யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இறப்பு, அரசுப் பணி, வருமானம், நிலம் வாங்கியது போன்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
இன்றைய விடியல் செய்தி.... 1.3 லட்சம் குடும்பத் தலைவிகள் ₹1000 ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தில் இருந்து நீக்கம்!

விரிவான விளக்கம்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொங்கியது. இத்திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.
#AiadmkThiruvalluraWest
1.3 லட்சம் குடும்பத் தலைவிகள்
₹1000 ரூபாய் மகளிர் உரிமைத் திட்டத்தில் இருந்து நீக்கம்!@EPSTamilNadu pic.twitter.com/SSAV1QKdI7
இத்திட்டத்திலிருந்து 1.3 லட்சம் பயனாளிகள் நீக்கப்பட்டு இருப்பதாகச் செய்தித் தாளில் வெளியான ஒரு செய்தியின் புகைப்படத்தை அதிமுகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். அதனுடன் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் ”தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்” எனக் கூறியிருந்ததும் சேர்த்துப் பரப்பப்படுகிறது.
1.3 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்...!!! pic.twitter.com/cOgCuJDq77
உண்மை என்ன?
பரவக் கூடிய செய்தியின் தலைப்பைக் கொண்டு இணையத்தில் தேடியதில், அது கடந்த 9ம் தேதி ’நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஊடகத்தில் வெளியான செய்தி என்பதை அறிய முடிந்தது. மேலும் பரவக் கூடிய செய்தியின் கடைசியில் ‘P5’ என்றுள்ளது. அதாவது, இதன் தொடர்ச்சி 5ம் பக்கத்தில் உள்ளது என்பதுதான் அதன் பொருள். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் கிடைத்த முழுமையான செய்தியில் நீக்கப்பட்டதற்கான காரணமும் சொல்லப்பட்டுள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் ‘குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்’ என்றுதான் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், 2023, செப்டம்பரில் தகுதியான மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றதும் எதிர்க் கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கின.
அந்த தகுதிகள் என்னென்ன என்பது அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
இதேபோல், இத்திட்டத்தில் பயனாளிகளாக இணைய தகுதி இல்லாதவர்கள் என்றும் சில விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர், தொழில் வரி செலுத்துவோர், அரசு ஊழியர், பொதுத்துறை ஊழியர், வங்கி ஊழியர் மற்றும் அவற்றின் ஓய்வூதியம் பெறுபவர், சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள் போன்றோர் பயனாளிகளாக முடியாது. இதிலிருந்து பொருளாதார ரீதியில் வரையறுத்து அதற்கு ஏற்ப மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது.
அடுத்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைக்கு வருவோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சுமார் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயனாளிகளாக உள்ளனர். பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அறிவிப்புகளும் அவ்வப்போது அரசு தரப்பில் வெளியிடப்படுகிறது.

மொத்தம் இருக்கக் கூடிய 1 கோடியே 16 லட்ச பயனாளிகளில் 1.09% அதாவது 1.27 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். மேலும் இத்திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தைக் காட்டிலும் அதிக வருமானம் ஈட்டுதல், அரசுப் பணி, நிலம் வாங்கியது போன்ற காரணங்களுக்காகவும் சிலர் நீக்கப்பட்டுள்ளனர் என அதிகாரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுரை முழுவதையும் பதிவிடாமல் ஒரு பகுதியை மட்டும் பதிவிட்டு தவறான தகவல் பரப்புகின்றனர். 1.27 லட்சம் பேர் நீக்கப்பட இறப்பு, அரசுப் பணி, வருமானம், நிலம் வாங்கியது எனப் பல காரணங்கள் உள்ளன.
முடிவு:
மகளிர் உரிமை திட்டத்தில் 1.30 லட்ச பயனாளிகள் நீக்கப்பட்டதாக ஒரு செய்தி பரப்பப்படுகிறது. இறப்பு, அரசுப் பணி, வருமானம், நிலம் வாங்கியது போன்ற காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள்தான் அதிகம் என அதிகாரி தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதியை மட்டும் தவறாகப் பரப்புகின்றனர்.