YouTurn

அக்னி நட்சத்திரம் வரலாறும் உருட்டும்! சென்னை வானிலை மையம் அளித்துள்ள விளக்கம் இதோ!

இதுநாள் வரையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் அறிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நம்பிவந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்களின் விளக்கம், அக்னிநட்சத்திரம் தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

அக்னி நட்சத்திரம் வரலாறும் உருட்டும்! சென்னை  வானிலை மையம் அளித்துள்ள விளக்கம் இதோ!

பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் வந்துவிட்டாலே வெயில் வாட்டி வதைக்க துவங்கிவிடும். அதிலும் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் என்றால் கோடை வெயிலின் உச்சத்தைக் காணலாம். மேலும் கோடை காலம் என்றதுமே முதலில் நமக்கு நினைவிற்கு வருவது அக்னி நட்சத்திரம் தான். இது அக்னி நட்சத்திர வெயில், சித்திரை வெயில், கத்தரி வெயில், கோடை வெயில் எனவும் பல பெயர்களில் சொல்லப்படுகிறது.


இந்நிலையில் கடந்த 04-ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது. இது மே 28 வரை நீடிப்பதால், இனி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க அறிவுரை என்று கூறி ஊடகங்கள் பலவும் அக்னி நட்சத்திரம் குறித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதாக வானிலை மையமே அறிவித்துள்ளது என்று கூறி தினமணி உள்ளிட்ட பல ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.


அக்னி நட்சத்திரம் வரலாறும் உருட்டும்: 


சித்திரை மாதம் 21-ஆம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனை "அக்னி நட்சத்திரம் காலம்' என்றும், இந்த வருடம் மே 04 முதல் மே 28 வரை அக்னி நட்சத்திரக் காலம் என்றும் பஞ்சாங்கம் குறிப்பிடுகின்றது. அஸ்வினி முதல் 27 நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்கவில்லை என்றாலும், சித்திரை மாதம், பரணி 3-ஆம் தேதி சூரியன் பிரவேசிக்கும் காலத்தை அக்னி நட்சத்திரக் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது என்பதையும் அறிய முடிகிறது. 


இது தவிர “21 நாட்கள் காட்டுக்குள் அக்னி தேவன் செய்த செயல் தான் அக்னி நட்சத்திரத்திற்கு காரணம்” என்று கூறி ஊடகங்கள் பல கதைகளை செய்தியாக வெளியிட்டுள்ளதையும் காண முடிகிறது.


மேலும் அக்னி நட்சத்திரம் உள்ள நாட்களில் புது வீடு புகுதல், செடி கொடிகளை வெட்டுதல், கிணறு வெட்டுதல், விதை விதைத்தல், வீடு பராமரிப்பு பணிகளைத் தொடங்குதல், நெடுந்தூரப் பயணம் போன்றவற்றை செய்யக்கூடாது என்றும் பல உருட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.


அச்சுறுத்தும் “அக்னி நட்சத்திரம்” - அறிவியல்பூர்வமானது அல்ல!


அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடைக்காலம் தொடங்கிவிட்ட சூழலில், அக்னி நட்சத்திரம் குறித்து ஒவ்வொரு வருடமும் வானிலை மையம் தான் செய்தி வெளியிடுகிறதா என்பது குறித்து வானிலை ஆய்வறிக்கைத் தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்கையில், உண்மையில் “அக்னி நட்சத்திரம்” என்ற வார்த்தை வானிலை ஆய்வறிக்கைகளில் புழக்கத்தில் கூட இல்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.


இந்நிலையில் அக்னி நட்சத்திரம் குறித்து பொதுமக்கள் பதற்றமடைந்து வரும் இந்த சூழலில், "கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம்” என்பது அறிவியல் பூர்வமானது அல்ல. அது ஜோதிடம் மற்றும் பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானது" என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா விளக்கமளித்துள்ளார். மேலும் கத்திரி வெயில் தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடாது. பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை சூரியனின் பயண காலமே அக்னி நட்சத்திரம் எனவும், இது கத்தரி வெயில் எனவும் அழைக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். 


மேலும் தேடியதில், அக்னி நட்சத்திரத்தின் உண்மைத்தன்மைக் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் பாலச்சந்திரன் அளித்துள்ள விளக்கத்தையும் காண முடிந்தது. அதில், "வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை 'அக்னி நட்சத்திரம்' என்கிற பதத்தை நாங்கள் பயன்படுத்துவதில்லை. அது ஜோதிடத்தில் நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்துக் கூறப்படுவது. அதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. 


வானிலை ஆய்வைப் பொறுத்தவரையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் கோடைக்காலம் ஆகும். அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே கோடைக்காலம் தொடங்கி விடுகிறது. வெப்பத்தைப் பொறுத்தவரை சராசரி அளவு என்பது 30 நாட்களுக்கும் சேர்த்து கணக்கிட்டுக் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கத்தை பொதுவான அளவீட்டில் கணக்கிட முடியாது. நிலவியல் அமைப்பைப் பொறுத்து வெப்பத்தின் தாக்கம் இருக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். 


இதன்மூலம், இதுநாள் வரையில் மே மாதத்தில் வரும் அக்னி நட்சத்திரம் நாட்களை வானிலை ஆராய்ச்சியாளர்கள் தான் அறிவிக்கிறார்கள் என்று பொதுமக்கள் நம்பிவந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்களின் விளக்கம், அக்னிநட்சத்திரம் தொடர்பாக பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பதே உண்மை!

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை