YouTurn

கள்ளச்சாராய சாவை முன்பே கணித்து பதவி விலகிய எஸ்.பி என தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையா?

கள்ளச்சாராய சாவை முன்பே கணித்து பதவி விலகிய எஸ்.பி என தினமலர் வெளியிட்ட செய்தி உண்மையா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 139 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பலரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய கோர சம்பவமாக இது மாறியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து "கள்ளச்சாராய சாவு; சுதாரித்த அதிகாரி!" என்ற தலைப்பில் தினமலர் 'செய்தி அட்டை'  ஒன்றை நேற்று (ஜூன் 21) வெளியிட்டுள்ளது. அதில், "கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் கள்ளச்சாராய சாவு நடக்கலாம் என முன்பே கணித்த எஸ்.பி. மோகன்ராஜ்; தடுக்க முடியாது முட்டுக்கட்டை போட்ட மேலிடம்; அவப்பெயருக்கு ஆளாக வேண்டாம் என விருப்ப ஓய்வு பெற்ற சம்பவம் போலீஸ் தரப்பில் கவனம் பெற்று வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளது.



மேலும் இதுகுறித்து தினமலர் வெளியிட்டுள்ள விரிவான செய்தியில், "கடந்த 2023ஆம் ஆண்டு துவக்கத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எஸ்.பி.யாக இருந்த செல்வகுமார் மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மோகன்ராஜ் நியமிக்கப்பட்டார். கள்ளச்சாராயம் குறித்து மேலிடம் வரை புகார் சொன்ன மோகன்ராஜுக்கு, காவல்துறை தலைமையிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால், மாவட்டத்தில் ஆறாக ஓடும் கள்ளச்சாராய வியாபாரத்தை தடுக்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தார். அதோடு, கள்ளச்சாராயத்தால் மாவட்டத்தில் எந்நேரமும் சாவுகள் நடக்கலாம் என அஞ்சி, புலம்பியபடியே இருந்தார்.

பின்னர் மோகன்ராஜ், ஓய்வுபெற எட்டு மாதங்கள் இருக்கும்போதே, இப்படியொரு பதவியே வேண்டாம் என, விருப்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்து, உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். இந்த விவகாரம், அப்போது காவல்துறை வட்டாரங்களில், பெரும் சர்ச்சையானது" என்று குறிப்பிட்டு இதை காவல்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறியதாகவும் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் குறித்து வதந்தி பரப்பியுள்ள தினமலர்:

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், தினமலர் வெளியிட்டுள்ள இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து கள்ளக்குறிச்சி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதைக் காணமுடிகிறது.


அதில், "மோகன்ராஜ், முன்னாள் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓய்வு, தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார்கள். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் பணிஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருப்பதற்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள எனது மகள் மற்றும் மருமகளின் பிரசவத்தை கவனித்துகொள்ள வேண்டியதன் கட்டாயத்தின் காரணமாக நானும் எனது மனைவியும் அமெரிக்கா சென்றோம். அதற்காக நான் விருப்ப ஓய்வு பெற்றேன். 

ஆனால் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற இந்த துயர சம்பவத்தை தொடர்புபடுத்தி, கள்ளச்சாராயத்திற்கு பயந்து நான் விருப்ப ஓய்வு பெற்றதாக விரும்பத்தகாத, உண்மைக்கு புறம்பான பொய்யை சிலர் பரப்பி வருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அதை அவ்வாறு பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் மோகன்ராஜ் கூறியுள்ளார்.
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை