கேரள இந்து கோயிலில் மிலாடி நபி கொண்டாட்டம்… காரணம் என்ன?
கேரளா புலமந்தோல் பகுதியில் தனியார் நிர்வகிக்கும் கோவிலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஓணம் - மிலாடி நபி தொடர்பான நிகழ்ச்சியை திரித்துப் பரப்புகின்றனர்.
கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி (LDF) கூட்டணி சார்பில் பினராயி விஜயன் முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் கேரளாவில் உள்ள இந்து கோவிலில் மிலாடி நபி கொண்டாடப்படுவதாகவும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
இந்த வீடியோ கேரள மாநிலம் புலமந்தோல் என்ற பகுதியில் உள்ள கோயிலில் எடுக்கப்பட்டதாக யூடியூப் பக்கம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மேற்கொண்டு தேடியதில், பலூர் சுப்பிரமணிய சாமி கோயில் பேஸ்புக் பக்கத்தில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றது.
ஓலியா என்ற இஸ்லாமியர், நாராயண பணிக்கர் மற்றும் உன்னி பணிக்கருக்கு அளித்த பரிசு இக்கோவிலில் இன்றும் இருப்பதாக அப்பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
பரவக்கூடிய வீடியோ குறித்தும் அக்கோயிலில் உள்ள நடைமுறை குறித்தும் நிர்வாக அறங்காவலர் உன்னி கிருஷ்ண பணிக்கரை தொடர்புகொண்டு பேசியபோது, “இது எங்கள் குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் கோயில். இந்த முறை ஓணமும், மிலாது நபியும் கிட்டத்தட்ட ஒரே நாளில் வந்ததையொட்டி இம்மாதிரியான நிகழ்ச்சி நடந்தது. இவ்விடத்தில் இந்து பண்டிகை மட்டுமின்றி கிறிஸ்துமஸ், மிலாது நபி போன்ற மாற்று மத பண்டிகைகளும் கொண்டாடப்படும்” எனக் கூறினார்.
நடனம் ஆடுபவர்களும் அருகில் உள்ளவர்களும் காலணி அணிந்திருப்பது குறித்துக் கேட்டதற்கு, “கோயிலும் எங்கள் வீடும் அருகருகே அமைந்துள்ளது. வீடியோவில் நீங்கள் பார்க்கக்கூடிய இடம் கோயிலுக்கு வெளியே உள்ள பகுதி. அந்த இடத்தில் அனைவரும் காலணி அணிவது வழக்கம்தான். யாரும் கோயிலுக்குள் காலணி அணிந்து செல்லமாட்டோம்” என விளக்கம் அளித்தார்.
அவரது விளக்கத்திலிருந்து தனியாரால் நடத்தப்படும் இக்கோயிலில் அனைத்து மத பண்டிகைகள் நடத்தப்படுவதும் நடனம் ஆடக்கூடிய பகுதி கோவிலுக்கும் வீட்டிற்கும் இடைப்பட்ட பகுதி என்பதும் தெரிய வருகிறது. மத நல்லிணக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்வை மதம் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் திரித்துப் பரப்புகின்றனர்.