YouTurn

சாதாரணப் பெட்டிகளைக் குறைத்து ஏழைகளின் உரிமையைப் பறிக்கிறதா இந்திய இரயில்வே ?

சாதாரணப் பெட்டிகளைக் குறைத்து ஏழைகளின் உரிமையைப் பறிக்கிறதா இந்திய இரயில்வே ?
தீபாவளியை முன்னிட்டு மக்கள் எளிதாக பயணம் செய்வதற்காக கூடுதலாக சில சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டிருந்தாலும், எண்ணற்ற பயணிகளும் சமூக ஊடகங்களில் இந்திய இரயில்வே குறித்து விரக்தியாக பதிவு செய்து வருவதைக் காண முடிகிறது.



அதிலும் குறிப்பாக பலர் "பண்டிகை காலங்களின் போது இரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்திய இரயில்வே தவறியது. இந்திய இரயில்வேயின் வருவாயை அதிகரிப்பதற்காகவே, "பொது"(Unreserved) மற்றும் "சாதாரண படுக்கைவசதி"(Sleeper Coach) கொண்ட பெட்டிகள் அனைத்தும், ஏசி இரண்டாம் வகுப்பு கொண்ட பெட்டிகள் மற்றும் ஏசி மூன்றாம் வகுப்பு கொண்ட பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் தான் முன்பதிவில்லாமல் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இடப் பற்றாக்குறை ஏற்பட்டு, அவர்கள் ஏசி பெட்டிகளில் ஏறி பயணம் செய்யும் சூழல் வந்துள்ளது" என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர். 



ஆனால் இத்தகைய புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து ஒன்றிய இரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஸ்ணவும், இந்தியா டுடே ஊடகமும் விளக்கம் அளித்துள்ளதையும் காண முடிகிறது. எனவே இது குறித்து ஆய்வு செய்து தரவுகளுடன் இங்குத் தெளிவாக விளக்கியுள்ளோம்.

சாதாரணப் பெட்டிகளின் எண்ணிக்கைகளைக் குறைக்கும் இந்திய இரயில்வே:

பொதுவாக இந்தியாவில் பயணங்களைப் பொறுத்தவரையில், ரயில் பயணங்களே முதலிடத்தில் இருந்து வருகின்றன. குறிப்பாக படுக்கை வசதிகளுடன் கூடிய சாதாரண ரயில் பெட்டிகளின் கட்டணம், பேருந்துகளின் கட்டணத்தை விட மிகக் குறைவாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தேர்வாகவும், மாநிலம் விட்டு மாநிலம் சென்று வேலை செய்யும் புலம் பெயர் தொழிலாளர்களின் தேர்வாகவும் ரயில் பயணங்களே இருந்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில், நாக்பூர்-மும்பை துரந்தோ (12289-12290) மற்றும் அமராவதி-மும்பை எக்ஸ்பிரஸ் (12111-12112) ஆகிய ரயில்களின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class Coaches) குறைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து படிப்படியாக நாக்பூர்-புனே, சேவாகிராம், விதர்பா, பிரேர்னா மற்றும் மகாராஷ்டிரா எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களிலும் ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

நாக்பூர்-மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ்:

ஜூன் 2023-க்கு முன்பு வரை நாக்பூர்-மும்பை துரந்தோ ரயிலில் 8 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class) இருந்தன, அது இப்போது 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், மூன்றாம் வகுப்பு ஏசி (AC 3 Tiers) பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் ரயில்வே இணையதளத்தில் பிப்ரவரி 2023-இல் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, ஜூன் 2023 முதல் இந்த இரயில் ஒரு முதல் வகுப்பு ஏசி பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 15 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் 2 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுடன் இயங்கி வரும் என்று அறிவித்தது.



அமராவதி-மும்பை எக்ஸ்பிரஸ்:

இதே போன்று, ஒன்றிய ரயில்வே அமைச்சகம் கடந்த ஜூன் 2023-ல் வெளியிட்டுள்ள திருத்தத்திலும், அமராவதி-மும்பை எக்ஸ்பிரஸ் (12111-12112) ரயில் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில் கடந்த ஜூன் 2022-ன் படி அமராவதி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு முதல் ஏசி வகுப்புடன் கூடிய 2 அடுக்கு ஏசி பெட்டி ( First AC cum AC-2 Tier), 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 4 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 8 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 படுக்கை வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு காவலர் பிரேக் வேன் மற்றும் ஒரு ஜெனரேட்டர் வேனுடன் ரயில் செயல்பட்டு வந்தது என்பதை அறிய முடிகிறது.

ஆனால் இது கடந்த பிப்ரவரி 2023-ல் வெளியிடப்பட்ட செய்தியின் படி, கடந்த ஜூன் 2023 முதல் ஒரு முதல் ஏசி வகுப்புடன் கூடிய 2 அடுக்கு ஏசி பெட்டி ( First AC cum AC-2 Tier), 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 10 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 2 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 4 படுக்கை வசதி இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள், ஒரு காவலர் பிரேக் வேன் மற்றும் ஒரு ஜெனரேட்டர் வேன் இருக்கும்படியாக ரயில் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளன.

இதன் மூலம் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 8-லிருந்து இரண்டாக குறைக்கப்பட்டுள்ளதும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 4-லிருந்து பத்தாக அதிகரித்துள்ளதும் உறுதியாகிறது.



நாக்பூர்-புனே, சேவாகிராம், மகாராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரயில்கள்:

இதே போன்று நாக்பூர்-புனே, சேவாகிராம், விதர்பா, பிரேர்னா மற்றும் மகாராஷ்டிரா எக்ஸ்பிரஸ் ரயில்களின் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் குறைக்கப்படவுள்ளன என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிய முடிகிறது. 

தொடர்ந்து குறையும் ஏழை மற்றும் நடுத்தர ரயில் பயணிகளின் எண்ணிக்கை:

அமராவதி-மும்பை எக்ஸ்பிரஸ் வண்டியில் கடந்த ஜூன் மாதத்திற்கு முன்பு வரை,  4 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளும், 8 சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் இயங்கி வந்தன. ஆனால் தற்போது சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 8-லிருந்து இரண்டாக குறைக்கப்பட்டும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 4-லிருந்து பத்தாக அதிகரித்தும் இயக்கப்படுகிறது.

இதன் மூலம் நீண்ட தூரம் பயணிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்க நிர்பந்திக்கப்படுவதன் மூலம் அவர்கள் பலமடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிக்க கட்டணம் செலுத்த முடியாத ஏழை மக்கள் இரயில் பயணங்களை புறக்கணிக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஒரு சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 72-80 பயணிகளும், முன்பதிவில்லாத பெட்டிகளில் 90-100 பயணிகளும் பயணிக்க முடியும். ஆனால் ஏசி வகுப்பு பெட்டிகளை உயர்த்துவதன் மூலம், இரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைகிறது. ஏனெனில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் 18-24 பயணிகளும், இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியில் 48-54 பயணிகளும், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் 64-72 பயணிகளும் மட்டுமே பயணிக்க முடியும்.

இதே போன்று தி நியூஸ் மினிட் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளது குறித்து தென்கிழக்கு ரயில்வேயிடமிருந்து RTI மூலம் பெறப்பட்ட தரவுகளைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. அதில் "2009-ஆம் ஆண்டு வரை இந்திய இரயில்களில் 70-80% பெட்டிகள், சாதாரண படுக்கை வசதிப் பெட்டிகளாக இருந்தன, மீதமுள்ள 20-30% பெட்டிகள் மட்டுமே ஏசி பெட்டிகளாக இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2022-ல், சாதாரண படுக்கை வசதிப் பெட்டிகள் 70-80%-லிருந்து 50-60%-ஆக குறைந்தும், ஏசிப் பெட்டிகள் 20-30%லிருந்து 40-50%-ஆக அதிகரித்தும் காணப்படுவதை அறிய முடிகிறது.

 

இதே போன்று தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் பல்வேறு அதிவிரைவு இரயில்கள் குறித்தும் யூடர்ன் தரப்பிலிருந்து ஆய்வு செய்து பார்த்தோம். அதில் பெரும்பான்மையான இரயில்களில் முன்பதிவில்லாத (Unreserved) பெட்டிகள் இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கைகளின் அடிப்படையில் தான் இயக்கப்படுகின்றன என்பதை அறிய முடிந்தது.



மேலும் பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், சென்னை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் போன்ற இரயில்களில் அதிகபட்சமாக 6 பெட்டிகள் வரை மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதிலும் குறிப்பாக நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) ரயிலில் அதிகளவில் சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைக்கப்பட்டு, அதிகபட்சமாக 12 பெட்டிகள் வரை மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் இயக்கப்படுகின்றன.



இந்தியா டுடே கடந்த நவம்பர் 16 அன்று ரயில்களில் உள்ள பெட்டிகளின் எண்ணிகையை ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது. அதில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை 4 இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் நாம் தெற்கு ரயில்வே மூலம் இயக்கப்படும் சில ரயில்களை ஆய்வு செய்து பார்த்ததிலேயே, இந்த தரவுகள் தவறாக இருப்பதைக் காண முடிகிறது.

மேலும் சில ரயில்களில் SLR (Sitting cum Luggage Rake) பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இதை முன்பதிவில்லாத பெட்டிகள் எனக் கருதக் கூடாது. ஏனெனில், SLR என்பது பொருட்களை ஏற்றிக் கொள்வதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்காக சில இருக்கைகளை மட்டுமே கொண்ட சிறப்பு பெட்டிகளாகும். இதில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் வைத்திருப்பவர்கள் ஏறிவிட முடியாது.

வந்தேபாரத் காரணமாக மற்ற ரயில்களின் வேகத்தைக் குறைக்கும் இந்திய இரயில்வே:

2019-இல் தொடங்கப்பட்ட வந்தே பாரத் இரயில் சேவை, 110/130 கிமீ வேகத்தில் இயக்க வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் அதிவேக ரயில் சேவைகளில் ஒன்றாகும். ஆனால் இந்தியாவில் இதுவரை இயக்கப்பட்டுள்ள 81 வந்தே பாரத் ரயில்களும், இங்கு நிலவும் மோசமான இரும்பு பாதைகள் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக சராசரியாக 63 கி.மீ முதல் 96 கி.மீ வரையான வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

ஆனால் வந்தே பாரத் ரயில்களில், மக்கள் அதிகமாக பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக, மற்ற ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் தற்போது சமூக ஊடகங்களில் இந்திய ரயில்வே மீது புகார் தெரிவித்துள்ளதையும் காண முடிகிறது.



குறிப்பாக தெற்கு ரயில்வேயில் செயல்பட்டு வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தே பாரத் ரயில் வருகையின் காரணமாக தன்னுடைய இரு வழிப் பயணங்களின் போதும் முன்னர் இயக்கப்பட்டதை விட 15 நிமிடங்கள் தாமதமாக இயங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய இரயில்வே என்ன கூறுகிறது?

  • இவ்வாறு ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது குறித்து கடந்த அக்டோபர் 2020-இல் விளக்கம் கொடுத்துள்ள ரயில்வே வாரியத்தின் அப்போதைய தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினோத் குமார் யாதவ், ஸ்லீப்பர் பெட்டிகள் நீக்கப்படாது; குறைக்கப்படாது என்று தெரிவித்தார். ஆனால்,130-160 கிமீ வேகத்தில் ஓடும் ரயில்களில் உள்ள சாதாரண படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளாக மாற்றப்படும் என்றார். 




  • வந்தே பாரத் ரயில்கள் அறிமுகத்தின் காரணமாகவே மற்ற ரயில்களின் சராசரி வேகம் குறைக்கப்பட்டுள்ளது என்ற புகார்கள் எழுந்து வரும் நிலையில்,  வழித்தட நிறுத்தங்கள் (stops) அதிகரித்து வருவதாலேயே பல பிரீமியம் ரயில்களின் வேகம் குறைந்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

  • வந்தே பாரத் ரயில் வருகையின் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் 15 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், சமீபத்தில் 34 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 199 ரயில் வழித்தடங்ககள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.


இந்தியாவில் மக்கள் தொகை மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் சாதாரண படுக்கை வசதி மற்றும் பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டு வருவது எதிர்காலத்தில் இரயில்களில் சாமானியர்கள் பயணம் செய்ய முடியாத நிலையை உருவாக்கி விடும் என்ற ஐயம் எழுகிறது !

ஆதாரங்கள்:

https://cr.indianrailways.gov.in/view_detail.jsplang=0&id=0,4,268&dcd=7513&did=165278857057916D6F58F259D52F946C4D915F4885659

https://timesofindia.indiatimes.com/city/nagpur/passengers-slam-central-rly-move-to-cut-sleeper-increase-ac-coaches/articleshow/101120799.cms

https://www.thenewsminute.com/voices/opinion-decreasing-sleeper-berths-on-trains-is-hurting-migrant-workers

https://economictimes.indiatimes.com/industry/transportation/railways/how-once-speedy-premium-trains-lost-their-speed-due-to-political-speed-breaks/articleshow/102278875.cms

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/oct/01/superfast-trains-slowdown-intn-isonly-in-one-directionrailway-2619859.html
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை