’Heguru’ பயிற்சியை அங்கீகரிக்கிறதா ஒன்றிய அரசு ஆவணம்?
’Heguru’ முறை பற்றி சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்ட எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசின் ‘நவ்சேத்னா’ ஆவணத்தில் இல்லாத தகவல்களையும் தவறான கருத்துகளையும் பரப்பிவருகிறார்கள் இந்திரஜா தம்பதியினர்.
நடிகர் ரோபா சங்கரின் மகளான இந்திரஜா, கடந்த மாதம் ’Heguru’ என்ற நிறுவனத்திற்கான விளம்பரத்தில் நடித்திருந்தார். ’Heguru’ என்று சொல்லப்படும் நிறுவனம், குழந்தைகளின் மூளை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் பயற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறது. ‘இந்திரஜா’ தனது கணவர் மற்றும் ஆறு மாத குழந்தையுடன் இந்த விளம்பரத்தில் தோன்றியதை சமூக வலைத்தளத்தில் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும், குழந்தைகளின் வலது பக்க மூளை வளர்ச்சியை தூண்டுவதாக சொல்லப்படும் இந்த ’Heguru’ என்ற பயற்சி முறை பற்றியும் பல சந்தேகங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்திரஜா மற்றும் அவரது கணவர் அவர்களது யூடியூத் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில், ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ‘ஆரம்பகால குழந்தை பருவத்தில் வளர்ச்சியை ஊக்கப்படுத்தற்காக நெறிமுறைகளை உள்ளடக்கிய ’நவ்சேத்னா’ என்ற ஆவணத்தை முன்வைத்து சில கருத்துகளை அவர்கள் பேசியுள்ளார்கள். அந்த வீடியோவில் ‘நவ்சேத்னா’ ஆவணத்தில் சொல்லப்படுள்ளதாக இந்திரஜா மற்றும் அவரது கணவர் சொல்வதன் உண்மைத்தன்மை பற்றி ‘You Turn’ தரப்பில் ஆய்வு செய்தோம்.

முதலில், அவர்கள் ’Heguru’ என்பது ஒரு கல்விமுறை இல்லை, இது ஒரு Activity என்று கூறுகிறார். அதாவது ’Heguru’ என்பது Academic அல்லது Education அல்ல. அதுவொரு Activity மட்டுமே என்று கூறுகிறார்கள். ஆனால், இந்திரஜா விளம்பரப்படுத்தும் ’Heguru Chennai’ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களிலே ‘JAPAN CERTIFIED RIGHT BRAIN EDUCATION’ என்றே குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, ’Heguru’ என்பது கல்விமுறை அல்ல என்று இந்திரஜா தம்பதியினர் சொல்வது தவறான தகவல் என்பது தெரிகிறது.

அடுத்ததாக, ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட ‘நவ்சேத்னா’ என்ற ஆவணம், குழந்தைகளின் கற்றல் மற்றும் மூளை வளர்ச்சிக்கான செயல்திட்டம் என்றும் இந்த செயல்திட்டத்தை போலவே தான் ’Heguru’ முறையும் செயல்படுத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள். இது தவறான தகவலாகும். ’Heguru’ முறை என்பது வலது மூளை செயல்பாடுகளை தூண்டுவது என்றே சொல்லப்படுகிறது. ஆனால், ‘நவ்சேத்னா’ என்பது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியை பற்றி பேசுவதாக இருக்கிறது. குறிப்பாக, மேற்குறிப்பிட்டுள்ள ‘நவ்சேத்னா’ ஆவணத்தில், குழந்தைகளுக்கு மொழியை கற்றுக்கொடுப்பது, வார்த்தைகளை (vocabulary) புரிந்துகொள்ள பழக்குவது ஆகியவற்றுக்கான செயல்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழி, வார்த்தைகளை புரிந்துகொள்வது இடது மூளையின் செயல்பாடு என்று பொதுவாக சொல்லப்படுகிறது.

மேலும், வலது மற்றும் இடது மூளைப் பகுதிகள் தனித்தனியாக செயல்படுவதில்லை, இரண்டு ஒருங்கிணைந்த முறையில்தான் செயல்படுகின்றன என்று சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. மொழியை புரிந்துகொள்வதில் கூட இடது வலது மூளைப் பகுதிகள் ஆகிய இரண்டின் பங்கும் இருக்கிறது. ‘நவ்சேத்னா’ ஆவணம் வலது மூளை பற்றி மட்டுமல்லாமல், குழந்தைகளின் உடல், மனம், மொழி ஆகிய அனைத்தும் உள்ளடங்கிய (Holistic) வளர்ச்சி பற்றி பேசுகிறது.

அதனால், ’Heguru’ முறைக்கு ‘நவ்சேத்னா’ ஆவணமே அங்கீகாரம் அளித்துள்ளது போல் இந்திரஜா தம்பதியினர் சொல்வது தவறான கருத்தாகும்.
தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களில் ஆய்வு செய்ததில் தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்தனைத் திறன் தற்போது இல்லை என்றும், குழந்தைகளின் சிந்தனைத் திறன் வெகுவாக குறைந்துள்ளதாகவும் சொல்கிறார்கள் இந்திரஜா தம்பதியினர்.
இது குறித்து இணையத்தில் தேடியதில், இதுபோன்ற எந்த ஆய்வும் செய்யப்பட்டதாக தெரியவில்லை. தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைந்துள்ளது என்பதற்கான எந்தவித சான்றாதாரமும் இல்லை.

மேலும், குழந்தை பிறந்ததிலிருந்தே ‘அங்கன்வாடி’ மையங்களில் சேர்க்குமாறு அரசு ஊக்கப்படுத்துவதாக சொல்கிறார்கள் இந்திரஜா தம்பதியினர். ஆனால், ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலே, ‘முதல் மூன்று ஆண்டுகளில் குழந்தையின் வளர்ச்சியை ஆதரிக்கவும் அளவிடவும் வீட்டிலும் அங்கன்வாடி மையங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அங்கன்வாடி பராமரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக இந்த இந்த ‘நவ்சேத்னா’ ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக’ குறிப்பிடுகிறது.
இதிலிருந்து குழந்தைகள் பிறந்த உடனே அங்கன்வாடியில் சேர்ப்பது அரசின் நோக்கமல்ல என்பது தெளிவாக தெரிகிறது. மாறாக, வீட்டிலும் அங்கன்வாடியிலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுமாறு குழந்தை பராமரிப்பாளர்களுக்கு வழிகாட்டுவதே ஆகும்.
இதிலிருந்து, குழந்தை பிறந்ததிலிருந்தே ‘அங்கன்வாடி’ மையங்களில் சேர்க்குமாறு அரசு ஊக்கப்படுத்துவதாக இந்திரஜா தம்பதியினர் சொல்வது தவறான தகவல் என்பது தெரிகிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து ’Heguru’ முறை பற்றி சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்ட எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளிக்க இந்திரஜா தம்பதியினர் ஒன்றிய அரசின் ‘நவ்சேத்னா’ ஆவணத்தில் இல்லாத தகவல்களையும் தவறான கருத்துகளையும் பரப்பிவருவது நிரூபணமாகிறது.