YouTurn

கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் குற்றப் பின்னணி!

இந்த ஸ்ரீகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

கோடம்பாக்கம் ஸ்ரீ-ன் குற்றப் பின்னணி!

’அகில பாரத இந்து மகாசபை’யின் தலைவர் ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’, 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்ஸோ (POCSO) சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். 


image.png

 

இந்த ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ என்கிற ‘ஸ்ரீகண்டன்’ மீது ஏற்கனவே பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட வழக்குகள் இருக்கிறது. தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்து வந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இந்த ஸ்ரீகண்டன் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


image.png


மேலும், சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்த வழக்கில் இந்த ‘கோடம்பாக்கம் ஸ்ரீ’ கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். 

image.png


இந்த ஸ்ரீகண்டன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. தற்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கை போலீஸார்  விசாரித்து வருகின்றனர். சிறுமி மீதான இந்த பாலியல் வன்கொடுமை கடந்த 2023ஆம் ஆண்டு நடந்துள்ளது. 


’அகில பாரத இந்து மகாசபை’யின் தலைவரான ஸ்ரீகண்டனும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான நிர்மலா என்ற பெண்ணும் உறவில் (Relationship) இருந்துள்ளனர். 2023ஆம் ஆண்டில் ஒருநாள் சிறுமி இந்த உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது தான் சிறுமி ஸ்ரீகண்டனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த வன்கொடுமை நடப்பதற்கு தெரிந்தே அனுமதித்த குற்றத்திற்காக உறவினர் பெண் நிர்மலா இந்த வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக (A2) சேர்க்கப்பட்டுள்ளார். 


image.png


மேற்கூறிய விவரங்களிலிருந்து இந்த ஸ்ரீகண்டன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல், மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இவர் தலைவராக இருக்ககூடிய ’அகில பாரத இந்து மகாசபை’ என்பது ஆர்.எஸ்.எஸ்-க்கு முன்னரே உருவாக்கப்பட்ட இந்துத்துவ அமைப்பாகும். இந்த இந்து மகாசபையில் தலைவராக இருந்த B.S.மூஞ்சே என்பவரால் தான் இன்று ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கும் ’போன்சாலா ராணுவப் பள்ளி’ உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்-க்கு நெருக்கமான இந்து மகாசபையில் இருப்பதால் இந்த ஸ்ரீகண்டன் இயல்பாகவே பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இவ்வாறு அதிகாரத்துடன் நெருக்கமாக இருப்பதனால், அவர் துணிந்து தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார். 


கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய சமயத்தில், மோடியின் நான்காண்டு கால ஆட்சியின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்யும் கூட்டத்தை நடத்தியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேலை அழைத்து வந்து ஆன்மீக விழா நடத்தியுள்ளார். இவையெல்லாம், ஸ்ரீகண்டன் அதிகாரத்திற்கு எத்தனை நெருக்கமாக இருந்தார் என்பதற்கான சான்றுகளாகும். 



மேலும், அவர் ‘இந்துஸ்தான் சாரணர் இயக்கத்தின் ஆணையராக’ இருந்ததாக குறிப்பிடுகிறார். சாரணர் இயக்கம் என்பது மாணவர்கள் இளைஞர்களுக்காக நடத்தப்படும் இயக்கமாகும். ஸ்ரீகண்டன் போன்று தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பது நமது குழந்தைகளின் பாதுகாப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக மாற்றுவதாகவே இருக்கும். 



இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டது மோடி தலைமையிலான பாஜக அரசு. அதேபோல் தான், பெண்கள் ’தெய்வமாக’ ‘சக்தியாக’ மதிக்கிறோம், அவர்களை போற்றுகிறோம் என்று பிரச்சாரம் செய்யும் இந்துத்துவ அமைப்புகள்,  உண்மையில் இதற்கு மாறாக பெண்களிடமும் சிறுமியரிடமும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஸ்ரீகண்டன் போன்றவர்களை தலைமைப் பொறுப்பில் வைத்து அழகு பார்க்கிறது. 



குற்றப் பின்னணி உள்ளவர்களின் கூடாரமே இந்துத்துவ அமைப்புகள் என்று பொதுமக்களால் சொல்லப்படுவதற்கு மேலும் ஒரு சான்றாக இருக்கிறார் இந்த ஸ்ரீகண்டன். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை