தமிழ்நாடு குறித்து பாஜக பரப்பும் பொய் கதைகள்!
தமிழ்நாடு குறித்து மோசமான கருத்தை கட்டமைக்கும் வகையில் பாஜகவினர் தொடர்ந்து பொய்களையும் தவறான தரவுகளை பரப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டைவிட பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்கள் தான் சமூக பொருளாதார குறியீடுகளில் பெரும் வளர்ச்சி பெற்றிருப்பதாகவும், தமிழ்நாடு இவற்றில் பின்தங்கியிருப்பதாகவும் பாஜகவைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து பரப்பப்படுகிறது. அவற்றில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை நாம் பகுப்பாய்வு செய்வோம்.
முதலில் பொருளாதார ரீதியான அம்சங்களை கணக்கில் எடுத்து பரிசீலிப்போம். உத்தர பிரதேசம் மாநிலத்தை விட தமிழ்நாடு அதிகமாக கடன் வாங்குகிறது, அப்படி அதிகமாக கடன் வாங்கியும் நிதி பற்றாக்குறையுடனே தமிழ்நாடு நிதிநிலை இருக்கிறது, தனிநபர் வருமானம் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது போன்ற குற்றச்சாட்டுகள் பாஜகவால் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக பரிசீலப்போம்.
முதலில் கடன் குறித்து பார்ப்போம். மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த கடன் 8.34 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 2026-27 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த கடன் 10.62 லட்சம் கோடியாக இருக்குமென்று சொல்லப்படுகிறது. அதேபோல் உத்தர பிரதேசம் மாநிலத்தின் மொத்த கடன் 2024ஆம் ஆண்டில் 7.69 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 9 லட்சம் கோடியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒரு அரசு வாங்கும் கடனை அதன் தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எவ்வளவு சதவீதம் கடன் வாங்குகிறது என்பதையும் சேர்த்துப் பார்க்கவேண்டும். ஏனெனில் மாநிலங்கள் தங்களது மாநில உள்நாட்டு உற்பத்திக்கு (GSDP) ஏற்ற அளவில் மட்டுமே கடன் பெற அனுமதிக்கப்படுகின்றன. உத்திரப் பிரதேச மாநிலத்தின் கடனுக்கும் மாநில உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகதம் (Debt to GSDP Ratio) 31.8ஆக உள்ளது. அதே தமிழ்நாட்டிற்கு 30.3ஆக இருக்கிறது. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 66.5 சதவீதமாக இருக்கிறது. அதேவேளையில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வரி பகிர்வாகவும், மானியமாகவும் கொடுக்கும் நிதியின் அளவு தமிழ்நாட்டின் மொத்த வருவாயில் 24.6 சதவீதம் மட்டுமேயாகும்.
ஆனால், உத்திரப் பிரதேசத்தின் மொத்த வருவாயில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 44.3 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. அதேவேளையில் ஒன்றிய அரசு உத்தர பிரதேசத்திற்கு வரி பகிர்வாகவும், மானியமாகவும் கொடுக்கும் நிதியின் அளவு அதன் மொத்த வருவாயில் 51.5 சதவீதம் ஆகும். இவ்வாறு மொத்த வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக ஒன்றிய அரசிடமிருந்து பெற்ற பின்னரும் உத்தர பிரதேசத்தின் கடன் அளவு தமிழ்நாட்டுடன் ஒப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைகள் என்னவாக இருக்கின்றன என்று ’நிதி ஆயோக்’ வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைக் கொண்டு பார்த்தோம்.

2024-25 நிதியாண்டின் தரவுகள் படி உத்தர பிரதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 29.78 லட்சம் கோடியாக இருந்தது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.01 சதவீதமாகும். அதேபோல் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 31.19 லட்சம் கோடியாக இருக்கிறது. இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.43 சதவீதமாகும்.

அதேபோல், 2011-12 நிதியாண்டை அடிப்படை ஆண்டாகக் (Base Year) கொண்டு தற்போதைய பணவீக்கத்தையும் சேர்த்துப் பார்க்கும் போது, உத்தர பிரதேசத்தின் தனிநபர் வருமானம் 93,514 ரூபாய் ஆகும். தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் (per capita income) 3,15,220 ரூபாய் ஆகும். உத்தர பிரதேசத்தைவிட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 3 மடக்கிற்கும் மேல் அதிகமாக உள்ளது.
மேலும் ஒரு மாநில வளர்ந்து வருவதற்கு அடையாளமாக இருப்பது தொழிற்துறை உற்பத்தி (Manufacturing Sector) வளர்ச்சிதான். ஒரு மாநிலத்தின் மொத்த பொருளாதாரத்தில் தொழிற்துறை உற்பத்தியின் பங்கு எவ்வளவிற்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் வளர்ச்சி உள்ளதாக பார்க்கமுடியும். உத்தர பிரதேசத்தின் மொத்த பொருளாதாரத்தில் தொழிற்துறையின் பங்களிப்பு வெறும் 10.33 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் தொழிற்துறையின் பங்களிப்பு 18.23 சதவீதமாக இருக்கிறது.

அதேபோல், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய குறியீடாக இருப்பது தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour participation rate) ஆகும். அதாவது ஒரு நாடு அல்லது மாநிலத்தில், உழைக்கும் வயதில் உள்ள மக்களில் எவ்வளவு பேர் வேலையில் இருக்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிப்பிடும் அளவீடாகும் இது. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் அதிகமாக இருந்தால், நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் அளவிற்கு பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக அர்த்தம். தமிழ்நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 66 சதவீதமாகவும், உத்தர பிரதேசத்தின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 49 சதவீதமாகவும் இருக்கிறது.
பெண்கள் அதிகமாக வேலைகளில் பங்கேற்பது முக்கியமான பொருளாதார முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. நிதியாண்டின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 45.6 சதவீதமாக இருந்திருக்கிறது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 39.2 சதவீதமாக இருந்திருக்கிறது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, தொழிற்துறை வளர்ச்சியிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு உத்தர பிரதேசத்தைவிட சிறப்பாகவே உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

அடுத்ததாக மனித வள மேம்பாடு தொடர்பான அம்சங்களை பரிசீலிக்கிறோம். ஒரு பொருளாதாரத்தில் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பது (Under Weighted) , குறை வளர்ச்சியுடன் இருப்பது (Stunted), உடல் மெலிந்து (Wasted) குழந்தைகளாக இருப்பது என்பது அது பின்தங்கிய பொருளாதாரம் என்பதற்கான குறியீடாகும்.
கடந்த 2025 ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவில் எடை குறைவான, குறை வளர்ச்சி உள்ள குழந்தைகள் பற்றிய தரவுகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி தமிழ்நாட்டில் 14.23 சதவீதம் குறை வளர்ச்சியுள்ள குழந்தைகளும் 6.29 சதவீதம் எடை குறைவாக உள்ள குழந்தைகளும் 3.54 சதவீதம் உடல் மெலிந்த குழந்தைகளும் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் உத்தர பிரதேசத்தில் 48.83 சதவீதம் குறை வளர்ச்சியுள்ள குழந்தைகளும் 19.96 சதவீதம் எடை குறைவாக உள்ள குழந்தைகளும், 5.04 உடல் மெலிந்த குழந்தைகளும் இருப்பதாக தெரிகிறது.


கல்வியை பொறுத்த வரை தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வியில் 91.7 சதவீதமும், உயர்நிலை பள்ளிக் கல்வியில் 89.4 சதவீத மாணவர்களும் படிக்கிறார்கள். 47 சதவீத மாணவர்கள் பள்ளி முடித்து கல்லூரியில் (Gross Enrolment Ratio) சேருகிறார்கள். உத்தர பிரதேசத்தை பொறுத்தவரையில், தொடக்கக்கல்வியில் 90.6 சதவீதமும், உயர்நிலை பள்ளிக் கல்வியில் 60.9 சதவீத மாணவர்களும் படிக்கிறார்கள். 24.1 சதவீத மாணவர்கள் மட்டுமே பள்ளி முடித்து கல்லூரி சேருகிறார்கள்.
அடுத்ததாக சமூக தளத்தில், ”போதை பழக்கத்தில் பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு மோசமான நிலையில் உள்ளது” தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஆனால் உண்மையில் 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக போதைப்பொருட்கள் காரணமாக தமிழ்நாட்டில் 481 வழக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களான மகாராஷ்ட்ராவில் 14,553 வழக்குகளும், உத்தர பிரதேசத்தில் 6,204 வழக்குகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியாவிலே உத்தர பிரதேசத்தில் தான் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளது. இதையெல்லாம் நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம்.

அதேபோல் இந்தியாவிலே தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று பரப்பப்பட்டது. ஆனால் உண்மையில் உத்தர பிரதேசத்தில் தான் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமாக நடக்கிறது.
இவ்வாறு தமிழ்நாடு குறித்து உண்மைக்கு மாறான பொய் தகவல்களை பாஜகவினர் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதனை You Turn’ தரப்பில் பல சந்தர்ப்பங்களில் அம்பலப்படுத்தியுள்ளோம்.