YouTurn

'இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் நேரு' எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி.. நேரு என்ன பேசினார் ?

'இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் நேரு' எனக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி.. நேரு என்ன பேசினார் ?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு, நன்றி தெரிவிக்கும் வகையில், மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 07 அன்று உரை நிகழ்த்தினார். அப்போது பேசுகையில், "முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். அவர் ஒருமுறை மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘‘எந்த வகையிலும் இடஒதுக்கீடு வழங்குவதை நான் விரும்பவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால், அரசின் நிர்வாக திறமையின்மைக்கு வழிவகுக்கும். அரசுப் பணியின் தரம் குறைந்துவிடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.



இதற்கு முன்னரும் பிரதமர் மோடி, கடந்த 5 ஆம் தேதி மக்களவையில் பேசுகையிலும் முன்னாள் பிரதமர் நேரு குறித்து பேசியிருந்தார். அதில், "பொதுவாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை. ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் செய்யும் அளவுக்கு நாம் வேலை செய்வதில்லை என்று பிரதமர் நேரு செங்கோட்டையில் கூறியிருந்தார். இந்தியர்கள் சோம்பேறிகள் மற்றும் குறைந்த புத்திசாலிகள் என்பது நேரு ஜியின் பார்வை." என்று பேசியிருந்தார். 



இந்நிலையில் பிரதமர் மோடி பேசிய இவ்வீடியோக்களை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடக பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.



நேரு பேசியது என்ன ?

1959ல் செங்கோட்டையில் நேரு ஆற்றிய உரையின் முழுப் பதிப்பை, பிரசார் பாரதி யூடியூப் சேனலில் காண முடிந்தது. அதில் பேசியுள்ள நேரு, "இந்தியாவில், பொதுவாக, கடினமாக உழைக்கும் பழக்கம் மக்களிடம் இல்லை. அது நம் தவறு அல்ல. இதுபோன்ற பழக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளவர்கள் செய்யும் அளவுக்கு நாம் வேலை செய்வதில்லை. இந்த நாடுகள் மேஜிக் மூலம் முன்னேறவில்லை, கடின உழைப்பால் தான் முன்னேறியுள்ளார்கள். எனவே, கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம், நாமும் முன்னேற முடியும்." என்று கூறியுள்ளார்.



இதே போன்று நேரு, முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள "Letters For A Nation: From Jawaharlal Nehru To His Chief Ministers" என்ற புத்தகத்தில், 27 ஜூன் 1961 அன்று எழுதியுள்ள கடிதத்தில் நேரு பின்வருமாறு கூறியுள்ளார், "பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு உதவுவது குறித்து சில விதிகள் மற்றும் மரபுகளுடன்  பிணைக்கப்பட்டுள்ளோம் என்பது உண்மைதான். அவர்கள் உதவிக்கு தகுதியானவர்கள். ஆனால், குறிப்பாக சேவைகளில் எந்த வகையான இடஒதுக்கீட்டையும் நான் விரும்பவில்லை. திறமையின்மைக்கு வழிவகுக்கும் எதற்கு எதிராகவும் நான் கடுமையாக எதிர்வினையாற்றுகிறேன் மற்றும் இது இரண்டாம் தர தரநிலைகளையே ஏற்படுத்தும். எனது நாடு எல்லாவற்றிலும் முதல் தர நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இரண்டாம் தரத்தினரை ஊக்குவிக்கும் தருணத்தில் நாம் தொலைந்து போகிறோம்.

தொழில்நுட்பக் கல்வியை உள்ளடக்கிய நல்ல கல்விக்கான வாய்ப்புகளை வழங்குவதே பின்தங்கிய பிரிவினருக்கு உதவுவதற்கான உண்மையான வழி. அரசாங்கம் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது, ஒன்று உலகளாவிய இலவச தொடக்கக் கல்வி, மற்றொன்று மிகவும் பரந்த அளவில் உதவித்தொகைகள்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



மேலும் படிக்க: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்துப் பரப்பப்பட்ட பொய்களின் தொகுப்பு !

இதன் மூலம் பின்தங்கிய பிரிவினருக்கு சம உரிமையையும், நல்ல கல்வி வழங்குவதற்கான வாய்ப்புகளையும் அதிகளவில் ஏற்படுத்தித்தர வேண்டும் என நேரு பேசியிருப்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை