ஒரே நாடு ஒரே தேர்தல்: மாநில சுயாட்சியை காவு வாங்கும் ஆபத்து!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமையான 5 ஆண்டுகால ஆட்சி என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
ஒருங்கமைந்த முறையில் (Simultaneous) தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு சமர்பித்த அறிக்கை மத்திய அமைச்சரவையால் கடந்த செப்டம்பர் 18 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த ஒருங்கமைந்த தேர்தல்முறை என்பது நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை குறிப்பிடுகிறது. நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக (Phases) நடைபெறும் இந்த தேர்தலில், வாக்காளர்கள் ஒன்றிய அளவிலும் மாநில அளவிலும் தங்களது அரசாங்கங்களை தேர்ந்தெடுக்கும் வகையில் ஒரே நாளில் தங்களது தொகுதிகளில் வாக்களிப்பார்கள். இதனை ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று பாஜக அரசு பிரபலப்படுத்தி வருகிறது.

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை ஆதரித்து அதிமுக, பாமக ஆகிய மாநில கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது. ஆனால், ’ஒருங்கமைந்த முறையில் தேர்தல் நடத்துவதற்கு சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்கவேண்டியிருக்கும். இது அரசியலமைப்பு விரோதமானதாகும்’ என்று சுட்டிக்காட்டி திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு சமர்பித்த அறிக்கையில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை கொண்டுவரப்படுவதற்கான காரணங்களாக சில அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன. அவை
- அடிக்கடி தேர்தல் நடப்பதால் ஒன்றிய மற்றிம் மாநில அரசுகள் பெரும்பாலும் வரவிருக்கும் தேர்தலில் வெற்றிபெறுவதிலே கவனம் செலுத்துகின்றன. இதனால், அரசு நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
- தேர்தல் நேரத்தில் ‘தேர்தல் கட்டுப்பாட்டு விதிமுறைகள்’ அமலில் இருப்பதால், மக்கள் நல திட்டங்களை அமல்படுத்துவது, வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது, கொள்கை முடிவெடுத்து செயல்படுவது அகியவற்றில் ஏற்படும் முடக்கம்.
- பெரும் எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் தேர்தல் பணிகளுக்காக திருப்பிவிடப்படுவது.
- அதிகமாக செலவுகள் ஏற்படுவது.
மேலும், 1952-1967 காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தது, அதன் பின்னர்தான் தற்போது நடைமுறையிலிருக்கும் முறை வந்ததாக சிலர் வாதிக்கிறார்கள். 1967க்கு முன்பிருந்த காலத்தில் நிலவிய அரசியல் சூழல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை அனுமதிப்பதாக இருந்தது. அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. மேலும் அன்றைய காலத்தில், ஒரு கட்சி ஆட்சி நிலவியதால், ஒன்றிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்ததால், ஆட்சியை கலைப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. இதனால், அன்றைய காலத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமானதாக இருந்தது. மேலும் 1967க்கு முன்பிருந்த காலத்தில், மாநில சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டு ஒரே தேர்தல் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், மோடி அரசு கொண்டுவரவிருக்கும் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைபடுத்த மாநில சட்டமன்றங்கள் அதனது ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் கலைக்கப்படவேண்டும். இதற்கு அரசியலமைப்பு ரீதியான ஒப்புதல் பெறுவதற்காக ’Bill No. 275 of 2024’ என்று சொல்லக்கூடிய ’129ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை’ நிறைவேற்றக் காத்திருக்கிறது மோடி அரசு.

இந்த சட்டத்திருத்தம் ஜனாதிபதியிடம் (President) அதிகாரத்தை மையப்படுத்துவதாக இருக்கிறது. இதுவரை அமைச்சரவையின் அறிவுறுத்தலின் பெயரில் செயல்படக்கூடியவராக இருந்த ஜனாதிபதி, இந்த சட்டத்திருத்தத்திற்கு பிறகு அமைச்சரவையின் அறிவுறுத்தல் இல்லாமல் செயல்படும் அதிகாரம் படைத்தவராக மாறுகிறார்.
மேலும், இந்த சட்டத்திருத்தம், தேர்தல் ஆணையத்திற்கு ஏதேனும் கருத்து இருந்தால் குறிப்பிட்ட எந்தவொரு மாநிலத்திலும் தேர்தலை குறிப்பிட்ட நாட்களுக்கு தள்ளிவைக்க அனுமதியளிக்கிறது. இதனை எளிமையாக விளக்கவேண்டுமென்றால், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பாஜக ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தினாலும், தேர்தல் ஆணையத்தின் மூலமாக தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலை தள்ளிவைக்கமுடியும். பாஜகவிற்கு எப்போது தமிழகத்தில் வெற்றிபெற சூழல் உகந்ததாக இருக்கிறதோ அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்தல் அறிவிக்கப்படும். இதன்மூலம், ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு தேர்தல் களத்தில் மிக உயர்ந்த அணுகூலங்கள் கிடைக்குமாறு செய்யமுடியும். இது சுதந்திரமான தேர்தல் என்பதையும், கூட்டாச்சி தத்துவத்தையும் கேலிக்குள்ளாக்குவதாக இருக்கிறது.
ஆனால், இதே தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலை எந்தக் காரணம் கொண்டு தள்ளிவைக்க முடியாது. இதிலிருந்து, மக்களவை மற்றும் ஜனாதிபதியின் கைகளில் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்டு மாநில அரசுகள் அதிகாரமற்றதாக மாற்றப்படுகிறது.
இந்த சட்டத்திருத்தத்தின்படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமையான 5 ஆண்டுகால ஆட்சி என்பது கேள்விக்குறியாகியுள்ளது. உதாரணமாக, ஒன்றியத்தில் ஒரு அரசு அமைந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏதோவொரு காரணத்தில் தேர்தல் நடந்து புதிய அரசு அமைகிறது என்று வைத்துக்கொள்வோம், அந்த புதிய அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்யமுடியாது. ஒன்றியத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடக்கும் போது தமிழ்நாட்டிலும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படவேண்டும்.
இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டுமானத்தை கேள்விக்குள்ளாக்குவதாக இருப்பதால் இதனை நிராரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிராகம் உண்டு. இதற்கு ’Basic Structure Doctrine’ என்று பெயர்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, பல்வேறு அரசியலமைப்பு திருத்தங்களை செய்தார். இதன் தொடர்ச்சியாக, இந்திரா காந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்தும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்குவதற்காகவும், இந்த திருத்தங்களை நீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்ய முடியாததாகவும் ஆக்கும் ஒரு அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தார்.
இதனை முறியடிக்கும் விதமாக கொண்டுவரப்பட்டதுதான் ’Basic Structure Doctrine’ என்ற வழி. இதன்படி, எந்தவொரு அரசியலமைப்பு சட்டத்திருத்தமும் அரசியலமைப்பின் அடிப்படைகளை சிதைக்கும் வகையில் இருந்தால், அதனை ‘அரசியலமைப்பு விரோதமானது’ என்று நிராகரிக்க உச்சநீதிமன்றத்திற்கு உரிமையுள்ளது என்று கொண்டுவரப்பட்டது.
இந்தவகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் 5 ஆண்டுகள் ஆட்சிக்காலம் என்பது அரசியலமைப்பு சொல்லும் தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை (Basic Structure) ஆகும். அதனை இந்த ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற பெயரில் கொண்டுவரப்படும் சட்டத்திருத்தங்கள் மறுப்பதாக உள்ளது.