யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் எனப் பரவும் இந்த வீடியோ, கடந்த 2021 ஜனவரியில் நடைபெற்ற சம்பவத்தோடு தொடர்புடையது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்தை தற்போது நடைபெற்ற சமபவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற ஸ்டாலின் ஏவல் துறை....... வாயை பொத்தி இழுத்து செல்ல யார் உத்தரவு போட்டது...
#திமுக_கேடு_தரும்

விரிவான விளக்கம்
கிராமசபை கூட்டத்தில் திமுகவை எதிர்த்து கேள்வி எழுப்பிய பெண்ணை, வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் என்று கூறி வீடியோ ஒன்று பரவி வருகிறது.
ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய அப்பாவி பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற ஸ்டாலின் ஏவல் துறை.......
வாயை பொத்தி இழுத்து செல்ல யார் உத்தரவு போட்டது...#திமுக_கேடு_தரும் pic.twitter.com/jdpSnitrQ3
உண்மை என்ன?
பரவி வரும் இந்த வீடியோ கூகுள் லென்ஸ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது ஜனவரி 2, 2021 அன்று நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்தில் ”திமுக கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பி சலசலப்பை ஏற்படுத்திய பெண்” என்ற தலைப்பில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் கோவையில் திமுக சார்பில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி, திமுக தொப்பி அணிந்தபடி பங்கேற்று கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது திமுகவினர் ஒருசிலர் அப்பெண்ணின் மீதும், அவருடன் வந்த ஆண் மீதும் தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்தில் இருந்த போலிசார் இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதையடுத்து அந்த பெண் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்பதும், அதிமுக-வின் மாவட்ட மகளிர் பாசறை அணியின் துணை தலைவர் எனவும் தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து ”மு.க.ஸ்டாலின் நடத்திய திமுக மக்கள் கிராம சபை கூட்டம்: அதிமுக பெண் தகராறு - கோவை நிகழ்வில் என்ன நடந்தது?” என்ற தலைப்பில் BBC தமிழ் ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. அதில் திமுக சார்பில் கோவையில் நடந்த மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண், அமைச்சர் வேலுமணிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பேசியபோது தகராறு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கூட்டத்திலிருந்து பெண்ணை வெளியேற்றிய திமுகவினர் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் திமுக கூட்டத்தில் அதிமுக பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அதிமுகவினருக்கு எதிராக திமுகவைச் சேர்ந்தவர்களும் அதே பகுதியில் கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ”AIADMK woman manhandled by DMK cadre for questioning Stalin during grama sabha meet” என்ற தலைப்பில் News Minute ஊடகத்தில் ஜனவரி 2,2021 அன்று வெளியான செய்தியை பார்க்கமுடிந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில், அதிமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி கேள்வி எழுப்பியதாகவும், இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும், அதிமுகவைச் சேர்ந்த அந்த பெண்ணை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட்டத்திற்கு அனுப்பியதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் Republic World, தினத்தந்தி, Times Of India போன்ற ஊடகங்களிலும் அப்போதே இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது.
முடிவு:
நம் தேடலில், திமுக ஆட்சியில் கிராமசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணை வாயை பொத்தி அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர் எனப் பரவும் இந்த வீடியோ, கடந்த 2021 ஜனவரியில் நடைபெற்ற சம்பவத்தோடு தொடர்புடையது. அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்தை தற்போது நடைபெற்ற சமபவம் என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர்.