குற்றப் பின்னணி உடையவர்களுடன் வலம் வரும் ஆதீனம்!
இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய குற்றப் பின்னணியுடைய நபர்களுடன் மதுரை ஆதீனம் சேர்ந்து நிற்பதும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசுவதும் அவரது நடவடிக்கைகள் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது
கடந்த மே 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனத்தின் கார் உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து பேட்டியளித்த மதுரை ஆதீனம், "விபத்து ஏற்படுத்தியவர்கள் குல்லா அணிந்திருந்தார்கள், தாடி வைத்திருந்தார்கள், காரில் நம்பர் பிளேட் இல்லை, ரொம்ப தூரம் துரத்தி பேரிகேடை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள்" என்று கூறினார். இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியதை ’தமிழ் ஜனம்’ என்ற வலதுசாரி ஊடகமும், இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற சங்கப் பரிவார அமைப்புகளும் செய்தி மற்றும் அறிக்கைகளாக வெளியிட்டு பரப்பினர்.

ஆனால், தன்னை கொல்ல சதி நடந்ததாக மதுரை ஆதீனம் சொன்னது உண்மையல்ல என்பதை ‘கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை’ வெளியிட்ட அறிக்கை அம்பலப்படுத்தியது. சம்பவம் நடந்த இடத்திலிருந்த CCTVகளை ஆய்வு செய்து, மதுரை ஆதீனம் அவர்கள் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்றதும், வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவாக இருந்ததும் தான் விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
இந்த விபத்தை பயன்படுத்தி மதுரை ஆதீனம் மத வெறுப்பு பிரச்சாரம் செய்ய முயன்றது குறித்து ’You Turn’ தளத்தில் ஏற்கனவே வீடியோ வெளியிட்டுள்ளோம்.
இந்நிலையில், ’தன்னை கொல்ல சதி நடந்ததாக’ பத்திரிகையாளர்களிடம் பேசும் அவரைச் சுற்றி நின்றிருந்த நபர்களில் இரண்டு பேர் குற்றப்பின்னணியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில், இந்த விபத்து நடந்தபோது காரை ஓட்டிய நபர் என்று ஒருவரை மதுரை ஆதீனம் அறிமுகப்படுத்துகிறார். அவர் பெயர் செல்வகுமார். இவர் இந்து முன்னணி அமைப்பில் இருந்தபோது, திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள சர்ச்சைகுரிய கைலாசநாதர் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதற்காக போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் சிக்கந்தர் தர்கா உள்ளது. இரண்டு மதங்களிடையிலான பிரச்சினை காரணமாக அங்கே உள்ள கைலாசநாதர் தூணில் 1967ஆம் ஆண்டிற்கு பின்னர் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை மீறி இந்து முன்னணி நிர்வாகிகளாக இருந்த செல்வகுமார் மற்றும் அரசுபாண்டி தீபம் ஏற்றியுள்ளனர். இதனால் போலீஸார் இவர்களை கைது செய்து 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவை மையமாக வைத்து சங்கப் பரிவார அமைப்புகள் பிரச்சினை செய்து வருவது குறிப்பிடத்தது. இதன் உச்சமாக கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பு ஆயிரக் கணக்கில் ஆட்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய எச்.ராஜா ”அயோத்தி போல முதல் யுத்தம் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தில் தொடங்கிவிட்டது” என்று மதங்களுக்கு இடையேயான மோதலை தூண்டும் வகையில் பேசினார்.

மதுரை ஆதீனத்துடன் இருக்கும் மற்றொருவர் பழ. சந்தோஷ் குமார். இவர் தஞ்சாவூரின் ’இந்து எழுச்சி பேரவை’ என்ற அமைப்பின் தலைவர். கூட்டம் ஒன்றில், தமிழ்நாட்டில் திமுக அரசாங்கம் 200க்கும் மேற்பட்ட கோவில்களை இடித்திருக்கிறது என்று பேசியதற்காக அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டவர். இந்த பழ. சந்தோஷ் குமார் தலைவராக இருக்கும் ’இந்து எழுச்சி பேரவை’ அமைப்பு ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ என்ற அமைப்புடன் தொடர்புடையது.

கடந்த 2018 ஏப்ரல் மாதம் ’இந்து எழுச்சி பேரவை’ சார்பில் இந்து மதத் தலைவர்களின் சங்கமம் நடத்தப்பட்டது. அதில் முக்கியமான பங்கு வகித்தவர் இந்த பழ. சந்தோஷ் குமார்.
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம். கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்ற முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சனாதன் சன்ஸ்தா, ஸ்ரீ ராம் சேனா, இந்து யுவ சேனா போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகளை செய்த இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுக்கும் இந்த ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ என்ற அமைப்பிற்கும் தொடர்புகள் இருக்கிறது.

மேற்கூறிய ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ அமைப்பால் நடத்தப்பட்ட சங்கமம் போன்ற கூட்டங்கள் தான் இந்த இந்து தீவிரவாத அமைப்புகளின் சந்திப்புகளுக்கு உதவியதாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். அதாவது முற்போக்கு சிந்தனையாளர்களை படுகொலை செய்வதில் பழ. சந்தோஷ் குமார் தொடர்பிலிருக்கும் ‘இந்து ஜனஜக்ருதி சமிதி’ நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதாகும்.
இத்தகைய குற்றப் பின்னணியுடைய நபர்களுடன் மதுரை ஆதீனம் சேர்ந்து நிற்பதும், இஸ்லாமிய வெறுப்பு பேச்சுகளை பேசுவதும் அவரது நடவடிக்கைகள் மீது வலுவான சந்தேகத்தை எழுப்புகிறது. மதுரை ஆதீனத்தின் இதுபோன்ற கூட்டுகளும் செயல்களும் தமிழ்நாட்டில் நிலவிவரும் மத நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.