ஜப்பானை பின்தள்ளியதா இந்திய பொருளாதாரம்?
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக உயர்ந்த அளவிலானதாக இருந்தாலும், அது மட்டுமே இந்திய பொருளாதாரம் சிறந்தது என காட்ட போதுமானதா? பெரும்பாலான இந்திய மக்களின் பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது?
ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உயர்ந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜப்பானைவிட பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியிருப்பதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்றும் நிதி ஆயோக் (NITI Aayog) தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.
ஆனால் உண்மை என்னவென்றால், 2024ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியா இன்னும் ஜப்பான் பொருளாதாரத்தை முந்தவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் IMF வெளியிட்ட "உலக பொருளாதார கண்ணோட்டம்" என்ற அறிக்கையில், வரும் 2026ஆம் நிதியாண்டில் அதவாது (2025-26) நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.187 டிரில்லியன் டாலராக இருக்குமென்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்ற அம்சத்தில் இந்தியா ஜப்பான் பொருளாதாரத்தை 2026ஆம் நிதியாண்டில் பின்தள்ளும் என்ற ஆருடம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அது இன்னும் நிஜமாக வில்லை. ஆனால், தற்போதே இந்திய பொருளாதாரம் ஜப்பான் முந்திவிட்டதாக செய்தி ஊடகங்களால் தவறாக பரப்பப்பட்டது.
அப்படியே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மிக உயர்ந்த அளவிலானதாக இருந்தாலும், அது மட்டுமே இந்திய பொருளாதாரம் சிறந்தது என காட்ட போதுமானதா? பெரும்பாலான இந்திய மக்களின் பொருளாதார நிலை என்னவாக இருக்கிறது? இந்தியாவின் GDP வளர்ச்சியால் அவர்கள் எந்த அளவு பயனடைவார்கள்?
GDP per capita என்ற சொல்லக்கூடிய தனிநபர் பங்களிப்பில் இந்தியா ஜப்பானைவிட பல மடங்கு பின்தங்கி இருக்கிறது. ஜப்பானின் ‘GDP per capita’ 33,955.7 டாலர்களாக இருக்கிறது. ஆனால் இந்தியாவின் GDP per capita வெறும் 2,878 டாலர்கள் மட்டுமே. இது ஜப்பானைவிட 11 மடங்கு குறைவு. இவ்வாறு GDP அதிகமாக இருந்தும் GDP per capita என்று சொல்லக்கூடிய தனிநபர் பங்களிப்பு மிகக் குறைவாக இருப்பதற்கு காரணம் இந்தியாவில் உள்ள அதிகமான பொருளாதார ஏற்றத்தாழ்வு (Economic Inequality) தான்.
கடந்த 2023ஆம் ஆண்டு Oxfam நிறுவனம் வெளியிட்ட 'Survival of the Richest: The India Story' என்ற ஆவணம் இந்தியாவில் மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுவதை படம்பிடித்துக் காட்டியது.
இந்தியாவில் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்திருக்ககிறது. ஆனால், இந்தியாவில் கீழ்நிலையில் இருக்கக்கூடிய 50% ஏழை மக்களிடம் அதாவது இந்தியாவில் உள்ள 70 கோடி மக்களிடம் வெறும் 3% சொத்துகள் மட்டுமே இருக்கிறது.
மேலும் தற்போது IMF அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது, இந்தியாவின் Nominal GDP பற்றி தான். இந்த Nominal GDP என்பது பணவீக்கத்தை (Inflation) கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் பணவீக்கம் என்பது பெரும் பிரச்சினையானவும் சாதாரண மக்களை பெருமளவில் வதைக்கும் ஒன்றாகும் இருக்கிறது. ‘The Hindu’ பத்திரிகை நடத்திய கள ஆய்வின் படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் உணவின் விலை 71% உயர்ந்துள்ளது. ஆனால், முறை சார்ந்த தொழிலாளர்களின் ஊதியம் ஐந்தாண்டுகளில் வெறும் 37% மட்டுமே உயர்ந்துள்ளது. ஊதியத்தை விட உணவின் விலை இரண்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், வேலையின்மை என்பதும் இந்தியாவில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. சமீபத்திய கணக்கீட்டின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் (Unemployment Rate) 5.1 சதவீதமாக இருக்கிறது. ஆனால் அதேவேளையில், இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை மிக அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. 15 முதல் 29 வயதுடைய 13.8% இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டிற்கான உலக பட்டினிச் குறியீட்டில் (Global Hunger Index) மொத்தமுள்ள 127 நாடுகளில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பட்டினி என்பது தீவிரமாக (Serious) நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 2024 ஆண்டிற்கான உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் (World Happiness Index) இந்தியா மொத்தமுள்ள 147 நாடுகளில் 118ஆவது இடத்தில் உள்ளது.
இவ்வாறு, தனிநபர் சொத்து, வருமானம், வறுமை, பட்டினி, வேலையின்மை, மகிழ்ச்சி என அனைத்து அம்சங்களிலும் இந்தியா மிகப் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. நாட்டின் பெருவாரியான மக்களை பாதிக்கும் இந்த அம்சங்கள் எதையும் கணக்கில் கொள்ளாமல், வெறும் Nominal GDP என்ற ஒரு அம்சத்தை மட்டுமே வைத்து இந்திய பொருளாதாரம் முன்னேறியிருப்பதாக கூறுவது தவறான கண்ணோட்டம் ஆகும்.