YouTurn

மருந்தா? விஷமா? குழந்தைகளின் உயிர் குடிக்கும் மருந்துகள்! பின்னணி என்ன?

மருந்து தயாரிப்பு குறித்து இந்தியா முழுவதுமே சரியான கட்டுபாடுகளும் கண்காணிப்புகளும் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.

மருந்தா? விஷமா? குழந்தைகளின் உயிர் குடிக்கும் மருந்துகள்! பின்னணி என்ன?

சமீபத்தில் ‘Coldrif’ என்ற பெயரிலான இருமல் மருந்தை சாப்பிட்டு மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 22 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாகிவுள்ளது. குழந்தைகளின் மரணத்துக்கு காரணமான இந்த இருமல் மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘Sresan Pharmaceuticals’ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாகும். 



இந்த குழந்தைகள் இறப்பு வெளிச்சத்திற்கும் வந்ததும் உடனடியாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை சார்பில் ‘Sresan Pharmaceuticals’ நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ‘Coldrif’ இருமல் மருந்தை ஆய்வு செய்ததில், 'டை எத்திலீன் கிளைகால் (‘diethylene glycol (DEG))’ என்ற விஷத்தன்மை வாய்ந்த வேதியல் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  0.1 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கவேண்டிய இந்த 'DEG' என்ற வேதியல் கூறு 'Coldrif’ இருமல் மருந்தில் 48.6 சதவீதம் கலக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 500 மடங்கு அதிகமானதாகும். 


இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பது முதல் முறையல்ல. கடந்த 2022ஆம் ஆண்டு ஹரியானாவில் இயங்கிவரும் ’Maiden Pharmaceuticals’ என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தில் இதேபோல் ‘டை எத்திலீன் கிளைகால் (DEG)’ கலந்திருந்ததன் காரணமாக மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா என்ற நாட்டில் 70 குழைந்தைகள் வரை உயிரிழந்தனர். உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் இறந்தனர். இதேபோல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு இருமல் மருந்தில் ‘டை எத்திலீன் கிளைகால் (DEG)’ கலந்திருந்ததன் காரணமாக 2020ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 17 குழந்தைகள் உயிரிழந்தனர்

image.png


இவ்வாறு இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்தில் ‘diethylene glycol (DEG)’ என்ற விஷத்தன்மை வாய்ந்த வேதியல் பொருள் கலக்கப்படுவதும் அதனால் குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழப்பதும் தொடர் கதையாக உள்ளது. 


‘Coldrif’ இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய பிரதேச அரசு 3 அதிகாரிகளையும், தமிழ்நாடு அரசு 2 அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால், வெறுமனே இந்த சில அதிகாரிகளை மட்டுமே கைகாட்டி விட்டு இந்த பிரச்சினையை முடித்துக்கொள்ள முடியுமா என்பது தான் கேள்வி! 


image.png


இந்த ‘Coldrif’ இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழப்பது தெரிய வந்ததும்,  தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறை ‘Sresan Pharmaceuticals’ நிறுவனத்தில் நடத்திய ஆய்வில் அந்த நிறுவனம் பல விதிமீறல்கள் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல! 350க்கும் மேற்பட்ட விதிமீறல்களை செய்துள்ளது அந்த நிறுவனம். 



அடிப்படை வசதிகள் இல்லாதது, தகுதிவாய்ந்த ஊழியர்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமீறல்கள் இருந்தும் இந்த நிறுவனம் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் எவ்வித கண்காணிப்பிற்கும் உள்ளாகமல் கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 


இந்த நிறுவனத்தில் மருந்துகள் ஆரோக்கியமற்ற சூழலில் தயாரிக்கப்பட்டிருகிறது. தயாரிக்கப்படும் மருந்துகளை அறையிலுள்ள காற்றால் தூய்மை குறைபாடு (Air contamination) ஏற்படாமல் இருக்கவும், மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்கவும் ஏற்ற சரியான உள்கட்டமைப்புகள் இந்த நிறுவனத்தில் இல்லை. தயாரிப்பு கருவிகள் மற்றும் இயந்திரங்கள் துருப்பிடித்தும் சேதமடைந்தும் இருந்திருக்கின்றன. இதனால் மருந்துகள் மாசுபடும் ஆபாயம் இருந்திருக்கிறது. ஆனால் தயாரிக்கப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய (Quality Assurance) கருவிகளும், தகுதி வாய்ந்த ஊழியரும் இருக்கவில்லை. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதி, பூச்சிகளை கட்டுபடுத்துவது என எந்த வசதியும் இல்லாமலே இந்த நிறுவனம் செயல்பட்டு வந்திருக்கிறது. 


image.png


மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களை சட்டவிரோதமான முறையில் கொள்முதல் செய்திருக்கிறது இந்த நிறுவனம். மேலும் மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்களும் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் எவ்வித வடிகட்டும் அமைப்பும் இல்லாமல் பிளாஸ்டிக் பைப்புகள் வழியாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்து தயாரிப்பின் போது ஏற்படும் கழிவுகளை நேரடியாக பொதுச் சாக்கடையில் வெளியேற்றிருக்கிறார்கள் என்பதையெல்லாம் இந்த ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள் அதிகாரிகள். 


ஆனால் இவ்வளவு குறைபாடுகள் உள்ள ஒரு நிறுவனத்தை எவ்வித கண்காணிப்பும் இல்லாமல் 14 ஆண்டுகள் இயங்க அனுமதித்திருக்கிறார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளால் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் உயிரிழப்புகள் நடப்பது, இந்தியாவின் மருந்து தயாரிப்பு துறையில் அதன் நிர்வாக அமைப்புகளில் புறையோடிப் போயுள்ள குறைகளையும் ஊழலையும் போதாமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருக்கிறது. 


இந்த விவகாரத்தை பொறுத்தவரை அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாடு, ஹரியானா, மத்திய பிரதேசம் என்று மாநிலங்களை குறை கூறாமல், மருந்து தயாரிப்பு குறித்து இந்தியா முழுவதுமே சரியான கட்டுபாடுகளும் கண்காணிப்புகளும் இல்லை என்ற அடிப்படை தவறை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த அடிப்படை நிர்வாக கட்டமைப்புகளில் உள்ள குறைபாட்டை சரி செய்வதன் வாயிலாக தான் எதிர்காலத்தில் இவ்வாறான குழந்தைகள் இறப்பை தடுக்கமுடியும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை