YouTurn

டெல்லி காற்று மாசுபாடு! மறைக்க முயலும் அரசு!

காற்றின் தரத்தை கண்காணிப்பு நிலையத்தை சுற்றி மட்டுமே தொடர்ந்து தண்ணீர் தெளிப்பது, காற்று மாசுபாடு குறித்து உண்மையான தரவுகளை மோசடி செய்யவே வழிசெய்யும்

டெல்லி காற்று மாசுபாடு! மறைக்க முயலும் அரசு!

இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்று மாசுபாடு என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. தற்போது காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டியுள்ளது. காற்றின் தரக் குறியீடு (AQI) இன்றைய நிலவரப்படி (நவம்பர் 17) சராசரியாக 359 புள்ளிகளாக உள்ளது. இது ’மிக மோசமான’ நிலையைக் குறிக்கும் புள்ளியாகும். 


டெல்லியில் 13 பகுதிகள் அதிகமாக காற்று மாசுபாடு உள்ள பகுதிகளாக (pollution hotspots) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை எதிர்கொள்வதற்காக ‘Graded Response Action Plan’ என்ற செயல்த் திட்டத்தை நடைமுறைப்படுத்தியும், காற்று மாசு குறையவில்லை. 


இதுவொரு புறமிருக்க டெல்லியில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வகையில் குறிப்பிட்ட இடங்களில் காற்று தர கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்காணிப்பு நிலையங்கள் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளில் காற்றின் தரக் குறியீட்டை (AQI) கணக்கிட்டு வெளியிடும் பணியை செய்து வருகின்றன. டெல்லியில் மொத்தம் 48 காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்கள் இருக்கின்றன. இந்நிலையில் காற்று மாசுபாட்டை குறை மதிபீடு செய்யும் வகையில் இந்த கண்காணிப்பு நிலைங்கள் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


image.png


’Newslaundry’ செய்தித்தளம் கடந்த அக்டோபர் மாதமே இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் உள்ளதாக அறிவிக்கப்பட்ட 13 பகுதிகளில் ‘ஜஹாங்கீர்புரி’ என்ற பகுதியும் ஒன்று. இப்பகுதியில் செயல்பட்டு வரும் தொழில்துறை பயிற்சி நிறுவன வளாகத்தில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் நிலையம் ஒன்று உள்ளது. 


பொதுப்பணி துறையின் சார்பில் தண்ணீர் லாரிகள் கொண்டுவரப்பட்டு அந்த கண்காணிக்கும் நிலையத்தை சுற்றி தண்ணீர் தெளிக்கப்படுவதாக ’Newslaundry’ செய்தி குறிப்பிடுகிறது. காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இவ்வாறு தண்ணீர் தெளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தண்ணீர் தெளிக்கப்படுவதால் கண்காணிப்பு நிலையத்தை சுற்றியுள்ள காற்றில் உள்ள தூசுகள், புழுதிகள் குறையும். இதனால் பதிவாகும் காற்றின் தரம் மேம்பட்டிருப்பதாகவே காண்காணிப்பு கருவியில் பதிவாகும். அதாவது மாசு குறைவாக உள்ளதாகவே காட்டும். இதேபோல் டெல்லியில் உள்ள ’நரேலா’ என்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு நிலையத்தை சுற்றியும் தண்ணீர் தெளிக்கப்படுவது குறித்து செய்தி மூலமாக தெரியவருகிறது. 



காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதிகளுக்கு என சில செயல்பாட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. குப்பைகளை அகற்றுதல், சாலையில் உள்ள குழிகளை சரிசெய்தல், இடிந்த கட்டிடங்களின் கழிவுகளை அகற்றுதல், சாலையோரங்கள் குறிப்பிட விதத்தில் தண்ணீர் தெளிப்பதன் மூலமாக தூசுகளையும் புழுதிகளையும் கட்டுப்படுத்துதல் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டன. 


ஆனால், காற்றின் தரக் கண்காணிப்பு நிலையத்தை சுற்றி மட்டுமே தொடர்ந்து தண்ணீர் தெளிப்பது, காற்று மாசுபாடு குறித்து உண்மையான தரவுகளை மோசடி செய்யவே வழிசெய்யும். தொடர்ந்து தண்ணீர் தெளிக்கப்படுபதால், கண்காணிப்பு நிலையத்தை சுற்றியுள்ள காற்றின் மாசுபாடு பெருமளவு குறையும். அப்போது பதிவு செய்யப்படும் காற்றின் தரம் பற்றிய தரவுகள் நிச்சயம் டெல்லியின் உண்மையான நிலையை பிரதிபலிப்பதாக இருக்காது. 


டெல்லியின் மொத்த காற்று மாசுபாட்டில் 40 சதவீதத்திற்கு காரணம் தூசுகளும் புழுதிகளும் தான். இவ்வாறு கண்காணிப்பு நிலையத்தை சுற்று தண்ணீர் தெளிக்கப்படுவது காற்று மாசுபாட்டை செயற்கையாக குறைத்து காட்டுவே செய்யும்.  இதனால்தான், டெல்லி நகரத்தின் காற்று மாசு குறித்த உண்மையான தரவுகள் மோசடி (Manipulate) செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  


காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்கள் குறித்து குற்றச்சாட்டுகளை ஏற்கனவே செய்திகளில் வெளிவந்திருக்கின்றன.  கண்காணிப்பு நிலையங்களில் உள்ள காற்றின் மாதிரிகளை சேரிக்கும் அமைப்பை (pollution sampling inlets) சுற்றி 20 மீட்டர்களுக்கு மரங்களோ சுவர்களோ இருக்கக்கூடாது என்பது வழிகாட்டு நெறிமுறையாக உள்ளது. ஆனால் பெரும்பாலான நிலையங்களில் இது சரியாக கடைபிடிக்காமல் மீறப்பட்டுள்ளது. 


image.png


இந்த கண்காணிப்பு நிலையங்களில், ‘pollution sampling inlets’ என்று சொல்லக்கூடிய காற்றின் மாதிரிகளை சேரிக்கும் அமைப்பு ஒன்று இருக்கும். அதாவது சுற்றுச்சூழலில் உள்ள காற்று (sample) இதன் வழியாக சென்று கண்காணிப்பு இயந்திரத்தால் சோதனை செய்யப்பட்டு, காற்றின் மாசுபாடுகள் குறித்த தரவுகள் பதிவு செய்யப்படும். இதனை சுற்றி மரங்கள் வளர்க்கப்பட்டிருந்தால், இதன் வழியாக செல்லும் காற்றின் மாதிரி  (sample) சுற்றுச்சூழலில் உள்ளதை ஒத்ததாக இருக்காது. இதனால் உண்மையில் சுற்றுச்சூழலில் நிலவும் மாசுபாட்டின் அளவை சரியாக கணிக்கிட முடியாது. இவ்வாறு இந்த காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்கள் அமைந்துள்ள இடங்களே பிரச்சனைக்குரியதாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


image.png


2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி சமயத்தில் டெல்லி நகரத்தில் உள்ள பல காற்றின் தரக் கண்காணிப்பு நிலையங்கள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கண்காணிப்பு நிலையங்களில் சரியான வகையில் பொருத்தப்படாத உணரிகள் (sensors), சரியாக செயல்படாத காட்சிப் பலகைகளிலிருந்து, நிலையங்கள் செயல்படுவதில்  பரவலான அலட்சியம் என பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளது. அதில் முக்கியமாக காற்று மாசுபாடு குறித்து களத்தில் சேரிக்கப்பட்ட தரவுகளுக்கும் அதிகாரப்பூர்வ தரவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுவது முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. 


காற்று தரக் கண்காணிப்பு நிலையங்கள் என்பது காற்றின் தரத்தை தொடர்ச்சியாக கண்டறிந்து மாசுபாடு குறித்த அறிவியல் பூர்வமான புரிதலுக்கு வரவும், அதனை குறைக்கும் வகையில் திட்டங்களை வகுக்கவும்தான் கொண்டுவரப்பட்டது. அதை அரசியல் காரணங்களுகாக செயல்படாமல் செய்வது, காற்று மாசுபாடு குறித்த தரவுகளை மோசடி செய்வது இவையெல்லாம் பிரச்சனையை மறைக்க மட்டுமே பயன்படும், தீர்க்கப் பயன்படாது. இறுதியில் இதற்கான விலையை கொடுக்கப்போவது அப்பாவி டெல்லி நகரவாசிகள் தான்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை