மோரிஸ் வாழைப்பழம் பற்றிய வதந்திகளும்! உண்மையும்!
மோரிஸ் வாழைப்பழம் ஒரு மரபணு மாற்றப்பட்ட பழம் என்று பொய்யான தகவலை பரப்பிவருகிறார்கள்.
”சந்தையில் பரவலாக புழக்கத்தில் இருக்கும் ‘மோரிஸ்’ ரக வாழைப்பழம் கரப்பான்பூச்சி, எலி போன்ற பூச்சி மற்றும் விலங்கினங்களின் மரபணுவைக் கொண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. வாழைத்தண்டை தாக்கும் பூஞ்சையிலிருந்து காக்க இவ்வாறு மரபணு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வாழைப்பழத்தை தாவர வகையிலும் சேர்க்க முடியாது, விலங்கு வகையிலும் சேர்க்க முடியாது. இதனை சாப்பிடுவதால் பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகிறது” என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இதே கருத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் ’Cheran academy fan’ என்ற பிரபலமான யூட்யூப் தளத்திலும் பேசப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கும் முன்பாக ’நக்கீரன்’ இணைய தளத்தில் இந்த கருத்துகள் அடங்கிய கட்டுரை கடந்த 2018ஆம் ஆண்டிலிலே வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த உண்மையை அறிந்துகொள்ள இணையத்தில் தேடினோம்.
மேலே பரப்பப்படும் தகவல்களிலிருந்து இவர்கள் மோரிஸ் வாழைப்பழம் ஒரு மரபணு மாற்றப் பழம் (Genetically Modified Organism) என்று கற்பிதம் செய்துகொள்வதைக் காணமுடிகிறது. இந்தியாவில் மரபணு மாற்றப் பயிர்கள் விவசாயத்தில் அனுமதிக்கப்படுகிறதா? என்று தேடினோம். ‘The Print’ செய்தித்தளத்தில் வெளியான கட்டுரையின் படி, இந்தியாவில் தற்போது அனுமதிக்கப்பட்டிருக்கிற ஒரே மரபணு மாற்றப் பயிர் பருத்தி மட்டும் தான். அதுவும் பணப் பயிர்தான், உணவுப் பயிர் அல்ல. 2009ஆம் மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை சோதனை செய்ய அனுமதித்த இந்திய அரசாங்கம், 2010ஆம் ஆண்டில் அதனை நிறுத்தி வைத்துவிட்டது. இதேபோல் மரபணு மாற்றப்பட்ட கடுகும் பிரச்சினையை சந்தித்தது.

தற்போது உருளைக்கிழக்கு மற்றும் இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட வாழைப்பழம் ஆகிய இரண்டு மரபணு மாற்றப்பட்ட பயிர்களை கள அளவில் சோதனை செய்ய மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுவும் இன்னும் பரவலான விவசாயத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிருக்கு இந்தியாவில் அனுமதியே கிடையாது என்பது தெளிவு. இந்நிலையில், கரப்பான்பூச்சி, எலி ஆகியவற்றின் மரபணுவைக் கொண்ட மோரிஸ் வாழைப்பழம் என்று சொல்லப்படுவது முற்றிலும் பொய்யான தகவலாகும்.
மேலும், இன்று நாம் உண்ணக்கூடிய வாழைப்பழ ரகங்கள் அனைத்தும் மரபணு தேர்வு (Genetic selection) என்ற அடிப்படையில் வந்தவையாகும். இதில் Natural மற்றும் Artificial selection என்று இரண்டு வகைகள் உண்டு. மரபான வாழைப்பழம் (wild species) என்று அறியப்படும் Musa acuminata மற்றும் Musa balbisiana மரபினங்களைச் (species) சேர்ந்த பழங்களில் விதைகள் (Seeds) அதிகமாக இருக்கும். அதனை உணவாக உட்கொள்ள முடியாது. இந்த மரபினங்களைச் சேர்ந்த கிளை மரபினங்கள் (subspecies) மனித நடவடிக்கைகளின் காரணமாக ஒன்று கலந்து புதிய ரக வாழைச் செடிகளை உருவாக்கின. இந்த வாழைச் செடிகளிலிருந்து வரும் பழங்களில் விதைகள் குறைவாக அல்லது விதையே இல்லாமல் இருந்தது. இதுவரை நடந்தது Natural selection. அதே நேரத்தில் மனிதன் வாழையை பெருமளவில் விளைவிக்க அதன் தண்டு உறுதியானதாக இருக்க வேண்டும். இந்த வகையில் மனிதர்கள் உறுதியான தண்டும், விதைகள் இல்லாத பழமும் வரும் வகையில் selective breeding செய்து தங்களது விவசாய தேவைகளுக்கு உகந்த வாழை ரகங்களை உருவாக்கினார்கள். இதுதான் Artificial selection. இதுபோல்தான் பூஞ்சை (Fungal disease) நோயை தாக்குபிடித்து வளரும் வாழை ரகத்தை தேர்ந்தெடுத்து வளர்ப்பார்கள்.

இதற்காக வாழையின் கீழ் வளரும் சிறிய செடியான அடிவாழையை (Sucker) எடுத்து நடுவார்கள். இது பாரம்பரியமாக செய்யப்படுவது. ஆனால், இது அதிக காலம் பிடிக்கக்கூடிய வழிமுறையாகும். இதனால், விவசாயத்திற்கு உகந்த குணங்களை உடைய செடியிலிருந்து திசுகளை (Tissues) எடுத்து அதனை Tissue Culture முறையில் வளர்த்து, அந்த தாய்ச் செடியைச் போல் பல ஆயிரம் செடிகளை குறுகிய காலத்தில் உருவாக்க முடியும்.

Fusarium wilt (TR4) என்று சொல்லக்கூடிய பூஞ்சை வாழைத் தண்டை பரவலாக தாக்கக்கூடியது. இதனை எதிர்த்து தாக்குபிடித்து வளரும் வாழையை தேர்ந்தெடுத்து வளர்க்கிறார்கள். இதேபோல், இந்த பூஞ்சைக்கு எதிரான சக்தியை பிற தாவரங்கள், விலங்குகள் அல்லது இன்னொரு நுண்ணுயிரியின் மரபணுவில் இருந்து கூட எடுத்து வாழையின் மரபணுவில் இணைக்க முடியும். இதுதான் மரபணு பொறியியல் (Genetic Engineering or Gene Editing) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் பயிர்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர் (Genetically Modified Organism) என்று சொல்லப்படும். ஆனால் இதுபோன்ற மரபணு மாற்று வாழை பயிர்கள் இன்னும் சோதனை முயற்சியில் தான் உள்ளது. அது வணிக ரீதயாக விவசாயத்திற்குள் இன்னும் கொண்டுவரப்படவில்லை.
அதே போல், எலி மற்றும் பூச்சிகளின் மரபணுவை கொண்டு ஒரு தாவரம் மரபணு மாற்றம் செய்யப்படுவதால், அது தாவரமும் அல்லாமல் விலங்கும் அல்லாமல் ஒரு இடைநிலை உயிரினமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வது மரபணு அறிவியல் பற்றிய அடிப்படை அறிவு ஏதும் இல்லாத பேச்சாகும். செடிகளுக்கும், பிற விலங்குகளுக்கும், மனிதனுக்கும் மரபணுவில் பல ஒற்றுமைகள் உள்ளன. உதாரணமாக, சிம்பன்ஸி குரங்கின் மரபணுவும் மனிதனின் மரபணும் 96% ஒத்துப்போகக்கூடியது. அதேபோல் கோழியின் மரபணுவுடன் 60% ஒத்துப்போகிறது. வாழைப்பழத்தின் மரபணு கூட மனிதனுடன் 60% வரை ஒத்துப்போகிறது. இதனால் நாம் மனிதனை பறவை என்றோ தாவரம் என்றோ சொல்லமுடியாது. ஒரு செல் (Single Cell Organism) உயிரியிலிருந்து தான் தற்போது உள்ள அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி பெற்று வந்திருக்கின்றன. அதனால், இவ்வாறாக மரபணு ஒப்புமைகள் என்பது இயல்பாகவே இருக்கக்கூடியதுதான்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து Artificial selection மற்றும் Tissue Culture முறையில் விவசாயத்திற்கு உகந்த வாழை ரகத்தை உருவாக்குவதும், மரபணு மாற்றம் செய்த பயிரும் (Genetically Modified Organism) ஒன்றல்ல என்பது தெளிவாக விளங்குகிறது. இணையத்தில் இதுபோன்ற போலி அறிவியல் (Pseudo Science) கருத்துகள் பரப்பப்படுவது குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.