YouTurn

மோடி ஓபிசியே இல்லை - ராகுல் காந்தி.. சர்ச்சையும், உண்மையும்.. ஓர் அலசல்!

மோடி ஓபிசியே இல்லை - ராகுல் காந்தி.. சர்ச்சையும், உண்மையும்.. ஓர் அலசல்!
ந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்(OBC) சேர்ந்த குடும்பத்தில் பிறக்கவில்லை. அவர் பொதுப் பிரிவான டெலி வகுப்பில் பிறந்தவர். அப்பிரிவை பாஜக ஆட்சியில் இருந்தபோதுதான் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்தது. மோடி அவரை ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என மக்களிடம் பொய் சொல்லி வருகிறார் எனக் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதற்கு மறுப்பு தெரிவித்து பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

கடந்த 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில் ‘நானே மிகப்பெரிய ஓபிசி தலைவர்’ எனக் கூறினார். இதற்கிடையில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ஒடிசாவில் பேசுகையில் ’பிரதமர் மோடி பொதுப் பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். ஆனால், தான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று மக்களிடம் பொய் சொல்லி வருகிறார். அவர் டெலி வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். 2000ம் ஆண்டு பாஜக அரசு அப்பிரிவினரை ஓபிசி-யில்  இணைத்தது. இதன்படி மோடி பிறப்பினால் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. எனவே அவர் ஒருநாளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டார்’ எனக் கூறினார். 

ராகுல் காந்தி கூறியது தவறான தகவல் என்றும் அதனை அவர் திரும்பப் பெற வேண்டும் என்றும் பாஜக-வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நார்ஹரி அமின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நார்ஹரி அமின் இதற்கு முன்னர் குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும் துணை முதலமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.



அவரது பதிவில், ‘1994, ஜூலை 25ம் தேதி மோத்-காஞ்சி (Modh-Ghanchi) வகுப்பினரை ஓபிசி என அறிவித்த போது நான் காங்கிரஸ் அரசாங்கத்தில் குஜராத் மாநில துணை முதலமைச்சராக இருந்தேன். மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடியும் இதே சாதியைச் சேர்ந்தவர்தான். இந்த விஷயத்தில் ராகுல் காந்தி பொய் சொல்லி ஓபிசி சமூகங்களை அவமதிக்கிறார். நரேந்திர மோடி எம்.பி., எம்.எல்.ஏ.-வாக கூட இல்லாத போது இந்த மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிய ஓபிசி பட்டியலிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். 

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூற்றுப்படி, 1994, ஜூலை 25ம் தேதி முதல்வர் சபில்தாஸ் மேத்தா (காங்கிரஸ்) தலைமையிலான குஜராத் அரசாங்கம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினரின் (SEBC) பட்டியலில் மோத்-காஞ்சி சமூகத்தைச் சேர்த்து தீர்மானம் வெளியிட்டுள்ளது. 



பிறகு, 16 உட்சாதிகளைக் கொண்ட டெலி மற்றும் மோத்-காஞ்சி வகுப்புகளை  ஒன்றிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை 1997ம் ஆண்டு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மேற்கொண்டுள்ளது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஒன்றிய ஓபிசி பட்டியலில் திருத்தம் செய்து டெலி மற்றும் மோத்-காஞ்சி வகுப்பினரைச் சேர்த்தது. இத்திருத்தம் வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற பிறகு 1999 அக்டோபரில்  நடந்தது. 



2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவும் நரேந்திர மோடி ஓபிசி வகுப்பைச் சார்ந்தவர் இல்லை என்கிற வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்போதும் இதே போன்று பாஜக-வினர் மோடி டெலி வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அது ஓபிசி பிரிவில் வருகிறது என்றும் கூறியுள்ளனர். 

பொதுப் பிரிவிலிருந்த டெலி மற்றும் மோத்-காஞ்சி சாதிகளை 1994ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான குஜராத் மாநில அரசு ஓபிசி பிரிவிற்கு மாற்றியுள்ளது. பிறகு 1999 காலகட்டத்தில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசு ஒன்றிய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அச்சாதிகளைச் சேர்த்துள்ளது. இவற்றின்படி பார்க்கையில் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரண்டு கட்சிகளுக்கும் இந்த விஷயத்தில் பங்குள்ளது. 

Link : 

NCBC - 1997
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை