YouTurn

இந்திய நீதி பரிபாலன அமைப்பின் செயல்பாடு பற்றிய பரிசீலனை: India Justice Report -2025!

இந்திய நீதி பரிபாலன முறையில் உள்ள குறைபாடுகளை குறிப்பிட்டு அது இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.

இந்திய நீதி பரிபாலன அமைப்பின் செயல்பாடு பற்றிய பரிசீலனை: India Justice Report -2025!

இந்திய நீதி பரிபாலன முறை பற்றிய அறிக்கை என்பது ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்திய மாநிலங்களின் நீதி வழங்கும் திறனை அளவீடு செய்து வைக்கப்படுவதாகும். மேலும் உலகளவில் இந்தியாவின் நீதி பரிபாலன முறை (Justice delivery system) எத்தகைய திறனுடையதாக இருக்கிறது, அதில் உள்ள குறைபாடுகள் சவால்கள் என்ன என்பது குறித்தும் இந்த அறிக்கை பரிசீலனை செய்கிறது. நீதி வழங்குவது தொடர்பாக வேலை செய்யும் காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஆகிய நான்கு துறைகள் பற்றி இந்த அறிக்கை ஆராய்கிறது. இந்தத் துறைகளில் உள்ள மனிதவளம், உள்கட்டமைப்பு, இதற்காக ஒதுக்கப்படும் நிதி, பணிச்சுமை, வேலைகளில் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் ஆகிய கூறுகளைக் அளவீடாக கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தவகையில் Common Cause என்ற அரசுசாரா நிறுவனம், சமூக நீதிக்கான மையம் ஆகயவை இணைந்து டாடா குழுமத்தின் உதவியுடன் இந்திய நீதி பரிபாலன முறை பற்றிய அறிக்கை - 2025 என்ற ஆவணத்தை வெளியிட்டு இருக்கின்றன.


 


கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய தென் மாநிலங்கள் இந்தப் பட்டியலில் மேலிடத்தில் உள்ளன. அதவாது வடெ மாநிலங்களை விட ஒப்பீட்டளவில் சிறப்பாக செயல்பட்டுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது. இது இந்த மாநிலங்கள் நீதி பரிபாலன அமைப்பிற்காக தொடர்ச்சியாக  முதலீடு செய்து நல்ல நிர்வாகத்தை கொண்டிருப்பதை காட்டுகிறது. அதேவேளையில், 2020, 2022 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.


 

இந்த அறிக்கை முதன்மையாக சுட்டிக்காட்டும் விஷயம் என்னவென்றால், போலீஸ் நீதித்துறை போன்ற துறைகளில் பணியில் இருக்கும் பெரும்பாலான நபர்கள் ஆண்களாகவும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தான். பெண்கள், பட்டியலின மக்கள், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டதைவிட குறைவான அளவிலே பணியில் இருக்கிறார்கள்.

 

காவல்துறையில் பட்டியலின மக்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சேர்ந்த மொத்தமாக 59 சதவீதம் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் பெரும்பாலும் (61%) கான்ஸ்டபிள் போன்ற எளிய பணியாளராகவே இருக்கிறார்கள். காவல் கண்காணிப்பாளர் போன்ற பதவிகளிலும் அதற்கும் உயர்வான பதவிகளிலும் இவர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

இந்தியா முழுவதும் காவல்துறையில் வெறும் 11.75 சதவீத பெண்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் அவர்களும் பெரும்பாலும் கீழ்நிலை பதவிகளிலே உள்ளனர் என்ற கசப்பான உண்மையை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

தற்போதைய நிலை இப்படியே நீடித்தால், தமிழ்நாட்டில் காவல்துறையில் 33 சதவீதம் பெண்களுக்கான இடங்கள்   நிரப்பப்பட இன்னும் 20.4 ஆண்டுகள் ஆகும் என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

 

இந்தியாவில் பல மாநிலங்களில் அதிகாரிகள் அளவிலான பதவிகளில் மேற்கூறிய விளிம்புநிலை மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி அளவு கூட அவர்களால் நிரப்பப்படவில்லை.

 

நீதித்துறையிலும் கூட கீழமை நீதிமன்றங்களில் 38 சதவீத பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் இந்த அளவு குறைந்து 14 சதவீத பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றத்தில் 6 சதவீத பெண் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். இது அதிகார மட்டம் உயர உயர அங்கே பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே வருவதைக் காட்டுவதாக இருக்கிறது.


 

இருக்கின்ற பதவிகளில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரதிநிதித்துவம் சரியாக வழங்கப்படவில்லை என்பது ஒரு பக்கம் என்றால், தேவையான அளவு பணியிடங்கள் உருவாக்கப்படாமல் இருப்பது மற்றொரு பக்கமாகும்.

 

1987ஆம் ஆண்டு சட்ட ஆணையம், 'ஒரு மில்லியன் (10 லட்சம்) மக்களுக்கு 50 நீதிபதிகள் இருக்க வேண்டுமென்று’ நிர்ணயித்தது. ஆனால் இந்த விஷயத்தில் தேசிய சராசரியே 15.9 தான் உள்ளது. அதாவது, இந்தியாவில் 50 நீதிபதிகள் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் 16 நீதிபதிகள் தான் உள்ளனர். தமிழ்நாட்டில் 14.4 நீதிபதிகள் உள்ளனர். இவ்வாறு தேவையான பணியிடங்களில் பாதி அளவு கூட இல்லாத நிலையில் இந்திய நீதித்துறை செயல்பட்டு வருகிறது. இதனால் பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

 

இதனால் கீழமை நீதிமன்றங்களில் மிக அதிகமான வழக்குகள் தேங்கியிருக்கிறது. தேங்கியிருக்கும் வழக்குகளில் 25 சதவீத வழக்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் பதியப்பட்டதாகும். இதனால் எளிய மக்களுக்கு நீதி கிடைப்பது மிக தாமதம் ஆக்கப்படுகிறது.

 

தேவையான அளவு பணியிடங்கள் உருவாக்கப்படாதது மட்டுமல்ல, இருக்கும் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் போலீஸ், நீதிமன்றம், சிறை ஆகிய துறைகளில் உள்ள முக்கிய பதவிகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் உள்ளன.

 

அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 39A படி ஒவ்வொரு குடிமகனும் இலவச சட்ட ஆலோசனை பெற உரிமை உண்டு. இந்த இலவச சட்ட ஆலோசனை (Free Legal Aid) என்பது மக்கள் மத்தியில் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நீதித்துறை நடைமுறைகளுக்காக செலவு செய்யமுடியாத அளவு வறுமையில் இருக்கும் நபர்களுக்கு  சட்ட ரீதியான சேவைகளை வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

 

பல மாநிலங்களில் 10,000 - 30,000 நபர்களுக்கு ஒரு வழக்கறிஞர் என்ற விகிதத்தில் தான் இலவச சட்ட ஆலோசனையின் நிலை இருக்கிறது. இந்த வழக்கறிஞர்களுக்கும் மோசமான பணிச்சூழல், முறையாக ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளால் எளிய மக்களுக்கு நீதிமன்றத்தை அணுகுவதே பெரும் சிக்கலாக இருக்கிறது.

 

இதேபோல் தடயவியல் நிபுணர்களும் பல மாநிலங்களில் பற்றாக்குறையாக உள்ளதாகவும் அதனால் பல வழக்குகளில் தடயவியல் சோதனைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.  பல மாநிலங்களில் ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு தடயவியல் நிபுணர் கூட இல்லாத நிலை இருக்கிறது.

 

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 76% விசாரணை கைதிகள் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையை இந்த அறிக்கை மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், இந்திய சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைக்கப்படுவதாகவும் கூட்ட நெரிசல் பெரும் சிக்கலாக இருப்பதாகவும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள சிறைகளில் அனுமதிக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.


 

மேலும் விசாரணை கைதிகளில் பெருமளவு முஸ்லிம்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர் ஆகியோர் தான் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் முஸ்லிம்களின் விகிதம் 14.2 சதவீதம் தான். ஆனால் மொத்த விசாரணை கைதிகளில் முஸ்லிம்கள் 17.4 சதவீதம் உள்ளனர்.

 

இவ்வாறு நீதி பரிபாலனத்தை செயல்படுத்தும் துறைகளில் தேவையான மனிதவளம் இல்லாமல் இருப்பது, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, அனைத்து தரப்பு மக்களுக்கும் சரியான வகையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமல் இருப்பது போன்ற காரணங்களால் பணிச்சுமை மற்றும் தேக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாக விளிம்பு நிலை மக்கள் மதச் சிறுபான்மையினர் ஆகியோருக்கு இந்த நீதி பரிபாலன அமைப்பில் முறையான தீர்வுகள் கிடைப்பதில்லை என்று இந்த அறிக்கையிலிருந்து புரிந்து கொள்ளமுடிகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை