YouTurn

SC/ST நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறதா? உண்மையும் உருட்டுகளும்!

அரசியல் ஆதாயத்திற்காக சீமான், அண்ணாமலை, கிருஷ்ணசாமி ஆகியோர் SC/ST நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவதாக தவறான தகவலை பரப்பிவருகிறார்கள்.

SC/ST நிதியிலிருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறதா? உண்மையும் உருட்டுகளும்!

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த திமுக அரசு, குடும்ப பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி அமல்படுத்தி வருகிறது. 2026ஆம் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களுக்கு சேர்த்தும் கோடைக்கால சிறப்புத்தொகையாக 2000 ரூபாய் சேர்த்தும் மொத்தம் 5000 ரூபாயாக வழங்கியது.


தேர்தலை மனதில் கொண்டு திமுக இவ்வாறு 5000 ரூபாய் வழங்கியிருக்கிறது என்று பல விமர்மினங்கள் எழுந்தது. அதேவேளையில், பட்டியல் சமூக மக்களின் நலக்காக ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மடைமாற்றி, திமுக அரசு மகளிர் உரிமைத்தொகை வழங்கிவருவதாக சீமான், அண்ணாமலை, ’புதிய தமிழகம்’ கிருஷ்ணசாமி, ஷாலின் மரியா லாரன்ஸ் ஆகியோர் பரப்பி வருகிறார்கள்.



இவ்வாறு அவர்கள் பேசுவதற்கு அடிப்படையாக இருப்பது, 2025 டிசம்பர் மாதம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலாகும். ”கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்காக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள சுமார் ரூ. 35,653 கோடி ரூபாய்களில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதியிலிருந்து எவ்வளவு கோடி ரூபாய்கள் பங்களிப்பாக பெறப்பட்டு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கேள்விக்கு அந்த RTI ஆவணத்தில் ஆண்டுவாரியாக பதிலளிக்கப்பட்டுள்ளது. அதில், எண்கள் 789, 796 ஆகிய பிரிவுகளில் Special Component Plan (SCP) கீழ் மகளிர் உரிமைத்தொகைக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்த விவரங்கள் உள்ளது.


ஆனால் நான் இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த சிறப்பு கூறுகள் திட்டம் (Special Component Plan) என்பது ஆதி திராவிடர் நலத்துறைக்காக வழங்கப்பட்ட நிதியை குறிக்கவில்லை. ’Special Component Plan’ என்பது ஆதி திராவிடர் நலத்துறைக்காக ஒதுக்கப்படும் நிதியல்ல. அது பொதுத் திட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு சென்ற சேரவேண்டிய நிதியாகும்.


இந்தியாவில் பொதுத்திட்டங்கள் அமல்படுத்தப்படும் போது அது சமூகத்தில் உள்ள ஆதிக்க பிரிவினருக்கு சென்றுசேரும் அதே வகையில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரான பட்டியல் சமூக மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் சரியாக சென்று சேர்வதில்லை. இதனால் ஏற்கனவே அந்த இரண்டு தரப்பு மக்களுக்கும் இடையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு மேலும் அதிகரிக்கவே செய்கிறது. இதனை சரி செய்யும் வகையில் 1974-75 நிதியாண்டில் பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டம் (Tribal Sub-Plan) என்ற பெயரிலும் 1979-80-ல் செயல்படுத்தப்பட்ட ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தில், சிறப்பு கூறுகள் திட்டம் (Special Component Plan) பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. 


image.png


ஒன்றிய அரசு கொடுத்துள்ள வழிகாட்டுதலின் படி,  Scheduled Castes Sub-Plan (SCSP) என்பது ”ஒரு மாநில அரசால் நடைமுறைப்படுத்தப்படும் எல்லா வகையான பொதுத்திட்டங்களின் பயன்களும் பட்டியலின மக்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு சென்று சேரும் வகையில் நிதி ஒதுக்கப்படவேண்டும்” என்பதாகும். அதாவது, நாம் முன்னரே கூறியபோல், இது ஆதி திராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியல்ல, பொது திட்டங்களுகாக ஒதுக்கப்படும் நிதியில் பட்டியல் சமூக மக்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் சென்று சேரவேண்டிய பங்கு ஆகும்.


உதாரணமாக, ஒரு மாநிலத்தின் மக்கள்தொகையில் பட்டியல் சமூக மக்கள் 16 சதவீதம் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது அந்த மாநில அரசு 100 கோடி செலவில் ஒரு பொதுவான திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால், அதில் குறைந்தபட்சம் 16 கோடி ரூபாய் பட்டியல் சமூக மக்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்கப்படவேண்டும். 


இப்போது அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு வருவோம்.  அதில், 789, 796 ஆகிய பிரிவுகளின் கீழ் மகளிர் உரிமைத்தொகைக்கு 2023-24, 2024-25, 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இது குறித்து தேடியபோது, 2025-26 நிதியாண்டிற்காக சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் ஆவணத்தில் இந்த தரவை காணமுடிந்தது. 


image.png


அதில் சமூக பாதுகாப்பும் நலனும் என்ற தலைப்பின் கீழ் வெவ்வேறு பிரிவின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த விவரங்கள் இருக்கிறது. அதன்படி, 103 என்ற எண்ணின் கீழ் மகளிர் நலக்காக ஒதுக்கப்பட்ட நிதி 9,389 கோடி ஆகும். 789 என்ற எண்ணின் கீழ் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட SCP நிதி 4141 கோடி ஆகும். அதேபோல் 796 என்ற எண்ணின் கீழ் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட SCP நிதி 276 கோடி ஆகும். இதே தரவுகளைத்தான் அந்த RTI ஆவணத்திலும் பார்க்க முடிகிறது.


இது ஆதி திராவிடர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி அல்ல. பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி மக்களுக்கான துணை திட்டங்களின் (SCSP) கீழ் ஒதுக்கப்பட்ட நிதி. 


image.png


இதேபோல் மாநில அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு நலத்திட்டத்திலும், இவ்வாறு பட்டியல் சமூக மக்களுக்கு சென்று சேரும் வகையில் பங்குகள் ஒதுக்கப்படும். பள்ளிக்கல்வித் துறையிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையில் பல்வேறு திட்டங்களுக்கு பட்டியல் சமூக மக்களுக்கு 789 என்ற எண்ணின் கீழும், பழங்குடி மக்களுக்கு 796 என்ற எண்ணின் கீழும் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. 


image.png


அதேபோல், மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி என்பது, ஆதிதிராவிடர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்கும் நிதி (Special Central Assistance for Scheduled Caste Component Plan) என்ற பெயரில் 793 என்ற எண்ணின் கீழ் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதேபோல், ஒன்றிய அரசு பொதுத்திட்டங்களுக்கு ஒதுக்கும் நிதியிலும் குறிப்பிட்ட சதவீத நிதியை இதே போன்று SCSP நிதியாக பிரித்து ஒதுக்கும் நடைமுறை இருக்கிறது. உதாரணத்திற்கு, 2023-24 பட்ஜெட்டில் ஒன்றிய அரசு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு 60,000 கோடி ஒதுக்கிய போது, அதில் 10,500 கோடியை SCSP நிதியாக ஒதுக்கியது. பிரதம மந்திரி வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தின் மொத்த ஒதுக்கீடான 25,103 கோடியில் SCSP நிதியாக 4162 கோடியை ஒதுக்கியது. 


இதுபோன்று ஏற்கனவே ஆதி திராவிடர் நிதி மகளிர் உரிமைத்தொகைக்காக பயன்படுத்தப்படுகிறது என்று எழுந்த புகார்களுக்கு தமிழ்நாடு அரசு தெளிவாக பதிலளித்துள்ளது


RTI கேள்வியில் ’மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறையில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டதா?’ என்றே கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பதிலில் பட்டியல் சமூக மற்றும் பழங்குடி மக்களுக்கான துணைத் திட்டங்களின் நிதி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு RTI-க்கு அளிக்கப்பட்ட பதிலில் தெளிவில்லாமல் இருக்கிறது. இதற்கான பொறுப்பை அந்த அரசுதுறை தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


ஆனால், இந்த தெளிவற்ற தரவுகளைக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளும் வகையில் சீமான், அண்ணாமலை, கிருஷ்ணசாமி ஆகியோர் தவறான தகவலை பரப்பிவருகிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை