யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திருப்பெரும்புதூரில் பள்ளம் நிறைந்த சாலையில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்திய "எமராஜா" எனப்பரவும் கர்நாடக வீடியோ..!!
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
திருப்பெரும்புதூரின் சாலையின் நிலை என்று கூறி 0:45 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளப்பக்கங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவி வரும் பதிவில், சிலர் எமதர்மன், சித்திரகுப்தன் மற்றும் பேய் போன்ற வேடம், உடை அணிந்து சாலைகளில் உள்ள பள்ளங்களை அளவெடுப்பதை பார்க்கமுடிகிறது. அதில் திருப்பெரும்புதூர் எனக் குறிப்பிட்டு சிலர் பரப்பி வருகின்றனர்.
திருப்பெரும்பூதூரின் சாலைகள் Long Jump போட்டிக்குத் தயார்.
...#திருப்பெரும்பூதூர் #Sriperumbudur pic.twitter.com/HoScWpbstZ
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவை “Google Reverse Image Search” மூலம் ஆய்வுசெய்து பார்த்ததில், இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறியமுடிந்தது.
இந்த வீடியோவில் இருப்பவர்கள் கன்னட மொழியில் பேசுவதை நம்மால் கேட்கமுடிகிறது. இந்த வீடியோ குறித்து தேடியதில், NDTV அவர்களது எக்ஸ் பக்கத்தில் கடந்த மாதம் ஆகஸ்ட் 28ம் தேதி 2024 அன்று பரவக்கூடிய இதே வீடியோவை பதிவு செய்திருப்பதை கவனித்தோம்.
#Video: "Yamaraja" Conducts Long Jump Competition On Pothole-Ridden Road https://t.co/9ts1KmkV4E pic.twitter.com/eGaXeBIKZh
அப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்ததில் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருப்பதை அறியமுடிந்தது. அதில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் குண்டும் குழியுமான சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், அதில் சாலைகளில் காணப்படும் பள்ளங்களால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது. NDTV யூடியூப் பக்கத்தில் ‘’பள்ளம் நிறைந்த சாலையில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்திய "எமராஜா" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 28ம் தேதி அன்று இதன் முழு வீடியோவை பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது.
இவற்றிலிருந்து இவை திருப்பெரும்புதூரில் நடந்தது இல்லை என்பதையும் இவை கர்நாடக மாநிலத்தில் நடந்தது என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலின் வழியாக, திருப்பெரும்புதூரின் சாலையில் உள்ள பள்ளங்களில் நீளம் தாண்டி அளவெடுக்கும் காட்சி எனப் பரவும் தகவல் தவறானது. இது கர்நாடகா மாநிலம் உடுப்பியில் விழிப்புணர்வு நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெளிவாகத் தெரிகிறது.
