உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் ஒழிக்கப்பட்டதா ’புல்டோசர் ராஜ்ஜியம்’?
அரசியல்வாதிகளும் நிர்வாக அதிகாரமும், மதவாதக் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்ற கள யதார்த்தை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி உச்சநீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை அல்லது சொத்துகளை இடிக்க நிர்வாக அதிகார அமைப்புகளுக்கு (Executive) அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
“ஒரு நபர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதித்துறைதான் தீர்மானிக்க வேண்டும். இதனை நிர்வாக அதிகாரம் செய்யத் தொடங்கினால், நிர்வாக அதிகாரமும் நீதித்துறையின் அதிகாரமும் பிரித்துவைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் Separation of Powers என்ற கொள்கை மீறப்படுவதாகும்” என்று நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் தீர்ப்பு வழங்கினர்.

முஸ்லிம் போன்ற சிறுபான்மை அல்லது விளிம்புநிலை சமூகத்தை சேர்ந்த ஒருவர்மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தால் மட்டும், அரசு நிறுவனங்கள் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர் சொத்துகளுக்கு ’ஆக்கிரமிப்பு அகற்ற அறிவிப்பை’ அனுப்பி, குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படையில், அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வாய்ப்பைக்கூட வழங்காமல், குற்றம் சாட்டப்பட்டதையே ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி புல்டோசரைக் கொண்டு வீடுகள் இடிக்கப்படுகிறது. இப்படி விளிம்புநிலை மக்களின் வீடுகள் அரசால் இடிக்கப்படுவதை பத்திரிகைகள் ’புல்டோசர் ராஜ்’ என்று அழைக்கிறது.
சட்டத்தின் வரம்பிற்கு உட்படாமல், வீடுகளை புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் இந்த நிகழ்வுப்போக்கை (phenomenon) உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் தொடங்கிவைத்தார். யோகி ஆதித்யநாத் உத்திரப்பிரதேச முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட 2017ஆம் ஆண்டு முதல் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்கள் புல்டோசர்களால் இடிக்கப்படுகிறது.
முஸ்லிம்கள் தங்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக தெருக்களில் இறங்கி போராடிய போது அவர்களின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடித்தது யோகி அரசு.
’யாரேனும் இந்து மத ஊர்வலங்கள் கற்களை வீசினால் அவர்களின் வீடுகளை இடிக்கப்பட்டு கற்குவியலாக மாற்றுவோம்’ என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா வெளிப்படையாகவே மிரட்டினார். 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது அந்த மாநிலத்தில் வகுப்புவாத வன்முறை வெடித்திருந்த நிலையில் இப்படியொரு கருத்தை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர் ஒருவரே பேசுகிறார்.

ஏப்ரல் 20, 2022 அன்று அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, வடக்கு டெல்லி நகராட்சி அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 12 கம்பெனிகளுடன் வந்து ஜஹாங்கிர்புரியில் உள்ள கடைகள், விற்பனை வண்டிகள் மற்றும் வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துகளை இடித்தார்கள்.

An ’Amnesty International’ நிறுவனத்தின் அறிக்கை, ”இப்படி வீடுகள் அதிகமாக் இடிக்கப்படுவது முக்கியமாக முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படுகிறது“ என்று தெரிவிக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலின் போது உத்தர பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் போது, பிரதமர் நரேந்திர மோடி, ”சமாஜவாதியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால், ராம் லல்லா மீண்டும் கூடாரத்தில் இருப்பார்; அவர்கள் ராமர் கோயிலை புல்டோசரைக் கொண்டு இடிப்பார்கள். ‘புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு இயக்கக்கூடாது’ என்று அவர்கள் யோகியிடம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறினார். நாட்டின் பிரதமரே சட்டவழிகளை புறக்கணித்துவிட்டு வீடுகளை இடிப்பதை பற்றி பெருமை பொங்க பேசுவது என்பது, ‘பாஜக முஸ்லிம் மற்றும் பிற விளிம்புநிலை மக்களை ஒடுக்க இந்த புல்டோசரை பயன்படுத்துவதை ஒரு செயல்யுத்தியாக (Tactic) கொண்டுள்ளதை’ தெளிவுபடுத்துகிறது.
’Housing and Land Rights Network’ நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்த புல்டோசர் ராஜியத்தால் முஸ்லிம்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு அடுத்தப்படியாக பழங்குடி மக்கள், ஆதிவாசிகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்கள் ஆகிய விளிம்புநிலை மக்கள் பிரிவினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து, குற்றம் சாட்டப்பட்டதையே அடிப்படையாக கொண்டு ஒருவரது வீட்டை இடிப்பதால், அவரது மொத்தக் குடும்பமும் பாதிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
நிர்வாக அதிகாரம் நீதிபதியாக மாறி ஒரு நபரை குற்றவாளி என்று சொல்வதோ அவருக்கு தண்டனை வழங்குவதோ அதன் வரம்பு மீறி செயல்படுவதாகும். மேலும், ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டாலோ, குற்றம் நிரூபிக்கப்பட்டாலோ, அவர் மட்டும்தான் தண்டிக்கமுடியும். அவரது சொத்துகளை இடிப்பதன் மூலமாக அவரது குடும்பத்தையும் அவரை சார்ந்தவர்களையும் தண்டிக்கும் கூட்டு தண்டனை (Collective Punishment) கொள்கைமீது இந்திய அரசியலமைப்பிற்கு நம்பிக்கையில்லை என்றும் தீர்ப்பளித்தனர்.
இதுபோல் வீடுகள் இடிக்கப்படுவதற்கு நிர்வாக அதிகாரிகளை பொறுப்பாக்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும், இதுபோன்ற இனிமேல் நடக்காமல் இருக்க வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். மேலும், சாலை, தெரு, நடைபாதை, ரயில் பாதைகளை ஒட்டிய பகுதிகள், ஆற்றங்கரை அல்லது நீர்நிலைகள் போன்ற பொது இடங்களில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை இடிக்க இந்த உத்தரவுகள் பொருந்தாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு ஒருவகையில் முக்கியமானதாக பார்க்கப்பட்டாலும், இன்னொரு புறம் மிக தாமதமான ஒன்றாக வந்திருப்பதாகவும், போதுமானதாக இல்லை என்று சில பார்வைகளும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
மேலும், இப்படி வீடுகள் இடிக்கப்படுவது தவறு என்று சொல்லியுள்ள நீதிமன்றம், இதுவரை தங்களது வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
மற்றொரு விஷயம் இதுபோன்று சட்ட வரையறையை மீறி வீடுகள் இடிக்கப்படுவதற்கு நிர்வாக அதிகாரிகளை பொறுப்பாக்கியிருப்பது பற்றியது. மேலே விவரித்து தகவல்களில் இருந்து, சட்ட வரையறையை மீறி வீடுகள் இடிக்கப்படுவதும் அதை ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் கொண்டாடுவதும் ’வகுப்புவாத பின்னணி கொண்டது’ என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். வீடுகளை இடிக்க உத்தரவு கொடுப்பது அரசியல்வாதிகளாக இருந்தாலும், அதனை முன்னின்று நடைமுறைப்படுத்தியது அதிகாரிகள்தான். இந்த அதிகாரிகள் ஒவ்வொரு முறை இதைச் செய்யும் போதும் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றுவதாகவே’ நியாயப்படுத்தினார்கள்.

’பொது இடங்களில் இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களை இடிக்க இந்த உத்தரவுகள் பொருந்தாது’ என்று நீதிமன்றம் சொன்னதன் மூலமாக, மீண்டும் மக்கள் நிர்வாக அதிகாரத்தின் தயவிலே விட்டுவிட்டதாக அமைந்து விடுகிறது. இதுவரை எந்த சந்தர்பத்திலும் ‘இவர் குற்றம் சாட்டப்பட்ட காரணத்திற்காக இவரது வீட்டை இடிக்கிறோம்’ என்று அதிகாரிகள் சொன்னதில்லை. எனவே தீர்ப்பின் இந்தப் பகுதி அதிகாரிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.
முஸ்லிம்கள் மற்றும் பிற விளிம்புநிலை மக்களின் வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இடிக்கப்படுகிறது, ஒருவர் குற்றம் சாட்டப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அவரது வீடு இடிக்கப்படுவதால் அவரது குடும்பத்தினரும் தண்டிக்கப்படுகிறார்கள். இதனையெல்லாம் செய்வது நிர்வாக அதிகாரம் என்பதையும், அவர்கள் மதவாதக் கண்ணோட்டத்துடன் செயல்படுகிறார்கள் என்ற கள யதார்த்தையும் இந்த தீர்ப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளாதது துரதிருஷ்டவசமானது என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.