YouTurn

மோடி ஆட்சியில் மாநில அரசுகள் பலமுறை கவிழ்க்கப்பட்டிருக்கின்றன!

பிற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை IT, ED போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலமாக மிரட்டியும் விலை பேசியும் கட்சி மாறச் செய்து பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதை பாஜக திட்டமிட்டுச் செய்துவந்திருக்கிறது.

மோடி ஆட்சியில் மாநில அரசுகள் பலமுறை கவிழ்க்கப்பட்டிருக்கின்றன!

நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பிரதமராக இருந்த போது பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமரான நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு மாநில அரசின் ஆட்சி கூட கலைக்கப்பட்டதில்லை என்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது. 


அரசியல் சாசனப் பிரிவு 356, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்காத/ இயங்க முடியாத மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதியின் ஆட்சியை ஏற்படுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரமளிக்கிறது. இந்த 356 பிரிவைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களைப் பலமுறை  கலைத்திருக்கிறது ஒன்றிய அரசு. 



ஒன்றிய அரசின் இந்த ஆட்சி கலைப்பு அதிகாரத்தைப் பற்றி பரிசீலனை செய்த SR பொம்மை Vs ஒன்றிய அரசு வழங்கு, 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு 1994ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 356 பிரிவின் அதிகாரத்தைப் பயன்படுத்துவது பற்றிய வரம்புகளை விதித்தது. இதன்பின்னர் பிரிவு 356 அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.


2014ஆம் ஆண்டிற்கு பிறகான மோடியின் ஆட்சிக்காலத்திலும் அருணாச்சல பிரதேஷ், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. 


2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து அதனை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாக துண்டாடியது மோடி தலைமையிலான பாஜக அரசுதான். ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒன்றிய அரசால் ஒரு சட்டத்தை அதன் மீது திணிக்க முடியாது என்ற விதிமுறைகளையும் மீறி காஷ்மீர் துண்டாடப்பட்டது.  


image.png


மோடி ஆட்சிக் காலத்தில் பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருந்தாலும், வேறு முறையிலும் மாநிலங்களில் ஆட்சியை கைபற்றி வந்திருக்கிறது பாஜக. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி மாற வைத்து, அதன் மூலம் சட்டமன்றத்தில் உள்ள பெரும்பான்மையைக் குலைத்து, அதன்பின் ஆட்சியை கைப்பற்றும் முறையை பாஜக ஒரு முக்கிய யுத்தியாகவே (Tactic) செயல்படுத்தி வந்திருக்கிறது.


உத்தரகண்ட், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பாஜக இந்த யுத்தியைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. 


2020ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியாவையும், அவரது ஆதரவு MLAகள் 22 நபர்களையும் பிரித்து கமல்நாத் ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. 


கர்நாடகாவில் 2020ஆம் ஆண்டு 14 மாதங்கள் மட்டுமே ஆட்சியிலிருந்த காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசு கழிக்கப்பட்டது. காங்கிரஸிலிருந்து 12 சட்டமன்ற உறுப்பினர்களும் ஜனதா தளத்திலிருந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியுற்று ஆட்சி இழந்தது கூட்டணி அரசு. 


புதுச்சேரியில் 5 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் ராஜினாமா செய்ததால் 2021ஆம் ஆண்டு நாராயணசாமி அரசு கவிழ்க்கப்பட்டது. 


சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவது அதிகரித்த வண்ணமிருப்பது புதிய நிகழ் முறையாகப் பார்க்கப்பட்டது.  இதுபற்றி Association for Democratic Reforms (ADR) என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி 2016 முதல் 2020 வரை எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியிருக்கிறார்கள், எந்த கட்சியிலிருந்து எந்த கட்சிக்கு மாறியிருக்கிறார்கள் என்பது குறித்து இந்த ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வு முடிவில், 405 சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) கட்சி மாறியிருக்கிறார்கள் என்பதும் அதில் 170 (42%)  சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸில் இருந்து வேறு கட்சிகளுக்கு மாறியவர்கள் என்பதும் தெரியவருகிறது. 


காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளிலிருந்து வெளியேறியவர்களில் 44.9% நபர்கள் பாஜகவில் தான் இணைந்துள்ளார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 


தெலுங்கானா மாநிலத்தில் 2023 தொடக்கத்தில் ஆட்சியிலிருந்த ‘பாரத் ராஷ்ட்ர சமதி (BRS)’ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சி மாறும் படி பேரம் பேசியது பாஜக. இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மூன்று நபர்கள் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அரசியல் ரீதியான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நபர்கள் மீது வருமான வரித்துறை (IT), அமலாக்கத்துறை (ED) போன்ற துறைகளை ஏவி, மிரட்டி  அவர்களைக் கட்சி மாறும் படி நிர்ப்பந்தம் செய்தது நாடு முழுவதும் பெரும் பேசுபொருளானது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து பாஜக பிற கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை IT, ED போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் மூலமாக மிரட்டியும் விலை பேசியும் கட்சி மாறச் செய்து பல மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு செய்துவந்திருப்பதை அறியமுடிகிறது. ஆனாலும், மோடி சர்வாதிகாரி இல்லை, ஜனநாயகவாதி என்று சமூக வலைத்தளங்களில் பாஜக ஆதரவாளர்கள் பரப்புகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை