YouTurn

விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையை பறிக்கும் 'SIR'!

முஸ்லிம்கள், பழங்குடி மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், நகர்புற ஏழைகள் ஆகியோரை நியாயமற்ற முறையில் SIR வாக்குரிமை நீக்கம் செய்கிறது.

விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையை பறிக்கும் 'SIR'!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் விதமாக ’சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision (SIR))’ என்பதை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.  லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், கேரளா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களில் இந்த ’சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 


image.png


தமிழ்நாட்டில் வாக்காளர்களிடமிருந்து SIR படிவங்கள் நிரப்பி வாங்கப்பட்ட பின்னர், கடந்த 2025 டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் செய்திகளில் வெளியாகி பேசு பொருளானது. சென்னையில் மட்டும் 14 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்கள். 


image.png


இதேபோல் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது. பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் முடிவில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்படுவது மட்டுமல்லாமல் இந்த SIR நடைமுறையில் கள அளவில் வேலை செய்யும் ’வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகள் (Booth-Level Officer (BLO))’ வேலைப் பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும். 2025 நவம்பர் 04ஆம் தேதி கணக்கின் படியே, 33 BLO அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளது தெரியவருகிறது.


image.png


இவ்வாறு SIR நடைமுறையால் ஏற்பட்ட இன்னல்கள் குறித்து தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில்  பாரத் ஜோடோ அபியான், குடிமை உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (PUCL),  மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NAPM) ஆகிய அமைப்புகளால் ’உலகளாவிய அளவில் வயது வந்தோருக்கான வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய மாநாடு’ என்ற பெயரில் டெல்லியில் கடந்த 2025 டிசம்பர் 20ஆம் தேதியன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விஷயக்கள், வந்தடைந்த முடிவுகள் ஆகியவை பற்றிய அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்  SIR நடைமுறையால் வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு தரப்பு மக்கள் எத்தகைய இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பது குறித்து அந்த மக்களே நேரடி சாட்சியம் அளித்தது பதிவு செய்யப்பட்டுள்ளது. 


image.png


ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் மாவட்டம், குஜராத் மாநிலத்தின் சில மாவட்டங்களோடு எல்லையை பகிர்ந்துள்ளது. இதனால் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ’கோட்ரா’ என்ற பகுதியில் உள்ள மக்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள பகுதிகளுக்கு விவசாய கூலிகளாக குறிப்பிட்ட காலத்திற்கு புலம்பெயர்ந்து சென்று வேலை செய்துவிட்டு திரும்ப வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். விவசாயப் பணிகள் உச்சத்தியில் இருந்த காலத்தில் அவர்கள் அதற்காக புலம்பெயர்ந்து வேலைக்கு சென்றிருக்கும் நேரத்தில் SIR பணிகள் நடந்துள்ளது. 


image.png


இந்த புலம்பெயர் விவசாய தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி வந்து SIR படிவங்களை நிரப்பிக்கொடுக்க அவர்களுக்கு வேலை கொடுத்த நிலவுடைமையாளர்களால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ’கோட்ரா’ பகுதியில் மட்டும் சுமார் 23,000 வாக்காளர்கள் வரைவு பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.


இதேபோல் மத்தியப் பிரதேசம்  ’பத்வானி’ மாவட்டத்தில் உள்ள சிறு கிமாரத்தை சேர்ந்த விவசாய புலம்பெயர் தொழிலாளர்கள் பெயர்களும் நீக்கப்பட்டிருக்கிறது. 


மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மாவோயிஸ்டுகள் தான் மத்திய இந்தியாவின் அமைதிக்கு அச்சுறுத்தல் என்று கூறி அவர்களை ஒடுக்க போலீஸ் மற்றும் இராணுவத்தை மட்டுமல்ல, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மக்களைக் கொண்டே ’சல்வா ஜூடும்’ என்ற படையை உருவாக்கி மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியது அரசு. இந்த ’சல்வா ஜூடும்’ படை அரசின் உதவியுடன் சத்தீஸ்கரில் உள்ள பழங்குடி கிராமங்களில் தீ வைப்பு, கொலை, கொள்ளை ஆகிய சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது. பரவலான எதிர்ப்பிற்கு பின்னர் இந்த படை கலைக்கப்பட்டது. 


image.png


’சல்வா ஜூடும்’ படையின் மோசமான நடவடிக்கைகளால் சத்தீஸ்கர் மாநிலத்தின் ’பஸ்தர்’ பகுதியில் 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்கள். இங்கே வாழ்ந்து வந்த மக்கள் ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டனர். இந்த பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் சரியாக இல்லை (inaccurate) என்று சொல்லப்படுகிறது.


இந்த பகுதிகளுக்கு BLO அதிகாரிகள் அபூர்வமாகவே சென்று படிவங்களை கொடுத்துள்ளார்கள். இதனால் இந்த பகுதியில் 1.5 லட்சம் வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ’பிலாய்’ பகுதியில் உள்ள மக்களிடம் தேவையான ஆவணங்கள் இருந்தாலும் அவர்களுக்கு எந்த வகையான புகைப்படம் ஒட்ட வேண்டும் என்ற குழப்பம் இருந்துள்ளது. அது குறித்து அவர்கள் தெளிவடையும் நேரத்தில், கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்கு முன்பாகவே இவர்களது படிவங்களை வாங்காமலே BLO அதிகாரி தாக்கல் செய்துவிட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் BLO அதிகாரியிடம் விளக்கம் கேட்ட போது, தான் மிகுந்த நெருக்கடியில் வேலை செய்து வருவதாகவும் இதனை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே காலக்கெடுவிற்கு முன்னரே படிவங்களை தாக்கல்  செய்துவிட்டதாக கூறியிருக்கிறார். 


பின்னர் அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்றிருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர் BLO அதிகாரியிடம் பேசிய பிறகு BLO அதிகாரி படிவங்களை ஏற்றுக் கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள முடிந்த தங்களுக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? என்று சரியான கேள்வியை எழுப்புகிறார் அப்பகுதியை சேர்ந்த சின்கா என்பவர். 


மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ’உமரியா’ கிராமத்தில் ’குமக்காட்’ என்ற ஜாதியைச் சேர்ந்த நாடோடி பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அப்பகுதியில் அவர்களில் 150 பேர் வாக்காளராக தகுதியுடன் இருக்கிறார்கள். அவர்களது முன்னோர்கள் 1984 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதற்கான ஆவண சாட்சியங்கள் இருக்கும் நிலையிலும் அவர்களை ரோஹிங்கியா அல்லது வங்கதேச முஸ்லிம்கள் என்று முத்திரை குத்தி SIR மூலம் அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான அச்சுறுத்தல் நிலவுகிறது. அவர்களை அவர்களில் பலர் 2008 வரை வழக்கமாக வாக்களித்து வந்துள்ளனர். ஆனால் அவர்களில் ஒரே ஒருவருடைய பெயர் மட்டுமே 2002 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. 


இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் வாழும் ’மதரிஸ்’ என்ற நாடோடிக் குழுவில் உள்ளவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதில் சிக்கல் நிலவுகிறது. அவர்கள் கிராமம் விட்டு கிராமம் புலம்பெயர்ந்து பிழைப்பு நடத்துவதால், அவர்களுக்கு சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவர்களது முந்தைய தலைமுறையினர் 2002 வாக்காளர் பட்டியலில் இருந்ததற்கான சாட்சியத்தை அவர்களால் அளிக்கமுடியாது. ஏனெனில், அவர்களது பெற்றோர்களுக்கு 2002-ல் வாக்காளர் அட்டையே இருக்கவில்லை. மேலும், அவர்களை படிவம் 6 (Form 6) மூலமாக புதிய வாக்காளர்களாக சேர்த்துக்கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. ஏனெனில், BLO அதிகாரிகள் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களின் படிவம் 6-ஐ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.


பீகார் மாநிலத்தின் குறிப்பிட்ட கிராமப்பகுதிகளில் திருமணமான பெண்கள் தங்களது கணவன் வீட்டில் இருப்பதால், அவர்களது பெற்றோரின் விவரங்களை கொடுக்க முடியாத காரணத்தால் அவர்களது பெயர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.


அரசாங்க வேலை செய்பவர்கள் உட்பட பலர் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களாக கருதப்பட்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் தங்களை உயிருடன் இருப்பதாக நிரூபித்து வாக்காளர் பட்டியலில் இணைக்கச் செய்வது மிகுந்த அலைச்சலான காரியமாக இருக்கிறது. சிலர் இறந்துவிட்டதாக கருதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால், அவர்களுக்கு வரவேண்டிய ஓய்வூதியத்திலும் சிக்கல் ஏற்படுகிறது.


image.png


அகமதாபாத், விதான் சபா தொகுதியில் உள்ள அக்பர் நகர் குடியிருப்பு கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இடிக்கப்பட்டுவிட்டது. BLO அதிகாரி கூறுகையில், இந்த குடியிருப்பு அதிகாரப்பூர்வமாக இடிக்கப்பட்டுவிட்டதால், ’அங்கிருந்த முஸ்லிம்களின் படிவங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது’ என்று தனக்கு உத்தரவு வந்திருப்பதாக சொல்கிறார். தேர்தல் பதிவு அதிகாரி கூறுகையில், ‘அவர்கள் (முஸ்லிம்கள்) இங்கே சட்டவிரோதமாக குடியிருக்கிறார்கள். அதனால் அவர்களது படிவங்களை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறி பாபு நகர் பாஜக சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து கடிதம் வந்ததாக’ கூறுகிறார். 


இதனால், அகமதாபாத் அக்பர் நகரில் இருந்த 1206 நபர்களின் பெயர்களும் ‘இறந்துவிட்டதாக’ குறிப்பிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. 


குஜராத் துவாரகா பகுதியில் கடற்கரையோரத்தில் வாழும் மீனவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றப்பட்டிருக்கிறது. மூன்று கிராமங்களில் உள்ள வீடுகள் மொத்தமும் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிக்கப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு கிராமக்களில் இருக்கும் மக்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்களது பெயர்கள் 2002ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இருந்தது என்பதைக் கூட கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நீக்கப்பட்டிருக்கிறது. 


ஆனால் மூன்றாவதாக இருக்கும் கிராமத்தில் உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். மூன்று கிராமங்களும் முஸ்லிம்கள் வாழும் பகுதிதான் என்றாலும், முதல் இரண்டு கிராமங்கள் வீடுகள் இடிக்கப்படுவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால் தான் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.


தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி (97 லட்சம்) பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலான நபர்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த இரண்டு நகரங்களிலும் கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் குடிசை பகுதிகள் அழிக்கப்பட்டு மக்கள் நகரத்திற்கு வெளியில் துரத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


image.png


அதேபோல், முதுமலை பகுதியில் உள்ள பழங்குடி மக்களும் பெருமளவில் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே அரசாங்க திட்டத்திற்காக மக்கள் வெளிவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அக்பர் நகர் குடியிருப்பு உயிரியல் பூங்கா (Zoo) கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த 12,000 முதல் 15,000 பேரில் 90 சதவீத நபர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டு தற்போது குடியமர்த்தப்பட்டுள்ள ’வசந்த் குஞ்ச்’ பகுதி இன்னும் எந்த தொகுதியிலும் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு SIR படிவமே கொடுக்கப்படவில்லை. மாறாக, அவர்களுக்கு படிவம் 6 மூலமாக புதிய வாக்காளர்களாக சேர்த்துக்கொள்வதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். 


இதேபோல் உத்தர பிரதேச அரசாங்கம் அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்களின் பல வீடுகளை இடித்து அவர்களை வாழிடத்திலிருந்து வெளியேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. 


அசாம் மாநிலத்தில் ’சில நாட்கள் மட்டுமே வாழ்ந்தால் கூட ஓட்டு போட முடியும்’ என்று ஆளும் கட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. CAA மூலம் இந்துகள் பெருமளவில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். அதே நேரத்தில், முஸ்லிம்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.

 

திருநங்கைகள் தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரால் மிக இளம் வயதிலே கைவிடப்படுவதால், அவர்களால் ஆவணங்களை சமர்பிக்க முடிவதில்லை. இதனால் அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் இருக்கிறது.


மேற்குறிப்பிட்டவாறு பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்வேறு தரப்பு மக்களால் அளிக்கப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கையில், பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட SIR என்னும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அரைகுறையான முறையில், 1960 ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளை பின்பற்றாமல் நடத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது. 


மேலும் அதன் நடைமுறையால், புலம்பெயர் விவசாயத் தொழிலாளர்கள், நாடோடி மக்கள், முஸ்லிம்கள், நகரப்புற ஏழைகள், அரச வன்முறையால் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்கள், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் வாழிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், முதியவர்கள், ஏழைகள், பெண்கள், திருநங்கை என சமூகத்தின் அத்தனை விளிம்புநிலை மக்களும் பாதிக்கப்பட்டிருகிறார்கள். இது பெருமளவிலான விளிம்புநிலை மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இதனால் SIR நடைமுறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அதுவரை இடைக்காலமாக அது நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்று இந்த அறிக்கை கேட்டுக்கொண்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை