திருப்பரங்குன்றம் கல்தூணும் சிக்கந்தர் தர்காவும்! வரலாறு என்ன சொல்கிறது?
தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது, அது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிருக்கிறது என்ற பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிவருகிறார்கள் இந்துத்துவவாதிகள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை செய்து வருகிறார்கள். இது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிசம்பர் ஒன்றாம் தேதி வழங்கிய தீர்ப்பில், மலை உச்சியில் உள்ள கல்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தவில்லை. இதனால் திருப்பரங்குன்றத்தில் பெரும் பரப்பு ஏற்பட்டது. போலீஸ்க்கும் அவர்களை மீறி தீபம் ஏற்ற முற்பட்ட இந்துத்துவ அமைப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் மதுரையில் ஊரடங்கு உத்தரவு (144) பிறப்பிக்கப்பட்டது.
ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ”தெளிவான, உறுதியான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாமல் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தனி நீதிபதி (ஜி.ஆர்.சுவாமிநாதன்) தீர்ப்பு வழங்கியுள்ளார்” என்று அரசு தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய மதுரை உயர்நீதிமன்ற அமர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் வக்பு வாரியம் தரப்பில், “1920ஆம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தீபத்தூண் என சொல்லப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்கஸ்தலங்கள் நெல்லித்தோப்பு தர்காவுக்கு தான் சொந்தம்” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் சிக்கந்தர் தர்காவின் நுழைவாயில் முகப்பில் ‘1805’ என்று எழுதப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, ”தர்காவே 1805ல் தான் கட்டப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மலையில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலும் தர்கா கட்டப்படுவதற்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டது. இவ்வாறு இருக்கையில் தீபத்தூண் தர்காவிற்கு எப்படி சொந்தமாக முடியும்?” என்று இந்துத்துவ ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

இது குறித்து சிக்கந்தர் தர்கா நிர்வாகிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம். ’இந்த தர்கா 1805ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது. அப்போது கட்டப்பட்ட நுழைவாயில் முகப்பில் அந்த ஆண்டு (1805) குறிப்பிடப்பட்டுள்ளது. தர்கா நூற்றாண்டுகள் பழைமையானது தான்” என்று அவர்கள் கூறினர்.
’சிக்கந்தர் தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது. அது பழைமையானது அல்ல’ என்ற தகவலை இந்துத்துவவாதிகள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் கூட லின்னேயஸ் ட்ரைப் (Linnaeus Tripe) என்ற புகைப்பட கலைஞரால் 1858ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கொண்டு, ’19ஆம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா இருக்கவில்லை. எனவே தர்கா என்பது கடந்த 100 ஆண்டுகளில் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது தான்’ என்ற பொய்யை பரப்பினார்கள். இதனை நமது ’You Turn’ தளத்தில் அம்பலப்படுத்தி எழுதினோம்.
சிக்கந்தர் தர்கா கட்டப்பட்ட ஆண்டு குறித்து தேடியபோது, கி.பி. 1330 முதல் 1370 வரையிலான காலத்தில் மதுரையில் சுல்தான் ஆட்சி நடைபெற்றது. அதில் கடைசி சுல்தான் தான் சிக்கந்தர் ஷா என்பவர். இவரது நினைவாக தான் சிக்கந்தர் தர்கா எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிக்கந்தர் ஷா என்ற மதுரை சுல்தானின் நினைவாகவே அந்நூற்றாண்டிலே சிக்கந்தர் தர்கா கட்டப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தஞ்சாவூர் பல்கலைகழகத்தின் முன்னாள் வரலாற்று துறை பேராசிரியர் காதர் என்பவரின் கூற்று படி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் கந்தூரி (ஆடு பலியிட்டு விருந்து வைத்தல்) கொடுப்பது 400 ஆண்டுகள் பழைமையான வழக்கம் என்பதும் தெரிய வருகிறது.

மேலும், ஆங்கிலேயர்கள் 1808-09 ஆண்டில் எழுதியுள்ள ஆவணங்களிலே ‘சிக்கந்தர் மலை’ என்றே குறிப்பிடுகிறார்கள். ’1805’ ஆண்டு தர்கா கட்டப்பட்டு அதற்கு அடுத்த மூன்று ஆண்டுகளிலே அதன் பெயர் மலைக்கு சூட்டப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. பல ஆண்டு காலம் தர்கா அவ்விடத்தில் இருந்த காரணத்தினாலே ஆங்கிலேயர்கள் அம்மலையை ’சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் நுழைவாயில் கோபுரம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் 16ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது. இவ்வாறு நுழைவாயில் கோபுரம் கட்டப்பட்ட காலத்தை கொண்டு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 16ஆம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது என்ற முடிவுக்கு வரமுடியுமா? முடியாது! அதேபோல் தான் 1805 ஆம் ஆண்டு சிக்கந்தர் தர்கா புதுபிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட போது வைக்கப்பட்ட கல்வெட்டை கொண்டு சிக்கந்தர் தர்காவின் காலத்தை முடிவு செய்ய முடியாது.

1764ஆம் ஆண்டு ’பத்ரே ஸ்வார்ட்ஸ்’ என்ற ஆங்கிலேயர் எழுதிய குறிப்பு ‘Yusuf Khan: The Rebel Commandant’ என்ற நூலில் இடம்பெற்றிருக்கிறது. அதில் ’சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1923ஆம் ஆண்டில் மதுரை நீதிமன்றத்தில் P.G.ராம ஐய்யர் என்ற நீதிபதியால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் சிக்கந்தர் தர்கா பற்றி சொல்லப்பட்டுள்ளது. அதில், ‘1799ஆம் ஆண்டிற்கு முன்னரே தனகன்குளம் என்ற கிராமம் சிக்கந்தர் தர்காவின் பராமரிப்பு செலவை ஈடுசெய்வதற்காக தானமாக வழங்கப்பட்டுள்ளது’ பற்றி நீதிபதி குறிப்பிடுகிறார். மேலும், சிக்கந்தர் மலை பற்றியும் தர்கா பற்றியும் மதுரை மாவட்ட அரசிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இந்த தர்கா 18ஆம் நூற்றாண்டிற்கும் 100 ஆண்டுகள் பழைமையானதாக இருப்பதாக நீதிபதி ராம ஐய்யர் குறிப்பிடுகிறார்.

இவையெல்லாம், சிக்கந்தர் தர்கா மிகப்பழைமையான ஒன்று என்பதற்கான தெளிவான வரலாற்று சான்றுகளாகும். ஆனாலும், ’தர்கா கடந்த 150 ஆண்டுகளாக தான் இருக்கிறது, அது கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிருக்கிறது’ என்ற பொய்யை திரும்பத் திரும்ப பரப்பிவருகிறார்கள் இந்துத்துவவாதிகள்.