போலீஸ் சாதி மதம் பார்க்குமா?
தலித்துகள், பழங்குடி மக்கள், முஸ்லிம்கள், திருநர் போன்ற விளிம்பு நிலை மக்கள் மீது காவல்துறை கொண்டுள்ள பாரபட்சமான அணுகுமுறையை இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது.
சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் அரசு நிறுவன அமைப்புகள் சமூகத்தில் இருக்கும் பல்வேறு தரப்பு மக்களிடம் ஒரு பக்க சார்போ பாரபட்சமோ காட்டாமல் நடந்து கொள்கின்றன என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியுமா? இல்லை! அவை பாரபட்சமாகவே நடந்து கொள்கின்றன என்று நிரூபிக்கிறது சமீபத்திய ஆய்வு.
'Common Cause' என்ற அரசு சாரா அமைப்பும் (NGO), 'Centre for the Study of Developing Societies (CSDS)' என்ற நிறுவனமும் இணைந்து காவல்துறை அதிகாரிகள் மத்தியில் ஒரு ஆய்வை நடத்தியது. இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பணியாற்றும் 8,276 காவல்துறை அதிகாரிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. கான்ஸ்டபிள் போன்ற கீழ்மட்ட காவல் பணியாளர்கள் தொடங்கி உதவி ஆய்வாளர்கள் (Assistant Sub Inspector), காவல் கண்காணிப்பாளர்கள், மூத்த IPS அதிகாரிகள் என அனைத்து மட்டத்தில் உள்ளவர்களிடமும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்து ‘Status of Policing in India Report (SPIR) 2025’ என்ற அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது.
தலித்துகள், திருநங்கைகள் போன்ற விளிம்பு நிலை மக்கள், முஸ்லிம் போன்ற மதச் சிறுபான்மையினர் ஆகியோர் அரசு நிறுவனங்களால் பாரபட்சமாக அணுகப்படுகிறார்கள் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மீது காட்டப்படும் இந்த ஒருபக்க சார்பு (Bias) என்பது விசாரணையின் ஆரம்ப கட்டத்தில் மட்டுமல்ல விசாரணையின் இறுதியில் முடிவுகளை எடுப்பது, சட்டத்தை அமல்படுத்துவது, சட்டம் சார்ந்த நடவடிக்கைகள் என அனைத்திலும் காவல்துறையினரின் பக்க சார்புகள் வெளிப்படுகிறது என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
ஆய்வுக்கு உட்படுத்திய நபர்களில் 27 சதவீத காவல்துறை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற குற்றங்களின் போது பொதுமக்கள் ஆத்திரத்தில் கும்பல் வன்முறையில் ஈடுபடுவது சரியென நினைக்கிறார்கள்.
குற்றவாளிகளை கைது செய்யும் போதும் விசாரணையின் போதும் மேற்கொள்ளப்பட வேண்டிய துறை சார்ந்த நடவடிக்கைகளை 21 சதவீத அதிகாரிகள் சரிவர கடைப்பிடிப்பதில்லை என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 68 சதவீத காவல்துறை அதிகாரிகள் தலித்துகள் 'இயல்பாகவே குற்றம் செய்யக்கூடியவர்கள்' என்ற மனப்பான்மையை கொண்டிருக்கிறார்கள். 56 சதவீதத்தினர் 'ஆதிவாசிகள்' அதவாது பட்டியல் பழங்குடி மக்களைப் பற்றிய இதே கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார்கள்.
ஒன்றிய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையில் 62 சதவீதத்தினர் முஸ்லிம்கள் 'இயல்பாகவே குற்றம் செய்யக் கூடியவர்கள்' என்ற கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார்கள்.
"ஒரு சமூக மக்களை பற்றி இவ்வாறான கண்ணோட்டங்களை கொண்டிருப்பதற்கு காவல்துறையை மட்டுமே முழுமையாக குறை சொல்ல முடியாது, ஏனெனில் இந்த பாரபட்சமான நடவடிக்கைகள் அரசின் கொள்கை முடிவுகளையும் ஒட்டுமொத்த அரசு நிறுவன அமைப்பின் செயல்களிலும் பிரதிபலிப்பதாக இருக்கிறது" என்று கூறுகிறார் 'ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம்' என்ற அமைப்பின் செயலாளர் பரம்ஜீத் சிங்.
மேலும் அவர், 'முஸ்லிம் பண்டிகைகளின் போது சாலையோரங்களில், மாடிகளில், நடைமேடைகளில் கூட தொழுகை நடத்தவிடாமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, முஸ்லிம்கள் மத நம்பிக்கையை தங்களது வீடுகள் மற்றும் மசூதிகளில் மட்டுமே வெளிப்படுத்த அனுமதிக்கிறது இந்த அரசு. ஆனால் இந்து பண்டிகைகளின் போது பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கும், மாநில அரசே ஏற்று நடத்தும் கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை' என்று சரியாக சுட்டிக் காட்டுகிறார்.
'Custodial Deaths' என்று சொல்லப்படும் காவல் நிலைய மரணங்கள் சரியாக ஆவணப்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அது குறித்த அதிகாரப்பூர்வ பதிவுகளில் வெளிப்படையான முரண்பாடுகள் இருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
2020ஆம் ஆண்டில் மட்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் 90 காவல் நிலைய மரணங்கள் (Custodial Deaths) பதிவாகியிருந்தது. ஆனால் அதே ஆண்டில் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 76 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே பதிவாகியிருந்தது. ஒரு காவல் நிலைய மரணம் நிகழ்ந்ததும், அது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அறிக்கை அளிக்கவேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால் காவல்துறை இதை வேண்டுமென்றே செய்யாமல் இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்தால் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்பது காவல்துறைக்கு தெரியும். அதனை தவிர்க்கவே காவல் நிலைய மரணங்களை சரியாக ஆவணப்படுத்தாமல் விடுகின்றனர்.
மேலும் இந்த அறிக்கை காவல் துறை அதிகாரிகள் தன்பால் ஈர்ப்பாளர்கள் (Homosexuals), திருநர்கள் (Transgender) ஆகியோர் மீது எதிர்மறையான கண்ணோட்டம் கொண்டிருப்பதையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற 38 காவல்துறையினர் திருநர்கள் ‘இயல்பாகவே குற்றம் செய்யக் கூடியவர்கள்’ என்ற கண்ணோட்டம் உடையவர்களாக இருக்கிறார்கள். 57 சதவீத காவல்துறையினர், பால் புதுமையினர் (Queers) இந்த சமூகத்தின் மீது எதிர்மறையான தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற எண்ணமுடையவர்களாக இருக்கிறார்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
இதேபோல் ‘சாதியத்தின் நிழலில் குற்றவியல் நீதி’ என்ற அறிக்கை தேசிய தலித் மனித உரிமைகள் மையத்துடன் இணைந்து நீதிக்கான தேசிய தலித் இயக்கத்தால் 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ளதன் படி, ' 2015ஆம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகத்தால் வெளியிடப்பட்ட 21ஆம் சிறைத்துறை புள்ளிவிவரங்களின் படி இந்திய சிறைச்சாலைகளில் உள்ள விசாரணைக் கைதிகளில் 55 சதவீதம் பேர் தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்த மூன்று சமூகங்கள் சேர்ந்து மொத்தம் 39 சதவீதம் தான் இருந்ததாக தெரிகிறது. மக்கள் தொகையில் 39 சதவீதம் இருப்பர்கள் சிறையில் 55 சதவீதமாக இருக்கிறார்கள்.
இது தலித்துகள் பழங்குடி மக்கள் முஸ்லிம்கள் ஆகியோர் மீது இந்த அரசு நிறுவன அமைப்புகள் எத்தனை பாரபட்சமாக நடந்துகொள்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.