தேர்தலில் அதிகம் செலவு செய்யும் கட்சி: பாஜக!
தேர்தல்களுக்காக நிதி பெறுவதிலும் செலவு செய்வதிலும் மற்ற கட்சிகளைவிட பாஜக பல படிகள் முன்னிருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நான்கு மாநிலக்களின் சட்டமன்றத் தேர்தல்களின் போது ’பாரதிய ஜனதா கட்சி’ கிட்டத்தட்ட ரூ.1,494 கோடியைச் செலவிட்டுள்ளதாக, ’Association for Democratic Reforms’ என்ற அரசு சாரா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. பாஜக செலவிட்டுள்ள இந்த தொகை என்பது இதே தேர்தல் காலகட்டத்தில் அனைத்து கட்சிகளாலும் செலவு செய்யப்பட்ட மொத்த தொகையில் 44.56 சதவீதமாகும். அதாவது, கிட்டதட்ட மொத்த தொகையில் பாதியை பாஜக என்ற ஒரு கட்சி மட்டுமே செலவு செய்துள்ளது.

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பங்கேற்ற 32 கட்சிகளின் (5 தேசிய கட்சிகள் மற்றும் 27 பிராந்திய கட்சிகள்) செலவீனங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை எழுதப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள் தேர்தல்களின் போது தாங்கள் செய்த செலவுகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. நாடாளுமன்றப் தேர்தல் முடிந்த 90 நாட்களுக்குள்ளும், மாநில சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த 75 நாட்களுக்குள்ளும் செலவீனங்கள் குறித்த அறிக்கையை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் நாள் வரையிலாக 82 நாட்களில் (2024, மார்ச் 16 - ஜீன் 6) கட்சிகள் நிதி பெற்றது, செலவுகள் செய்தது பற்றிய விவரங்களை உள்ளடங்கிய அறிக்கைகளை கட்சிகள் சமர்பிக்க வேண்டுமென்பது விதி. ஆனாலும், சில கட்சிகள் இந்த கெடுவை தாண்டியே அறிக்கையை சமர்பித்துள்ளது தெரியவருகிறது.
செலவின அறிக்கையில் பணம், காசோலைகள் உள்ளிட்ட வடிவங்களில் கட்சி நிதி பெற்றது குறித்த விவரங்கள் உள்ளடங்கியிருக்கும். இவ்வாறு பெறப்பட்ட நிதியிலிருந்து செய்யப்பட்ட பல்வேறு செலவுகள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றிருக்கவேண்டும். பயணச் செலவுகள், தேர்தலின் போதான விளம்பரச் செலவுகள், வேட்பாளர்களுக்கான செலவுகள், சமூக ஊடக தளங்கள் மூலம் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்கான செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விவரங்கள் கட்சி கொடுக்கும் இந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கவேண்டும்.

இவ்வாறு கட்சிகள் கொடுத்துள்ள விவரங்களின் அடிப்படையில் ‘Association for Democratic Reforms’ என்ற அமைப்பு இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் படி, மேற்குறிப்பிட்டுள்ள 32 கட்சிகள் இந்த தேர்தல் காலத்தில் ரூ. 7445.566 கோடி நிதி பெற்றுள்ளன. அதில் தேசிய கட்சிகள் ரூ. 6930.246 கோடிகளும் (93.08%), பிராந்திய கட்சிகள் ரூ. 515.32 கோடிகளும் (6.92%) பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேசிய கட்சியான பாஜக மட்டுமே ரூ. 6268.006 கோடி (84.18%) நிதி பெற்றுள்ளது. அதற்கடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி ரூ. 592.484 கோடி (7.96%) திரட்டியுள்ளது. இரண்டாவது இடத்தில் இருக்கும் காங்கிரஸை விட முதலிடத்தில் இருக்கும் பாஜக 10 மடக்கு அதிகமாக நிதி பெற்றுள்ளது.

இதில் ரூ.3352.81 கோடி இந்த தேர்தல் காலத்தில் செலவிடப்பட்டுள்ளது. அதில் ரூ. 2204.318 கோடி (65.75%) தேதிய கட்சிகளால் செலவிடப்பட்டுள்ளன. இதில் பாஜக மட்டுமே ரூ. 1,493.91 கோடி (44.56%) செலவு செய்துள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ரூ. 620.14 கோடி (18.50%) செலவு செய்து காங்கிரஸ் கட்சி இருக்கிறது.
இந்த 32 கட்சிகளாலும் செலவு செய்யப்பட்ட மொத்த நிதியில் அதிகளவு நிதி, விளம்பரங்களுகாகவும், போக்குவரத்திற்காகவும் தான் செலவு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் செலவு செய்யப்பட்ட ரூ.3352.81 கோடியில் ரூ. 2008.295 கோடி விளம்பரத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த நிதியில் 53.32 சதவீதமாகும். அதாவது பாதிக்கும் மேலான நிதியை விளம்பரங்களுக்காகவே செலவளிக்கப்பட்டுள்ளன. இதில் ஊடக விளம்பரங்களுக்காக மட்டும் ரூ. 1464.5 கோடிகளும் (72.923%); போஸ்டர், பேனர், கொடி போன்ற விளம்பரப் பொருட்களுக்காக ரூ. 409.4 கோடிகளும் (20.384%); பொதுக் கூட்டங்களுக்காக ரூ. 134.4 கோடிகளும் (6.693%) செலவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரங்களுக்கு அடுத்தபடியாக, போக்குவரத்திற்கு ரூ. 795.414 கோடிகள் செலவிட்டுள்ளனர். இதிலும் குறிப்பாக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தங்கள் கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்களுக்கு தான் அதிகமாக செலவளித்துள்ளனர். மொத்த போக்குவரத்து செலவில் 96.22% நட்சத்திர பிரச்சாரகர்களுக்கும் வெறும் 3.78% மட்டுமே கட்சி தலைவர்களின் போக்குவரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

சமூக ஊடக தளங்கள் மூலம் செய்யப்பட்ட பிரச்சாரத்திற்காக ரூ. 132.0853 கோடிகள் (3.51%) மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் தேர்தலில் சமூக ஊடகங்கள் வழியான பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்கள் முக்கிய இடம் வகித்துள்ள போதும், அதற்காக செலவு செய்யப்படும் தொகை மரபான ஊடகங்களுக்கும் பிரச்சார யுத்திகளுக்கும் செலவு செய்யப்படும் தொகையைவிட சிறியதாகவே இருக்கிறது.
இவ்வாறு, தேர்தல்களுக்காக நிதி பெறுவதிலும் செலவு செய்வதிலும் மற்ற கட்சிகளைவிட பாஜக பல படிகள் முன்னிருக்கிறது. மேலும், தேர்தல் காலங்களில் விளம்பரத்திற்காக குறிப்பாக மரபு வழி ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக அதிகளவில் செலவிடப்படுவதும் இந்த அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.