YouTurn

HMPV: ஒரு மர்மமான வைரஸ் அல்ல!

தொடர்ந்து ‘பரபரப்பூட்டும் தலைப்புகளைக் கொண்டு’ மக்களிடையே HMPV வைரஸ் பற்றிய அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகிறது.

HMPV: ஒரு மர்மமான வைரஸ் அல்ல!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் தொற்று பெங்களூருவில் உறுதி செய்ய பட்டதாக 06/01/25 அன்று ஊடகங்களில் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து ‘பரபரப்பூட்டும் தலைப்புகளைக் கொண்டு’ மக்களிடையே வைரஸ் அச்சத்தை தோற்றுவிக்கும் வகையில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது. உண்மையில்  HMPV வைரஸ் என்பது புதிய வைரஸா? அதன் பாதிப்புகள், தீவிரத்தன்மை (Severity) எப்படிப்பட்டவை? என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டிய அவசியமிருக்கிறது. 


image.png


பெங்களூரில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் மூன்று மாத குழந்தை ஒன்றுக்கும், எட்டு மாத குழந்தை ஒன்றுக்கும் HMPV வைரஸ் தொற்று இருப்பது கடந்த ஜனவரி 3ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளளும் சமீபத்தில் வெளிநாட்டுப் பயணங்கள் ஏதும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும். 


image.png


நாடு முழுவதும் சுவாச நோய்களைக் கண்காணிக்க ’இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்’ (ICMR)-ஆல் நடத்தப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுவாச கோளாறை ஏற்படுத்தும் வைரஸ் நோய்க்கிருமிகளுக்கான வழக்கமான கண்காணிப்பின் மூலம் மேற்கண்ட இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டது.


’ஹியுமன் மெட்டா நியூமோ வைரஸ்’ (HMPV) வைரஸ் என்பது சாதாரண புளூ (Flu) காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியது. இதன் தாக்கம் தீவிரமானால், நிமோனியா, மூச்சுக்குழாய் அடைப்பு (Bronchitis) போன்ற தீவிர பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், இந்த வைரஸ் புதிய ஒன்றல்ல. இந்த வைரஸ் 2001ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சாதாரணமாகவே இருப்பதுதான். குளிர்காலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். 


இதுபற்றி குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் கூறுகையில், ”HMPV என்பது ஒரு மர்மமான வைரஸ் அல்ல. ஒவ்வொரு ஆண்டும் நாம் இந்த வைரஸை எதிர்கொண்டு வருகிறோம். இந்த வைரஸ் பாதிப்பால், இருமல், சளி, காய்ச்சல் ஏற்படும், அதே நேரத்தில் oxygen ventilation support தேவைப்படும் அளவிற்கு தீவிர பாதிப்பும் ஏற்படுத்தலாம்” என்கிறார்.


இந்த மாதிரியான தீவிர நோய் பாதிப்பு குழந்தைகள், முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள் ஆகியோருக்கு அதிகம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. 


இந்த நோய்க்கு தடுப்பூசியோ (vaccine), குறிப்பான Anti-Viral மருந்துகளோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், காய்ச்சல், சளி, உடல்வலி போன்ற அறிகுறிகளை குணப்படுத்தும் வகையில் தான் இதற்காக சிகிச்சை அளிக்கப்படுகிறது. 


image.png


இந்த வைரஸ் இருமல், தும்மல் மூலமாக பரவக் கூடியது. அதனால், சுத்தமாக இருப்பது, காய்ச்சல் வந்த குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருப்பது, நோய் அறிகுறி இருப்பவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது போன்ற தற்காப்பு நடவடிக்கைகள் அனைவரும் மேற்கொள்ள வேண்டுமென்றும், நோய் தொற்று அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டுமென்றும் சுகாதார ஆர்வலர்கள், மருத்துவர்கள் கூறுகின்றனர்.


அதேநேரத்தில், இந்த வைரஸ் தொற்று ஒவ்வொரு ஆண்டும் குளிர் காலத்தில் ஏற்படக்கூடியதுதான். இதனால் அதன் பாதிப்பைப் பற்றி அச்சப்பட ஒன்றுமில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


’இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) ஆகியவற்றின் தரவுகளின்படி, தீவிர கடுமையான சுவாச நோய்கள் இந்தியாவில் அசாதாரணமாக அதிகரிக்கவில்லை’ என்று ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சீனாவின் நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) அந்நாட்டு மக்களை சுத்தம் சுகாதாரம் ஆகிய விசயங்களில் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதே வேளையில், சீனாவில் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்றும் மறுத்துள்ளது. ’இதுபோன்ற சுவாச நோய்கள் குளிர்காலத்தில் அதிகரிப்பது வழக்கமானதுதான் என்றும் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு HMPV வைரஸ் நோய் அளவிலும் தீவிரத்தன்மையிலும் குறைவாகவே இருக்கிறது என்றும்’ சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



HMPV வைரஸை எளிதில் அடையாளம் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தது, நோய் தொற்று அதிகரித்த அளவில் கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதிருந்து, உலகில் கனிசமான நாடுகளில் ஏற்கனவே இருக்கும் வைரஸ் தான் இந்த ’ஹியுமன் மெட்டா நியூமோ வைரஸ்’ (HMPV) என்பதை புரிந்துகொள்ளலாம். ஆனால் ஊடகங்கள் இதனைப் பற்றி செய்திகள் வெளியிட்ட விதம், சாதாரண மக்கள் மத்தியில் பெரிதும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘சீன நோய்’, ’இந்தியாவிற்கு அபாய மணி’, ’மீண்டும் பரவும் கொரோனா!’ என்ற தலைப்பில் செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற பதட்றத்தை ஊடகங்கள் பரப்பியது. 


ஆனால், ’இந்த வைரஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருவதுதான்’ என்று மருத்துவ வல்லுநரகள் உறுதியாக சொல்கிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை