாக்காளர் சரிபார்ப்பை ரத்து செய்துவிட்டு, இதுவரை இல்லாத புதிய முறையான ‘Special Intensive Revision’ முறையில் பீகாரில் குடியுரிமையை தீர்மானிக்கும் வகையில் செய்ல்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுப்பதை எதிர்க்கட்சிகள் கண்டிக்கிறார்கள். மேலும், இது பாஜக கொண்டு வந்த CAA, NRC வரிசையில் குடியுரிமையை தீர்மானிப்பதற்காக கொண்டு வரப்பட்டது என்றும் விமர்சிக்கிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை