மூச்சு முட்ட வைக்கும் 3 மாதம்.. வெறுப்புணர்வில் மிதக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்!
India Hate Lab, 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட 1,318 நேரடி வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருந்தது. இது 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம்.
India Hate Lab, 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற மத சிறுபான்மையினரை இலக்காகக் கொண்ட 1,318 நேரடி வெறுப்புப் பேச்சு நிகழ்வுகளை ஆவணப்படுத்தியிருந்தது. இது 2024-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகம்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளில் 98 சதவீதம் முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது. இந்த ஒட்டுமொத்த வெறுப்புப் பேச்சுச் சம்பவங்களில் 88% பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தலைமையிலான அரசு அமைந்திருக்கும் மாநிலங்களில் நிகழ்ந்துள்ளது.
காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதற்கிணங்க, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (2026-ஆம் ஆண்டு), இந்தியாவில் அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மத ரீதியிலான சிறுபான்மையினர்களையும், பட்டியலின மக்களையும் குறி வைத்து வெறுப்பு பேச்சு சம்பவங்களும், வன்முறை தாக்குதல்களும் அதிகளவில் நடந்துள்ளன.
இந்த கட்டுரையில் சில முக்கிய வெறுப்புச் சம்பவங்களை தொகுத்துள்ளோம். அதன் விவரங்கள் பின்வருமாறு-
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் தேதி, “விராட் இந்து மாநாடு” என்கிற நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை இனப்படுக்கொலை செய்ய பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியாவில் வாழும் சிறுபான்மையினர் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களில், தர்கா மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்டின் முசோரியில், இந்துத்துவா கும்பலொன்று 100 ஆண்டுகளுக்கும் பழமையான சையத் பாபா புல்லேஷாவின் வழிபாட்டுத் தலமான தர்காவினை சேதப்படுத்தியதோடு, தர்காவுக்கு சொந்தமான பொருட்களை திருடியும் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உ.பி-யாக மாறுகிறதா ஒடிசா?
ஒடிசா மாநிலத்தில், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதன் முறையாக ஆட்சி அரியணையில் ஏறியுள்ளது பாஜக.
இதனிடையே, கடந்த ஜூன் 2024 முதல் பிப்ரவரி 2026 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஒடிசாவில் 54 மதக்கலவரச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளார்.
கடந்த 3 மாதங்களில் நிகழ்ந்த சம்பவங்களில் அதிக கவனம் ஈர்த்தது, ஜனவரி 4 ஆம் தேதி ஒடிசாவின் தேன்கனால் மாவட்டத்தில், மதமாற்றம் செய்வதாக கூறி கிறிஸ்தவ போதகரான பிபின் பிஹாரி நாயக்கைத் தாக்கி அவருக்கு காலணிகளால் ஆன மாலையை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்பு கொண்ட ஒரு குழு. அந்த போதகரை மாட்டுச் சாணத்தை உண்ணுமாறும், “ஜெய் ஸ்ரீ ராம்” என கோஷமிடுமாறும் கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
இச்சம்பவத்தினை போன்று, ஒடிசா மாநிலம் நபரங்கபூர் மாவட்டம், கபேனா கிராமத்தில் ஒரு கும்பலொன்று தேவாலயத்திற்குள் நுழைந்து, கிறிஸ்தவ பழங்குடியினரை பிரார்த்தனை செய்யவிடாமல் தடுத்ததோடு, கிறிஸ்தவ மத நம்பிக்கையினை கைவிடுமாறும் எச்சரித்துள்ளனர்.
மத வெறுப்பும்.. தனிநபர் உணர்வுகளும்:
ஒருப்புறம் வலதுசாரி அமைப்புகள் குழுவாக இணைந்து சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபடும் நிலையில், தனிநபர்களும் வெறுப்புணர்வில் குற்றச் செயலில் ஈடுபட்ட சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்தேறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், உத்தரப்பிரதேசத்தின் புடான் பகுதியில் தனது ஸ்கூட்டருக்கு வழிவிடவில்லை என்று கூறி, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நபர்களை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய காணொளி இணையத்தில் பரவியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, அம்மாநில காங்கிரஸ் கட்சியும் தங்களது சமூக வலைத்தளத்தில், “உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2014 முதல் சிறுபான்மையினருக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரித்து வருகிறது” என குற்றம் சாட்டியது.
கடந்த மார்ச் மாதம், பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் மதரீதியிலான உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய பெண்மணியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அப்துல் சலாம் என்கிற 65 வயதான முதியவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுப்போன்ற தாக்குதல் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் நிலவும் மதவெறுப்புணர்வினை களைய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதை தான் காட்டுகிறது.
ரமலான் பண்டிகையும்.. தாக்குதல் சம்பவங்களும்:
சமீபத்தில் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு இஸ்லாம் மதத்தினை பின்பற்றுபவர்கள் நோன்பினை மேற்கொண்டிருந்தனர். இந்த நோன்புக் காலத்தில், விரும்பத்தகாத வகையில் பல்வேறு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. உதாரணமாக, புனேவிலுள்ள அஸ்கர்வாடியில் ரமலான் நோன்பை முடிப்பதற்காக இஸ்லாம் மதத்தை சேர்ந்த 14 நபர்கள் ஒன்று கூடியிருந்தனர். இவர்களை 100-க்கும் மேற்பட்ட நபர்கள் சூழ்ந்துக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி, அந்த இடத்திலிருந்து விரட்டியடித்தனர்.
மத்தியப் பிரதேசத்தின் போபாலில், ஆர்.டி.நினைவு கல்லூரியில் நடைப்பெற்ற இஃப்தார் விருந்துக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தல் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைப் போல், உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளிப் பகுதியில் தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் மாணவர் காலித் பிரதான் (காலித் மேவதி) என்பவரை போலீசார் கைது செய்த சம்பவங்களும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நதி என்பது இயற்கையின் கொடை. அது அனைவருக்கும் பொதுவானது என கருதப்படும் நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கங்கை நதியில் படகில் பயணம் மேற்கொண்டு இஃப்தார் விருந்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பேசுப்பொருளாகியது. குற்றச்சாட்டில் விருந்தில் ஈடுபட்ட நபர்கள், இறைச்சியை சாப்பிட்டுவிட்டு அதனை நதியில் வீசினார்கள் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களை எல்லாம், ஓரம் தள்ளும் வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு மாநிலத்தின் முதல்வரே தொடர்ச்சியாக வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் வேறு யாருமில்லை, அசாம் மாநிலத்தின் முதல்வர், ஹிமந்தா பிஸ்வா சர்மா தான்.
அசாமில் வாழும் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை 'மியா' என்று குறிப்பிட்டு, அவர்கள் மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என வெளிப்படையாக பேசினார். இஸ்லாம் மதத்தினரை தவறாகச் சித்தரிக்கும் வகையில் ஏஐ வீடியோக்களையும் பதிவிட்டு சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை உண்டாக்கினார்.
126 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 9 ஆம் சட்டமன்றத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், எதிர்கட்சிகள் பாஜகவின் வெறுப்புணர்வினை மையப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்திலும் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜகவினர் கையிலெடுத்துள்ளது சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sources:
உத்தரப்பிரதேசம்- Virat Hindu Conference
உத்தரகாண்ட் - முசோரி - தர்கா தாக்குதல்
கிறிஸ்தவ போதகர் மீதான தாக்குதல்
Elderly man beaten to death for opposing Islamophobic remark in Bihar