சென்னை மெட்ரோ பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை… பாஜக ஒப்புக்கொண்ட பொய்!
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஒன்றிய அரசு நிதி அளித்துள்ளதாக பாஜக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், அவர்கள் வாயாலியே அது பொய் என்பது வெளிப்பட்டுவிட்டது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு 63,246 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளதாக பாஜக கூறி வந்த நிலையில், தற்போது அப்பணிக்கான செலவினை தமிழ்நாடு அரசுதான் செய்து வருவதாக மாநிலங்கள் அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டுக்கென சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், இது ‘தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
‘ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்’ – மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிக்கை pic.twitter.com/uPqJ0ptELG
— CMOTamilNadu (@CMOTamilnadu) July 23, 2024
அவ்வறிக்கையில், “சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மூன்றாண்டுகளுக்கும் முன்பாக ஒன்றிய அரசு அறிவித்த நிலையிலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்துக்காக எந்தவொரு நிதியும் இதுவரை வழங்கவில்லை. இது சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் செயல்பாட்டினைப் பெரிதும் பாதித்து, சென்னை மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு துணைத்தலைவர் செல்வ குமார் தனது எக்ஸ் பக்கத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி அளித்த பதில் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப்பணி மாநில அரசுத் திட்டமாகச் செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் 'நிதி தரவில்லை' என ஒன்றிய அரசைத் தமிழ்நாடு முதலைச்சர் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறார் என்றுள்ளது. ஆனால், இவ்வளவு காலமாக மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு ஒன்றிய அரசு நிதி அளித்துள்ளதாக பொய் சொல்லிக் கொண்டு இருந்தது பாஜகதான்.
சென்னை மெட்ரோ 2 திட்டத்தை மாநில அரசு நிதியில் இருந்துதான் செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நேற்றே தெளிவுபடுத்திய பிறகும், நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இன்று மத்திய அரசை குறை சொல்கிறார் முதல்வர். pic.twitter.com/2IFEgeXMCU
— Selva Kumar (@Selvakumar_IN) July 23, 2024
சென்னை மெட்ரோ Phase 2:
ஒன்றிய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2021-22ல் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்காக ரூ.63,246 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்குவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதனையொட்டி பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்களும் ஒன்றிய அரசுதான் இத்திட்டத்துக்காகப் பல ஆயிரம் கோடியை அளித்துள்ளது எனத் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் PDF வடிவில் ஒரு பட்டியலை வெளியிட்டார். மோடியின் கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 10.76 லட்சம் கோடிக்கு மேல் நிதி அளிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பட்டியலில் மெட்ரோவுக்கு ரூ.72,868.71 கோடி நிதி வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது. இது பொய் என அப்போதே யூடர்ன் கட்டுரை வெளியிட்டது.
TN CM Thiru @mkstalin claimed that TN has been deprived of benefits in the last 9 years of our Hon PM Thiru @narendramodi avl’s government & as promised, we wish to refute him with a white paper to prove that he is wrong, as always.
— K.Annamalai (@annamalai_k) August 30, 2023
The hallmark of the DMK’s ecosystem is lies &…
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. PIB தளத்திலும் இது மாநில அரசின் திட்டமாகச் செயல்பட்டு வருகிறது என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் தயானந் கிருஷ்ணன் என்பவர் RTI மூலம் பெற்ற தகவலிலும் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ பணிக்கு ஒன்றிய அரசு நிதி எதுவும் அளிக்கவில்லை என்றே குறிப்பிட்டு இருந்தது.
உண்மை இப்படி இருப்பினும் பாஜக இதுதொடர்பான தனது பொய் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் இது பொய் என யூடர்ன் தொடர்ந்து பதில் எழுதி வந்தது.
பொய்யை ஒப்புக்கொண்டனர்:
தற்போது சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணி ஒன்றிய அரசின் திட்டம் இல்லை என பாஜக செல்வ குமார் பதிவிட்டது மட்டுமின்றி, ரங்கராஜ் பாண்டேவும் இதே கருத்தை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்நேர்காணலில், “பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் நான் (ரங்கராஜ்) இதைப்பற்றிக் கேட்டேன் (Chennai metro phase 2). இரண்டாம் கட்ட பணி மாநில project. அதனை நாங்கள் (ஒன்றிய அரசு) அறிவிக்கவில்லை. ஒரு வேலை எங்கள் உதவி கேட்டால் உதவுவோம்” எனப் பதில் அளித்ததாக ரங்கராஜ் கூறுகிறார்.
இதன்மூலம் இவ்வளவு காலம் இத்திட்டத்துக்கு தாங்கள்தான் நிதி அளித்ததாகப் பொய் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்து வந்துள்ளனர் என்பது தற்போது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
இரண்டாம்கட்ட பணிகளுக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் நிதி அறிவித்தார் என சமூக வலைத்தளங்களில் ஆதாரங்கள் வெளியானதையடுத்து, ஒன்றிய அரசின் Priorities மாறிவிட்டது எனச் செல்வ குமார் மாற்றிப் பேசத் தொடங்கியுள்ளார். இதேநேரத்தில் மற்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு ஒன்றிய அரசால் நிதி அளிக்கப்படுவது கவனிக்க வேண்டியுள்ளது.
இது மட்டுமின்றி பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசைக் காட்டிலும் மாநில அரசுதான் அதிக நிதி ஒதுக்குகிறது. ஆனால், திட்டத்தின் பெயர், திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருமை அனைத்தும் ஒன்றிய அரசுக்கு உரித்தானதாகச் சொந்தம் கொண்டாடப்படுகிறது. இதுபற்றி விளக்கமாக வீடியோ ஒன்றும் நமது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: 'தமிழ்நாடு கஞ்சாவின் தலைநகரம்', 'காலை உணவுத் திட்டம்' பற்றி அண்ணாமலை சொன்ன பொய்கள்!
மேலும் படிக்க: PMAY வீடு திட்டம் : மீண்டும் மீண்டும் பொய் சொல்லும் அண்ணாமலை !
இதன் மூலம் சென்னை மெட்ரோவிற்கு ஒன்றிய அரசுதான் நிதி அளிப்பதாக பாஜக சொல்லி வந்த பொய், தற்போது அவர்கள் மூலமாகவே பொய் என நிரூபணமாகிவிட்டது.