YouTurn

மே தினம்! முதலில் கொண்டாடியது யார்? விடுமுறை அறிவித்தது யார்? சட்டம் இயற்றியது யார்?

இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக மே தினம் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை. அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி.

மே தினம்! முதலில் கொண்டாடியது யார்? விடுமுறை அறிவித்தது யார்? சட்டம் இயற்றியது யார்?

மே ஒன்றாம் தேதியன்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை மே தினம் (May Day) என்றும் அழைக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டில் தொழில்துறை வளர்ச்சி ஆரம்பமான கட்டத்தில் தொழிலாளர்கள் மிக அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். ஒரு நாளுக்கு 16 முதல் 18 மணிநேரம் வரை வேலை நேரம் இருந்தது. இதனை எதிர்த்து அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது அமெரிக்க தொழிலாளர்களின் போராட்டமாகும். அவர்கள் வேலை நேரத்தை குறைக்க வேண்டும், சங்கம் வைக்க உரிமை வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர். இந்த போராட்டத்தில் முக்கிய நிகழ்வாக அமைந்தது, சிக்காகோ தொழிலாளர்கள் போராட்டமும் அதனை தொடர்ந்து நடந்த ஹே மார்க்கெட் படுகொலையும் தான். இந்த வரலாற்றுச் சம்பவம் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றதால்,  தொழிலாளர்களின் உரிமையை பறைசாற்றும் விதமாக 'மே நாள்' கொண்டாடப்படுகிறது.


உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் நெதர்லாந்து போன்ற சில நாடுகளில் மே தினத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதில்லை. இந்தியாவிலும் கூட இது தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. அந்தந்த மாநில அரசுகள் தான் இதனை விடுமுறையாக அறிவித்தன.



இந்நிலையில், மே தின உரையின் போது, " மே 1 விடுமுறை என்று கொண்டுவந்தவர் அறிஞர் அண்ணா. அதை சட்டமாக்கியது கலைஞர் கருணாநிதி " என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதை  பொய் என்றும் உழைப்பாளர் தினத்தை தமிழ்நாட்டில் முதலில் கொண்டாடியவர் சிங்காரவேலர் என்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்.


#உழைப்பாளர்தினம் pic.twitter.com/OhDvXLx0Dt

— Duraimurugan (@Saattaidurai) May 1, 2025


1923ஆம் ஆண்டு சிங்காரவேலர் முயற்சியால் இந்தியாவில் முதல்முறையாக மே தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது என்பது உண்மை தான். சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள மெரினா கடற்கரையிலும், திருவான்மியூர் கடற்கரையிலும் இரண்டு இடங்களில் மே தினம் கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரை கூட்டத்தை தலைமையேற்று நடத்திய சிங்காரவேலர்  'லேபர் கிசான் கட்சி' என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிப்பையும் அப்போதே வெளியிட்டார்.


ஆனால் மே தினம் 1957 வரை விடுமுறை தினமாக இருக்கவில்லை. 1957ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தபோது தான் முதன்முதலாக மே தினத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல், 1967ஆம் ஆண்டு ஜோதி பாசு தலைமையிலான மேற்கு வங்க அரசாங்கம் மே தினத்தை ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக அறிவித்தது.



அதே போல் தமிழ்நாட்டில் அண்ணாதுரை தான் 1967-ம் ஆண்டு மே தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். ‘மே 1, 1967 அன்று கோவை சிதம்பரம் பூங்காவில் மே தின விழாவை தமிழக அரசு விழாவாக அண்ணாதுரை நடத்தினார். அந்த விழாவில் அனைத்துக் கட்சிகளின் தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்து அண்ணாதுரை பேசவைத்தார்’ என்று அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருப்பூர் சு.துரைசாமி கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அண்ணா தான் முதலில் மே தின விடுமுறையை அறிவித்தார் என்றும் இந்த பெருமையை கருணாநிதி எடுத்துக் கொள்ளமுடியாது என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை 2014-ல் ‘விகடன்’ இணையதளம் வெளியிட்டிருக்கிறது.



மே தின பூங்காவில் பேசிய ஸ்டாலினும் அதையே தான் பேசியிருக்கிறார். '1967ஆம் ஆண்டு திமுக முதன்முதலாக ஆட்சிக்கு வந்தபோது முதலமைச்சராக இருந்த அண்ணா தான் மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தார். ஆனால், கருணாநிதி ஆட்சியில் தான் மே தினம் விடுமுறையாக சட்டம் இயற்றப்பட்டது' என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

 

இதனை திரித்து மே தின கொண்டாடத்தை முதலில் முன்னெடுத்தது கருணாநிதி தான் என்று ஸ்டாலின் சொன்னதாக சாட்டை துரைமுருகன் தவறான தகவலை பரப்பி வருகிறார்.

 

மே தினத்தை இந்தியாவிற்கே முன்னோடியாக சென்னையில் முதன்முதலாக கொண்டாடியது சிங்காரவேலர் என்பதும், மே தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தது அண்ணாதுரை என்பதும் அதனை சட்டமாக இயற்றியது கருணாநிதி என்பதும் தான் வரலாற்று உண்மை.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை