YouTurn

எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்களை குறிவைக்கும் புதிய மாசோதா!

இந்த மசோதாவை ஒரு கருவியாக பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளின் ஆட்சியை சீர்குலைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி முதல்வர்கள், அமைச்சர்களை குறிவைக்கும் புதிய மாசோதா!

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி (புதன்கிழமை) உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தார். இதில் ஒன்று, 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா. இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால், இதன்படி 5 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ள குற்றங்களுக்காக 30 நாட்கள் வரை தொடர்ச்சியாக நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் அல்லது பிரதமரை பதவியிலிருந்து நீக்கமுடியும். 

image.png


இந்த சட்டத்தின் படி மாநில அமைச்சர் யாரேனும், நடப்பிலிருக்கும் சட்டத்தின் படி ஐந்தாண்டுகளுக்கு மேலாக தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அந்த மாநில முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் ஆளுநர் அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்யலாம். ஒருவேளை, குற்றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் அமைச்சரை பதவி நீக்கம் செய்யச் சொல்லி அப்படியோரு அறிவுறுத்தல் முதல்வரிடமிருந்து ஆளுநருக்கு வரவில்லை என்றால்,  31ஆம் நாளிலிருந்து அவர் அமைச்சராக பதவியில் தொடரமுடியாது. அதாவது, முதல்வரின் அனுமதி அல்லது முடிவு இல்லாமலே ஒரு மாநில அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படலாம்.


இது, ஒன்றிய அமைச்சர்களுக்கும்  பொருந்தும் என்ற சரத்தும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருக்கும் ஒன்றிய அமைச்சரை பதவி நீக்கம் செய்யச்சொல்லி பிரதமர் குடியரசு தலைவருக்கு அறிவுறுத்தல் வழங்கவேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அதற்கு அடுத்த நாளிலிருந்து அந்த ஒன்றிய அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கொள்ளப்படும். 


இதேபோல், பிரதமரோ மாநில முதல்வரோ 30 நாட்கள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அவர்கள் 31ஆவது நாள் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறியப்படுவர்.


மேலும், இவ்வாறு ராஜினாமா செய்யப்படும் அமைச்சர்கள், முதல்வர், பிரதமர் சிறையில் இருந்து விடுவிக்கப்படும் போது, அவர்கள் அந்த பதவியை தொடர எவ்வித தடையுமில்லை என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஒன்றிய அமைச்சர்களையும், பிரதமரையும் கூட உள்ளடக்கி தானே இந்த மசோதா வரையப்பட்டுள்ளது. பிறகு, எப்படி இதனை எதிர்க்கட்சி அமைச்சர்களையும் முதல்வர்களையும் வேட்டையாட கொண்டுவரப்பட்ட மசோதா என்று சொல்லமுடியும்? என்ற கேள்வி இப்போது எழுகிறது.


கடந்த 2014ஆம் ஆண்டில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மத்திய புலனாய்வு பணியகம் (CBI), அமலாக்கத் துறை (ED) போன்ற ஒன்றிய விசாரணை அமைப்புக்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் முடக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  


கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அப்போதைய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 2024 மார்ச் மாதம் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யபட்டார். தமிழ்நாட்டில் இதற்கு செந்தில் பாலாஜி வழக்கை ஒரு உதாரணமாக சொல்லலாம். 


ஆனால், அமலாக்கத் துறையின் கடந்த பத்தாண்டு கால செயல்பாடுகளை கவனிக்கும் போது, அது தொடர்ந்த வழக்கு பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெறுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. நாடாளுமன்றத்தில் பாஜக அரசே கொடுத்துள்ள விவரங்களின் படி, பண மோசடி தடுப்புச் சட்டம், 2002 (PMLA) கீழ் கடந்த 2014 ஆண்டிலிருந்து 2024 ஆண்டு வரையில் 5297 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் அவற்றில் வெறும் 40 வழக்குகள் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல், 2015 ஏப்ரல் மாதத்திலிருந்து 2025 பிப்ரவரி மாதம் வரையிலான கடந்த பத்தாண்டுகளில் அமலாக்கத் துறையால் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் மீது 193 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் வெறும் 2 வழங்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் அமலாக்கத் துறை பதிவு செய்யும் வழக்குகள் பெரும்பாலும் நிரூபிக்கப்படுவதில்லை என்பதை காட்டுகிறது.

image.png


அதேநேரத்தில், செந்தில் பாலாஜி, ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது போடப்பட்டது போல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகள் மீது பெரும்பாலும் எவ்வித வழக்குகளும் பதியப்படுவதில்லை என்பதை பார்க்கிறோம். 


‘The Indian Express' பத்திரிகை மேற்கொண்ட ஒரு ஆய்வில், கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 121 அரசியல்வாதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 115 அரசியல்வாதிகள் அதாவது 95% நபர்கள் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.

image.png


உண்மை நிலவரம் இவ்வாறு இருக்க, இந்த மசோதாவின் படி பிரதமரையும் கூட பதிவி நீக்கம் செய்யமுடியும் என்று சொல்லப்படுவது நம்பகத்தன்மையற்றதாகவே இருக்கிறது. ஒன்றிய அமைச்சர்கள், பிரதமர் வரை செல்ல வேண்டாம். சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்த போதும் கூட அவரை கைது செய்யவில்லை. பிரிஜ் பூஷனை கைது செய்யாதது மட்டுமல்ல அவரது மகன் கரண் பூஷன் உத்தரபிரதேச மல்யுத்த சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுவரை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் 8ஆவது சரத்தின் படி, குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற பிரதிநிதிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்பது நடைமுறையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த மசோதாவின் படி, ஒரு மக்கள் பிரதிநிதி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலே அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இது ‘ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதி தான்’ என்ற இயற்கை சட்டத்தின் அடிப்படையே மீறுவதாக உள்ளது.

image.png


இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்கும் வகையில் உள்ளதாகவும், இந்த மசோதாவை ஒரு கருவியாக கொண்டு எதிர்க்கட்சிகளின் ஆட்சியை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்குரிய மசோதா தற்போது நாடாளுமன்ற இணைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை