YouTurn

இந்து அல்லாத தலித்களுக்கான இட ஒதுக்கீடு!

மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளுக்காக மதம் மாறுகிறார்கள். இது அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது

இந்து அல்லாத தலித்களுக்கான இட ஒதுக்கீடு!

கிறிஸ்தவராக பிறந்த பெண் ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு இந்துவாக மாறியதாக கூறப்பட்ட வழக்கில், அந்தப்  பெண்ணுக்கு பட்டியல் சாதிச் சான்றிதழ் (scheduled caste certificate) வழங்க மறுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் R.மகாதேவன் அடக்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, கடந்த நவம்பர் 26ஆம் தேதி இந்த தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதமே வழக்கியிருந்த இந்த தீர்ப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். 


ஒரு மதத்தின் மீது உண்மையான நம்பிக்கையில்லாமல், இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிப்பதற்காக மட்டுமே மதம் மாறுவது,  இட ஒதுக்கீட்டின் அடிப்படை சமூக நோக்கக்களை கீழறுப்பதாகவுள்ளது என்று இந்த தீர்ப்பில் கருத்து தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்ற அமர்வு.



மற்றொரு மதத்திற்கு மாறுவதாக சொல்வது வெறும் கோரிக்கையாக இருக்கக்கூடாது; மாறாக, மத மாறியதை நிரூபிக்க அந்த மத நம்பிக்கைகளை கடைபிடிப்பது போன்ற சில நேர்மறையான செயல்களும் செய்யவேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள பெண், வழக்கமாக தேவாலயத்திற்கு செல்வது அவர் கிறிஸ்த்துவத்தை பின்பற்றுகிறார் என்பதை தெளிவாக காட்டுவதாக இருக்கிறது. இருப்பினும், அவர் வேலைவாய்ப்பிற்காக தான் ஒரு இந்து என்று கோரி பட்டியல் சாதி சான்றிதழ் கேட்கிறார். இது இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்கு எதிரானது என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடிக்கு சமம் என்றும் இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி மகாதேவன் குறிப்பிடுகிறார். 


அந்தப் பெண்ணின் தந்தை இந்து, தாய் கிறிஸ்த்துவர். ஆனால் அவர்கள் இந்துமதத்தை கடைபிடித்ததாகவும், பள்ளிப்படிப்பின் போதிலிருந்தே பட்டியல் சமூகத்தின் அங்கமாக கருதப்பட்டு வந்திருந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த பெண்ணின் தந்தையும், சகோதரரும் பட்டியல் சமூக சான்றிதழ் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இந்தப் பெண் இந்துவாக மாறியதாக கூறினாலும், இந்த மதமாற்ற நிகழ்வு எவ்வித சடங்கின்படியும் நடக்கவில்லை. ஆர்ய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலமாகவும் மதமாற்ற நிகழ்வு நடத்தப்படவில்லை. இந்த பெண்ணின் குடும்பம் இந்துமதத்திற்கு மாறியதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை. இதற்கு மாறாக, அவர்கள் கிறிஸ்த்துவத்தை கடைபிடிப்பதற்கான ஆதாரங்கள் உள்ளது என நீதிமன்ற அமர்வு கூறுகிறது. கிராம நிர்வாக அதிகாரியின் (VAO) அறிக்கையைக் கொண்டு இந்துவாக இருந்த இந்த பெண்ணின் தந்தை கிறிஸ்த்துவத்திற்கு மாறியது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்த பெண் 1990ல் பிறந்து 1991ல் ஞானஸ்நானம் பெற்றுள்ளார். மேலும் அவரது சகோதரரும் 1989ல் ஞானஸ்நானம் செய்யப்பட்டவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. 


‘தலித் கிறிஸ்தவர்களின் தேசிய கவுன்சில்’ போன்ற அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிராங்க்ளின் சீசர், ’பட்டியல் பழங்குடியினரைப் (STs) போலவே, பட்டியல் சாதி (SCs) அந்தஸ்தை மதத்தைச் சாராமல் (Religiously Neutral) அங்கீகரிக்கவேண்டுமென்று’ கோருகிறார். 


பிராங்க்ளின் சீசரின் இந்தக் கருத்துகளைக் வெளியிட்ட ’The News MInute’ செய்தித்தளம் ஒரு சம்பவத்தை விவரிக்கிறது. மைக்கல்* என்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் கிறிஸ்த்துவர் ஆர்ய சமாஜம் அமைப்பின் மூலமாக இந்துவாக மாறி தனது பெயரை மாணிக்கம்* என்று மாற்றிக்கொண்டார். (* பெயர் மாற்றப்பட்டுள்ளதை குறிக்கிறது).



அதன்பின்னர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் சேர்க்கப்பட்டிருந்த அவர் பட்டியல் சாதிச் சான்றிதழைப் பெற்றார். இதன் மூலமாக அவரது மகளுக்கு கிடைத்துவந்த மத்திய அரசின் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. மதம் மாறிய பின்னரும் தேவாலயத்திற்கு சென்றால், அதன் மூலமாக பிரச்சனை ஏற்பட்டு பட்டியல் சாதிச் சான்றிதழ் திரும்பப் பெறப்படும் (Revoked) என்ற பயத்தில், தேவாலயத்திற்கு செல்லாமலே இருந்தார் மாணிக்கம். ஆனாலும், அவரது பயம் உண்மையாகிவிட்டது. 


இதுபற்றி  பிராங்க்ளின் சீசர் கூறுகையில், “ஒரு நபர் தேவாலயத்திற்குச் சென்றதாக ஒரு தவறான அறிக்கை அவரது பட்டியல் சாதிச் சான்றிதழைத் திரும்பப் பெற போதுமானதாக இருக்கிறது” என்கிறார். மேலும், ”இந்து மதத்தைச் சேர்ந்த பறையர், பள்ளர் போன்ற பட்டியல் சாதி மக்களும் தேவாலயத்திற்கு செல்வது வழக்கமாக நடப்பதுதான். அதானல், அப்படி தேவாலயத்திற்குச் செல்லும் அவர்கள் அனைவரையும் பிடித்து, அவர்களது பட்டியல் சாதிச் சான்றிதழ்களையும் திரும்பப் பெறப்போகிறார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார்.  


இந்த பிரச்சனைகளுக்கு காரணமாக அவர் சொல்வது, கிறிஸ்த்துவர்கள், இஸ்லாமியர்களை பட்டியல் சாதியிலிருந்து விலக்கி வைத்த ’1950 ஆண்டின் ‘பட்டியல் சாதிகள் ஆணை (Scheduled Castes Order)’ தான் என்கிறார். ”இந்து, சீக்கியம்,பௌத்தம் ஆகிய மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கடைபிடிக்கும் எவரும் ஒரு பட்டியல் சாதியின் உறுப்பினராகக் கருதப்பட மாட்டார்கள்” என்று  ’1950 ஆண்டின் ‘பட்டியல் சாதிகள் ஆணை’ மூன்றாவது சரத்து குறிப்பிடுகிறது.



பட்டியல் சாதிகள் ஆணையின் இந்தச் சரத்து அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14,15 ஆகியவற்றின் கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருக்கிறது என்று தொடரப்பட்ட வழக்கு 2022 டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ”1950 ஆண்டின் பட்டியல் சாதிகள் ஆணை எவ்வித அரசியலமைப்பு மீறலையும் கொண்டிருக்கவில்லை. தீண்டாமையின் ஒடுக்குமுறையால் சில இந்து சாதிகள் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கி இருப்பது போல் கிறிஸ்த்துவ, இஸ்லாமிய மதத்தில் சாதிய ஒடுக்குமுறைகள் இல்லை என்ற காரணத்திற்காகதான் பட்டியல் சாதி சான்றிதழ் கொடுப்பதிலிருந்து கிறிஸ்த்துவ, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் விலக்கி வைத்திருக்கப்பட்டிருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்தது போல் பட்டியல் சமூகத்திற்கு பல நூறு ஆண்டுகளாக நிலவும் அடக்குமுறையான சூழல், கிறிஸ்த்துவ இஸ்லாமிய மதத்தில் இருந்தது என்று சொல்வதற்கான எந்தவித நம்பகமான தரவுகளும் இல்லை” என்று தெரிவித்தது மத்திய அரசு.


மேலும், ”கிறிஸ்த்துவ இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தலித்களை பட்டியல் சாதியில் உள்ளிணைத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆணையத்தின் அறிக்கை ’கள ஆய்வுகள் (Field studies)’ செய்யாமல் இந்த முடிவுகளுக்கு வந்துள்ளது. அதனால், இந்த ஆணையத்தின் அறிக்கையை குறைபாடு உள்ளதாக பார்க்கிறோம்” என்றும் மத்திய அரசு தெரிவித்தது.



1950 ஆண்டின் ‘பட்டியல் சாதிகள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்து, பௌத்தம், சீக்கியம் ஆகிய மதங்கள் அல்லாத வேறு மதத்தில் உள்ளவர்களை பட்டியல் சமூக வகையில் சேர்ப்பது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ’இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி K.G.பாலகிருஷ்ணன்’ தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ஆணையம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது.


ஆனால், இந்த ஆணையம் அறிக்கை அளிப்பதற்கான காலக்கெடு 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.


”மக்கள் தங்கள் சொந்த நம்பிக்கைகளுக்காக மதம் மாறுகிறார்கள். இது அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது” என்று  வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஹென்றி டிபக்னே இந்த விவகாரம் பற்றி The News Minute-டம் கருத்து தெரிவித்தார்.


தலித் கிறிஸ்த்துவர்களை பட்டியல் சாதியில் வகைபடுத்தவேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள். ”நாங்கள் இறந்தால் கூட தனியான கல்லறைகளில் புதைக்கப்படுவது நடந்துகொண்டிருக்கும் போது, வெறுமனே மதம் மாறியதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக வகைபடுத்துவதை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது?” என்று போராடும் மக்கள் கேட்கும் கேள்விக்கு இதுவரை அந்த அரசு ஆவணமும் பதிலளிக்கவில்லை. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை