உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாழ்வதாக அறிக்கை வெளியிட்டுள்ள உலக வங்கி.. இந்தியாவின் வறுமை நிலை இது தான்!
இந்தியாவில் வறுமையை கணக்கிடுவதற்கு ஏன் ஒரு புதிய முறை தேவை? விளக்கம் இதோ!
வேலையின்மை, குறைவான பொருளாதார வளர்ச்சி, சரியான கல்வியறிவின்மை, சமத்துவமின்மை, மக்கள்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், குறைவான விவாசாய உற்பத்தி போன்ற பல காரணங்களால் பொதுவாக உலகளவில் வறுமை நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் உலக வங்கியானது, உலகளவில் சுமார் 700 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் வாழ்வதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகளவில் தீவிர வறுமை:
உலக வங்கியின் கூற்றுப்படி , ஒரு நாளைக்கு $2.15-க்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள் தீவிர வறுமையில் இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் சப்-சஹாராவின் (Sub-Saharan Africa) சில பகுதிகள், சிறுதுண்டுகளாக பிரிக்கப்பட்ட மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தீவிர வறுமை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் 2030 ஆம் ஆண்டுக்குள் தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நம்மால் எட்டமுடியாது என்றும் அறிக்கை கூறுகிறது.
உலகளாவிய வறுமைக் குறைப்பு COVID-19 தொற்றுநோயால் கடுமையாக பாதிப்படைந்தது மற்றும் 2020-22 வரையிலான மூன்று ஆண்டுகளில் வறுமை குறைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டாலும், 2022 ஆம் ஆண்டில், உலகளவில் மொத்தம் 712 மில்லியன் மக்கள் கடுமையான வறுமையில் பத்திக்கப்பட்டுள்ளதாவும் அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் 2019 உடன் ஒப்பிடும்போது வறுமையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை
23 மில்லியனாக அதிகரித்துள்ளது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளே இதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றமும் வறுமைக் குறைப்புக்கு இடையூறாகவே உள்ளது. காலநிலை தொடர்பான அபாயங்களால் ஏழை மக்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான குடும்பங்கள் இயற்கை பேரழிவுகளால் வறுமையில் தள்ளப்படுகின்றனர். அதிக வெப்பநிலை காரணமாக ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஏற்கனவே உற்பத்தித்திறன் மிகவும் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வறுமை நிலை குறித்த ஒன்றிய அரசின் அறிக்கை:

2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஒட்டுமொத்த வறுமையை ஒழிப்பதை இலக்காகக் கொண்டு, "தீவிர வறுமையை" அளவிடுவதற்கு இந்திய அரசு “தேசிய குறிகாட்டி கட்டமைப்பு அறிக்கை 2024” (National Indicator Framework Report 2024) என்ற பெயரில் அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளது. அதன்படி இந்தியாவில் ஒரு நாளைக்கு $1.25க்குக் குறைவான வருமானம் உள்ள எவரையும் “தீவிர வறுமையில்" வாழ்பவராக அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்தியா தனது நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) அடைவதையும் இது குறிக்கோளாகக் கொண்டு அதிக கவனம் செலுத்துகிறது.
குறிப்பாக இந்தியாவில் பல பரிமாண வறுமை (Multidimensional Poverty) குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. இந்த சதவீதம் 2013-14 இல் 29.17% இலிருந்து 2022-2023 இல் 11.28%-ஆக 17.89 சதவீதப்புள்ளிகள் வரை குறைந்துள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் 5.94 கோடி மக்கள் பல பரிமாண வறுமையால் (Multidimensional Poverty) பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இதில் மாநிலங்களைப் பொறுத்தவரையில் உத்தரப் பிரதேசத்தில் ஏழைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது, அதற்கு அடுத்த இடங்களில் முறையே பீகார், மத்தியப் பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
பொதுவாக பல பரிமாண வறுமை (Multidimensional Poverty) என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் அனுபவிக்கக்கூடிய இழப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். இதில் கல்வி, வேலை இல்லாமை, போதிய வீடுகள் இல்லாமை, மோசமான உடல்நலம், ஊட்டச்சத்து குறைபாடு, பாதுகாப்புயின்மை போன்ற பல்வேறு நிலைகள் அடங்கும்.
நிதி ஆயோக், பரிமாண வறுமை அடிப்படையில் (Multidimensional Poverty) வாடும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் விகிதம் 2015-16 இல் 24.85% லிருந்து, 2019-21 இல் 14.96% ஆகக் குறைந்துள்ளது என்றும், 2013-14 மற்றும் 2022-23 க்கு இடையில் 248.2 மில்லியன் மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

சமத்துவமின்மை மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான நம்பகமான வழிகளில் ஒன்று வேலைவாய்ப்பு. குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதன் மூலம் வறுமையை பல மடங்கு குறைக்க முடியும். குறிப்பாக இந்தியாவில் பணவீக்கத்தை சரிசெய்யும்போது, பத்து ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்ட டெண்டுல்கர் கமிட்டியின் 2004-05 தரவுகளுடன் (PPP terms to Rs 33 per day), உலக வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள தீவிர வறுமைக்கான வரையறைகள் நெருக்கமாகப் பொருந்துகின்றன என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் வறுமையை கணக்கிடுவதற்கு ஏன் ஒரு புதிய முறை தேவை?
‘டெண்டுல்கர் கமிட்டி (2005) என்பது வறுமையை மதிப்பிடுவதற்கான முறைகளை மறுமதிப்பீடு செய்வதற்காக திட்டக் கமிஷனால் அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி ஆகும். இந்த அறிக்கை கடந்த டிசம்பர் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையின்படி, 2004-05 ஆம் ஆண்டுக்கான கிராமப்புற வறுமை விகிதம் 41.8% ஆகவும் , நகர்ப்புறங்களில் 25.7% ஆகவும் , இந்திய அளவில் ஒட்டுமொத்த வறுமை விகிதம் 37.2% ஆகவும் இருந்தது.
ஆனால், ஒன்றிய அரசின் தற்போதைய அறிக்கை, பத்து ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்ட “டெண்டுல்கர் கமிட்டி” வெளியிட்ட தரவுகளுடன் ஒப்பிட்டு கணக்கிட்டுள்ளது. மொத்தத்தில், இத்தகைய பழைய தரவுகளின் அடிப்படையில் வறுமையை மதிப்பிடுவது ஒரு பயனற்ற செயலாகும்.

இந்தியாவில் வறுமை மதிப்பீடு (Poverty Estimation in India):
விஎம் தண்டேகர் மற்றும் என் ராத் ஆகியோரின் ஆய்வு (Study by VM Dandekar and N Rath (1971))
அலக் கமிட்டி (Alagh Committee (1979))
லக்டவாலா கமிட்டி (Lakdawala Committee (1993))
டெண்டுல்கர் கமிட்டி (Tendulkar Committee (2005))
ரங்கராஜன் கமிட்டி (Rangarajan Committee (2012))
இதன் மூலம் 2013 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வறுமை குறித்த எந்த புள்ளிவிவரங்களும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது. எனவே இந்தியாவில் வறுமை கோட்டை நிர்ணயிக்க சரியான தரவுகளுடன் புதிய முறை (New Official Poverty Line) நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது..!
ஆதாரங்கள்:
https://www.worldbank.org/en/topic/poverty/overview
https://prsindia.org/theprsblog/more-privatisation-on-the-cards?page=17&per-page=1
https://pib.gov.in/newsite/erelcontent.aspx?relid=97365